எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....?


தாழம் பூவோடும்

தாமரைத் தட்டோடும்

நாகதீபம் வரை

வந்து போகிறீர்கள்

வெள்ளை உடுப்புடுத்தி

நீங்கள் வரும்போது

வெள்ளைக் கொடியோடு

வெண் புறாக்கள் போன கதை

வந்து வந்து போகுது.

.


எதோ கொண்டு வருகிறீர்கள்

கொடுத்ததும் பார்க்கிறீர்கள்.

இனி இவர்கள்

மறந்து போவார்கள்

மாண்ட தமிழர்களை

மறைத்த உறவுகளை.

.


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ..... ? - இது

கொன்ற தினத்தை

கொண்டாடிய நாள் அல்லவா!

.


மேனி கருகி

மேடாய் தெரிந்த நாள்


கூட்டாய் கொன்று குவித்ததை

கூகிளில் பார்த்து

கூக்குரல் இட்ட நாள்.


குழிவெட்டி எம் குஞ்சுகளை

குடும்பத்தோடு

புதைத்த நாள்.


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ ....?


சரண் புகுந்த

தாய் குலத்தை

சட்டை அவிழ்த்து

பங்கு போட்ட நாள்.


சங்கர் மேனனும்

சங்கர் தயாள் சர்மாவும் - சேர்ந்து

செய்து முடித்த நாள்


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ ....?


ஐநா வரும் என்று

அதன் பொய்..நா... பார்த்து

பொசுங்கிப் போன நாள்


அமெரிக்க நரிகளை நம்பி

நடந்து போகையில்

நடு நெஞ்சில் சூடு

வாங்கிய நாள்


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ....?


வெள்ளை கொடியோடு

போனவனை

வெட்டிப் போட்டு

வெற்றி என்று சொன்ன நாள்.


வெம்பி நின்ற சிறுசுகளை

கை கால் கட்டி

பின்னுக்கு நின்று

பிடரியில் சுட்ட நாள்


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ .... ?


புனர் வாழ்வு என

புது வான் இல் ஏற்றி - இன்றும்

புதிராய் இருக்கும்

காணாமல் போனோரை

கைது செய்த நாள்.


கண்ணை கவரும்

நம் கன்னியரை

கவுன்சிலிங் என்று

கட்டிப் பிடித்த நாள்


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ ....?


அகதி என்று

அனாதரவாக

அரை துண்டோடு

முட் கம்பிகளுக்குள்

முடங்கிக் கிடந்த நாள்


இறந்த எம் பிணங்களை

இழுத்துச் சென்று

இரசித்து, இச்சை தீர்த்தது

இன்புற்ற நாள்.


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ .... ?


கெடுத்து, கெடு தீர்த்து

மீண்டும் உடுத்தி

உலகுக்கு காட்டி

மருந்து போட்ட நாள்


மாசக் கர்ப்பிணிகளை

மழலை குஞ்சுகளை

பல குழல் பீரங்கிகள்

பதம் பார்த்த நாள்


எப்படி மறப்பது

இந்த மே 18 ஐ .... ?


வெற்று முலையில்

பால் கொடுத்து

வெம்பிய தாயையும்

முலை வற்றி மூச்சிழந்த

குழந்தையையும்

முள்ளி வாய்க்காலில்

பார்த்த நாள்.

.


ஒட்டுக் குழுக்களோடு

ஒன்பது நாடுகள் கூடி

ஒழித்திருந்து

காட்டிக் கொடுத்ததை

ஓட ஓட அடித்ததை

எப்படி மறக்க முடியும்

.


அந்த நந்தி கடலும்

முள்ளி வாய்க்காலும்

மூன்று முறை பிறந்தாலும்

முன்னூறு ஆண்டுகள் கடந்தாலும்

மறக்க முடியுமா என்ன ?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.