தமிழின அழிப்பு நாள் 2023 -பிறேமன் (Bremen)

 தமிழின அழிப்பு நினைவு நாள் 2023 யேர்மனியில் நான்கு இடங்களில் இம்முறை நினைவு கூரப்பட்டது. அந்த வகையில் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு, பிறேமன் (Bremen) நகர மத்தியிலும் நினைவு கூரப்பட்டது. 1506ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்களால் அடிமை கொள்ளப்பட்ட எமது தமிழீழ மண் 1948ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா சிங்கள பயங்கரவாத அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட எமது மக்கள் கொல்லப்பட்டும், இலட்சக்கணக்காணவர்கள் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலந் தொட்டு ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் அதிஉன்னத தியாகங்களினூடாக தமது இன்னுயிர்களை எமது தேச விடுவிற்காய் ஈகம் தந்துள்ளார்கள்.

மாவீரர்களையும் தாயகத்தில் மடிந்த மக்களையும் தங்கள் மனங்களில் சுமந்தபடி 18-05-2023 அன்று பிறேமன் (Bremen) நகர மத்தியின் திடலில் எம் உறவுகள் உணர்வோடு ஒன்று கூடி நிற்க, முதலில் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கம்பேர்க் (Hamburg) மாநிலப் பொறுப்பாளர் திரு.யோகேந்திரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மாநிலப் பொறுப்பாளர்களுள் ஒருவராகிய திரு.துரைஐயா அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து திடலிலே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த துயிலுமில்ல நினைவிடத்தில் மாவீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு பரந்தன் நேரடிச்சமரில் வீரச்சாவைத் தளுவிக்கொண்ட உத்தமன் என்றழைக்கப்படும் சிவநாதன் வடிவேலு அவர்களின் சகோதரி திருமதி.இராசலட்சுமி ஜெயமனோகரன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். அதனையடுத்து பொதுமக்களின் நினைவுத்தூபிக்கு, மணலாறு நேரடிச் சமரில் வீரச்சாவைத் தளுவிக்கொண்ட கப்டன்.இசைத்ததம்பி என்றழைக்கப்படும் கந்தசாமி கிருபாகரன் அவர்களது சகோதரி தர்சினி சியாமளன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடர் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத்தூபிக்கு யேர்மன் தமிழ்க் கல்விக் கழக வடமாநில செயற்பாட்டாளர்களுள் ஒருவராகிய திருமதி.சுபத்திரா யோகேந்திரம் அவர்கள் மலர் மாலை அணிவித்தார். பொதுமக்கள் நினைவுத்தூபிக்கு யேர்மன் தமிழ்க் கல்விக்கழக மாநில செயற்பாட்டாளர்களுள் ஒருவராகிய திருமதி.அன்னலட்சுமி இராமலிங்கம் அவர்கள் பூமாலை அணிவித்தார். தமிழின அழிப்பு நினைவு நாளிலே தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் சுடர் மற்றும் மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அகவணக்கத்தோடு நினைவு வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. கவிவணக்கம், இசைவணக்கம் , யேர்மன் மொழியிலான நினைவுரைகளோடு சிறப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யேர்மன் மற்றும் தமிழ் மொழியிலான விளக்கங்களோடு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழ் இளையோர் அமைப்பை சார்ந்த இளையவர்களால் தமிழின அழிப்பு பற்றிய விளக்கப் பிரசுரங்கள் அங்கு வருகை தந்திருந்த ஏராளமான வேற்றின மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்புரையோடு, தமிழ் இளையோர் அமைப்பினர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழ தேசியக் கொடி இறக்கி வைக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்னும் தாரக மந்திரத்தோடும், தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் உணர்வோடு நிறைவு பெற்றன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.