இனி இதுதான் நிலை!!

 


“நாகவிகரையில் பூசை நடந்ததாம்

ரூபவாகினி சொல்லிற்று..

இனி என்ன ?


“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் !

சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும்

நகரப் பகுதியில் அறிமுகமாகும் !


புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட

ரத்வத்த வரக்கூடும் !


சிங்கள மகாவித்தியாலயம்

திரும்ப எழுமா ? எழலாம்.

வெசாக் கால வெளிச்சக் கூட்டை

எங்கே கட்டுவார் ?

ஏன் இடமாயில்லை ?


வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்,

முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம்,

பெருமாள் கோவில் தேரிலும்

பிள்ளையார் கோவில்

மதிலிலும் கட்டலாம் !


எவர் போய் ஏனென்று கேட்பீர்?

முற்ற வெளியில் “தினகரன் விழாவும்”


காசிப்பிள்ளை அரங்கில்

களியாட்ட விழாவும் நடைபெறலாம்!

நாகவிகாரையிலிருந்து

நயினாதீவுக்கு


பாதயத்திரை போகும் !

பிரித் ஓதும் சத்தம்

செம்மணி தாண்டிவந்து

காதில் விழும் !


ஆரியகுளத்து

தாமரைப் பூவிற்கு

அடித்தது யோகம் !

பீக்குளாத்து பூக்களும்

பூசைக்கு போகும் !


நல்லூர் மணி துருப்பிடித்துப்போக

நாகவிகாரை மணியசையும் !

ஒரு மெழுகுவர்த்திக்காக

புனித யாகப்பர் காத்துக்கிடக்க


ஆரியகுளத்தில்

ஆயிரம் விளக்குகள் சுடரும் !

எம்மினத்தின்

இளைய தலைமுறையே,

கண் திறக்காது கிடகின்றாய்.


பகைவன் உன் வேரையும்

விழுதையும் வெட்டி

மொட்டை மரமாக்கி விட்டான் !


– தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா –

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.