எம் இனத்தின் ஆணி வேர்கள்!!

 


இராணுவம் அருகில் வந்துவிட்டான்

சோலைநிலா நீ என்னோடு வருகிறாயா.?என்று கேட்டேன். 


இல்லை நீ போ

நான் பார்த்து வருகிறேன் என்றாள் 


வரியுடையோடு நிற்கிறாய்

யாரிடமாவது மாற்றுடை 

வாங்கி தந்துவிட்டுப் போகட்டுமா? என்று கேட்டேன். 


இல்லை 

இதுதானே எங்களின் அடையாளம் எனக்கூறி 

சிரித்தபடி கையசைத்து விடை தந்தவளை 


இன்று 

தினந்தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்

காணாமல் போனோர் பட்டியலில் 


ஆம்

அவர்கள்

களங்களில் விழுப்புண்கள் தாங்கியபோதும்

தாய்  மண்ணை விட்டுவர விருப்பின்றி

வீதியோரத்து வாகனங்களோடு

சாய்ந்திருந்தவர்கள் 


அவர்களுக்கென்று ஒரு 

காதல் இருந்தது

அது தாய் மண்ணின் மீதிருந்தது 


அவர்கள் வரி உடை தரித்து

மிடுக்கோடுவரும் 

பேரழகை காண்பதற்கென்றே

எப்போதும் 

ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது 


தாம் நேசித்த மக்களின் 

மரணத்தை விரும்பாத புனிதர்கள் அவர்கள்

இனத்தின் விடிவிற்காக 

தம்முயிரை எக்கணமும் கொடுக்கத் துணிந்தவர்கள் 


சொப்பின் உணவருந்தி

மழை நீரை ஏந்திக் குடித்த காலங்களிலும்

சிட்டாகப் பறந்து மகிழ்ந்த

எம் இனத்தின் ஆணி வேர்கள்


இன்று உம்நினைவில்

உறைந்து கிடக்கின்றது

எங்கள் உதிரங்கள்

இவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்

உங்களை மறந்துதான் நாங்கள் இருப்போமா? 


ஐயோ!

நாம் என்ன செய்வோம்

கைதுகளின் பின்னர்

சின்னா பின்னமாக்கப்பட்டு

பெருவதைகளின் பின்னர் 

காணாமல் ஆக்கப்பட்டீரே 


நீங்கள்

மண்ணோடு சாய்க்கப்பட்டாலும்

எங்களது கருவறைகள் 

மீண்டும்

உம்மை பிரசவித்திட

ஆசையோடு காத்திருக்கின்றன 


நெருப்பாற்றில் குளித்த உத்தமரே

உங்கள் நினைவுகளில் 

தத்தளித்து தவிக்கின்றோம்

உங்களை காப்பாற்ற மறந்த

பாவியர் எம்மை மன்னிப்பீரா...?


-பிரபா அன்பு-

08.07.2023





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.