தோழிக்கு ஒரு மடல்!!

 


நெய்தல் நிலத் தோழிக்கு

நேசமுடன் ஒரு மடல்...
நலமே இருக்கிறாயா
நறுமுகையே நீயும்...


கடல்வழி சென்ற என்னவன்,
கரை வரவில்லையடி...
ஆலமரத்து ஊஞ்சலும்
அவரைத்தான் கேட்குதடி...

சொப்பனங்களில்.எல்லாம்
சுந்தரனின்.உருவம்தான்,
மருதாணி விரல்கள்
மீசை நீவ ஏங்குதடி....

பாவி நெஞ்சம் துடிக்குதடி,
பலமிழந்து  தவிக்குதடி..
மன்னவன் வரவு தேடி
மனத்தளிர்கள் வாடுதடி...

'வரும்வரை வைத்திரு' என்று
வியர்வையோடு ஆடை தந்தான்.
காய்ந்து போன ஆடை இப்போ
கருக்காகி கீறுதடி...

'கடலாடும்  என்னவனைக்
கண்டனரோ '
கேள் தோழி...

பசியில்லை..
தூக்கமில்லை..
அன்பூக்களை அள்ளித்தெளிக்க
அருகிலே அவனுமில்லை...

பாலையில் ஒதுங்கிய
பைத்தியக்காரி போல
பேதை உள்ளமோ
பேதலிச்சுப் போச்சுதடி...

ஊனுறக்கம் போயிற்று
உடல் சருகாய் ஆயிற்று
காலன் கவருமுன்னே
கரிகாலன் வருவானோ....?

என் அருமைத் தோழியே
உன்னிடம் ஒரு விண்ணப்பம்..

ஆவி பிரிந்து
அவனி கடந்து போனாலும்
விழி மூட விட்டுவிடாதே
என் விழி மூட விட்டுவிடாதே...

அவன் விரல் தந்திகளால்
என் விழி வீணையை மீட்டட்டும்..
சுகமாய் துயில்  கொள்வேன்
சொர்க்கத்தில் நானுமடி....

என் உயிர்த்துணிக்கைகள்
அவருக்காகவே  துடித்ததென்று
பிரியமானவளே
அவரிடம் சொல்....கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.