ஈரத் தீ (பாகம் 6) - கோபிகை!!

 


கூவிச்செல்லும் அம்பியூலன்ஸ் ஒலியானது வீதியை நிறைந்து ஒலித்துக்கொண்டிருக்க, அந்த அரசாங்க வைத்தியசாலை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.


பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கும் பெற்றவர்கள்,   அன்றைய தினம் வடக்கிற்கு வந்த அரசாங்கப் பிரதிநிதியான நீதி அமைச்சரிடம்   நீதி  கேட்பதற்காக முண்டியடித்து ஆர்ப்பாட்டம் நடத்த  மக்களைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் முனைப்புடன் செயற்பட,  ஒரே களேபரமாகிவிட்டது.

மக்களுக்கும்  இலங்கை காவல்துறையினருக்கும்  ஏற்பட்ட தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் அதிகமான காணாமல் போனவர்களின்  பெற்றோர்கள் பாதிப்பினை எதிர்கொண்டிருந்தனர்.

ஒருவர் மீது ஒருவர் விழுந்து  உருண்டதில் ,  ஒரு கலவரத்தின் அடையாளம் உருவாகியிருந்தது . தாய்மார் பலர் சிராய்ப்புக் காயங்களுக்கு உள்ளாகினர்.

சிலருக்கு இரத்த அழுத்தம் உயர்ந்தது.  இந்தக் குழப்பமான சூழலில் தேவமித்திரனின் தந்தையாரான சிதம்பரம் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட , இச்செய்தி  காட்டுத் தீயாகப் பரவியது.

தனது வேலைகளை முடித்து விட்டு, அலைபேசியை எடுத்த தேவமித்திரன், முகப்பில் வந்து நின்ற செய்தியை அழுத்தி , மளமளவென வாசித்தான்.

முகம் கோபத்தையும் வலியையும் ஒன்றாக காட்ட,  அவசரமாக தந்தைக்கு அழைப்பு எடுத்தான்.
நொடிகள் யுகங்களாக கழிய, அவன் பதற்றத்தில் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.
அழைப்பு போய் முடிந்தபோதும் அப்பாவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.
மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் அழைப்பு எடுத்து விட்டான். பதிலே இல்லை.

சட்டென்று எழுந்து வெளியே வந்து ,  சற்று நேரம் முன்னரே வீட்டிற்குச் செல்வதை தெரிவித்துவிட்டு, உந்துருளியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். 

'அப்பாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ ' என்ற கவலை மனதை அரித்தது.

அவன் கிளிநொச்சி செல்வதற்கு எப்படியும் ஒன்றரை மணித்தியாலம் ஆகலாம்,  விரைந்து சென்றால் கூட  ஒரு மணித்தியாலம் வேண்டும்.  அவ்வளவு நேரம் அப்பாவின் நிலையை அறியாமல் இருக்க முடியாது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும்  நண்பன் மேகவர்ணனுக்கு அழைப்பு எடுக்க, அவனது அலைபேசி நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொன்னது.

ஏனைய சில நண்பர்களும் கிளிநொச்சியில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் யாருக்கும் அப்பாவைத் தெரியாது.

'யோசிக்கும் நேரத்திற்கு புறப்பட்டு விடுவதுதான் சரி' என நினைத்தவன்  உந்துருளியில் புறப்பட்டான்.

எந்த பயணத்தின்போதும் நிதானம் தவறாமல் வாகனம் ஓட்டும் அவனுக்கு அன்றும் உந்துருளியை சீரான வேகத்தில் தான் ஓடத்தோன்றியது.

காரணம் எதுவாக இருந்தாலும் சட்டத்தை மீறுவதையோ காவல்துறையினரிடம் கைகட்டி நிற்பதையோ அவன் ஒருபோதும் விரும்புவதில்லை.   சட்டமீறல் ஒழுக்க கேடு  என்பது அவனது எண்ணம். 

எண்ணங்கள் பலவற்றோடு அவன் பயணிக்க,  காற்று காதோடு பல கதை சொல்லிக்கொண்டிருந்தது. 
ஆனையிறவு கடந்த போது,  'இன்னும் சிறிது தூரம் தான் ' என மனம் தன்னைத்தானே சமாதானம் செய்தது.

ஒருவாறாக கிளிநொச்சி கந்தசாமி கோயிலடிக்கு வந்துவிட்டான்.  ஆங்காங்கே மக்களும் காவல்துறையினரும் நின்றுகொண்டிருந்தனர்.  

உந்துருளியை நிறுத்திவிட்டு பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டான். 
'அப்பா......'
'எங்கே இருக்கிறீர்கள் 'மனம் ஓயாமல் புலம்பியது..

அங்கு நின்றவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , அவனது அலைபேசி இசைபாடியது.

எடுத்துப் பார்த்தான், 
மேகவர்ணன் தான்...

'தேவா...அப்பா....அப்பா...'

'அப்பாவுக்கு என்னடா....? வர்ணன்...டேய்..அப்பாவுக்கு என்னடா... பதற்றமாக கேட்டான் தேவமித்திரன்.

மச்சான்..நீ பயப்படாதே...சாதாரண மயக்கம் தான்....இப்ப பரவாயில்லை..... நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறம்....நீ...வா...' என்றவனிடம்

'இன்னும் பத்து நிமிசத்திலை வாறன்..அப்பாவைப் பார்த்துக் கொள் ' என்று விட்டு அலைபேசியைத் துண்டித்தான்.

"டேய்...."
மறுமுனையில் பேசிக்கொண்டிருக்க, அலைபேசியை நிறுத்திவிட்டு விரைந்து நடந்தான் தேவமித்திரன்.
 

தீ .....தொடரும். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.