ஈரத் தீ (பாகம் 5) - கோபிகை!!

 


 - 9 வீதியில் விரைந்தது மகிழுந்து. 


'இதுவும் கடந்து போகும்....
சுடரி..இருளில் ஏங்காதே....வெளிதான் கதவை மூடாதே'
என்ற நெற்றிக்கண் படப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

நினைவுகள் தாவிக்குதிக்க பாடலில் லயித்திருந்தேன்.
வாழ்க்கை தான் எத்தனை மாற்றங்களைக் கொண்டது....

குழந்தையாய்....குமரியாய்...
அழுகையில்....அமைதியில்....
என எத்தனை நாட்களைக் கடந்தாயிற்று....

'அட ஆறு காலங்களும் 
மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை 
ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே....'

அர்த்தம் பொதிந்த கார்த்திக் நேத்தாவின் ஒவ்வொரு வரிகளும் அவளை ஆச்சரியப்படுத்தியது...

'அதுவாய் மலரும் 
அதுவாய் உதிரும்
அதுபோல் இந்த கவலையே
சுடரி, சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே..'

அவளுக்கும் தான் எத்தனை வலிகள்...வந்ததும் கடந்ததும்....அக்காலங்களில் அவள் உடைந்ததும்...  இப்போது நினைத்தால் .... ஏக்கப்பெருமூச்சு வெளிப்பட்டது.

'அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே 
உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே...'

உண்மை தானே....இழப்புகளின் போது அவள் துவண்டு துடித்தது என்னவோ உண்மை தான்.  ஆனால் நாளாவட்டத்தில் அவளே தானே அவளைச்  சரி செய்தது.

'சுடரி, சுடரி
 வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே
அழகே 
சுடரி, அட ஏங்காதே
மலரின் நினைவில் மனம் வாடாதே...'

ஆழமான வரிகளால் சிந்தனைகள் செம்மையுற என் உதடுகளில் புன்னகை அரும்பியது.

'இன்று நடப்பவை எல்லாம் நன்மையாகவே இருக்க வேண்டும் ' என நினைத்த படி,  வைத்தியசாலை வளாகத்தினுள் மகிழுந்தை திருப்பி நிறுத்தினேன்.

காலையிலேயே மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார உயர்வு பலருக்கு மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் பலவீனமான மக்கள் அதிகரிக்கவே நோய்த்தாக்கமும்  அதிகரித்திருந்தது.

அது மட்டுமல்ல,  சுய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி , மேல்நாட்டு உணவுகளின் மீதான மோகம் இவை எல்லாம் சேர்ந்து தான்,  இப்படி வியாதிகளையும் நோயாளர்களையும் அதிகமாக்கியிருக்கிறது. 


'ஜனத்திரளுக்கு எப்போதும் குறைவில்லாத இடம் வைத்தியசாலைதான்' என நினைத்தபடி,  சாவியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு உள்ளே விரைந்தேன்.

வெள்ளை அங்கியை அணிந்தபடி,  தாதியர்கள் 'சிறகு முளைக்காத தேவதைகள் போல' அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தனர்.

"காலைவணக்கம்...." எதிரே வந்த தாதி மேகவர்ணன் புன்னகையோடு கூற பதிலுக்கு வணக்கம் தெரிவித்து சிரித்துவிட்டு நகர்ந்தேன். 

சின்னத் தலை அசைப்புடன் கடந்து சென்ற பலருக்கும் சின்னப் புன்னகையைப் பதிலாக கொடுத்த படி, வைத்தியர்களின் அறைக்குள் நுழைந்து பையை வைத்து விட்டு,  வெளியே வந்தேன்.

இரு பக்கமும் மரக்கன்றுகள் நிறைந்த அந்த நீண்ட வராந்தாவில் நடப்பது எப்போதும் எனக்கு பிடித்தமான விசயம் என்பதால் அன்றும் ஒருதடவை நடந்து விட்டு வந்து,  நோயாளர்களைப் பார்வையிடும் அறைக்குள் நுழைய,  அரக்கப்பரக்க ஓடி வந்த செவிலிப்பெண் நீரஜாவிடம்,

"என்ன நீரஜா....ஏன் இந்த ஓட்டம்? "என்றபடி  அமரப்போனேன்.

"மன்னிக்கவும்........நேரம் பிந்திவிட்டது...." படபடப்போடு சொல்ல,

"பரவாயில்லை....பாருங்கள்" என்றுவிட்டு,  
நான் அங்கேயே நின்றால் நீரஜா இயல்பு நிலைக்கு வரமாட்டாள் என்பது புரிந்து, 
"நான் வெளியே போய்விட்டு வருகிறேன்......" எனக்கூறிவிட்டு மீண்டும் அந்த நீண்ட வராந்தாவில் நடக்கத் தொடங்கினேன். 


தீ..தொடரும்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.