தியாகதீபம் திலீபனின் அறம் போற்றி பன்னிரு தவத்திருநாட்களில் களியாட்டம் தவிர்ப்போம்!

 


3.8.2023

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம்.

எமது தாய்த்திரு நாட்டின் சுதந்திரமான வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக, தமிழ்த்தேசிய இனமக்களாகிய நாம் அள்ளிக் கொடுத்திருக்கின்ற உயிர் விலைகளையும், எண்ணிலடங்கா அற்புதமான தியாகங்களையும், இன்னும் சுமந்தே கடக்கும் துன்ப துயரங்களையும் சுவடுகளாகக் கொண்டுதான் உலக நீதிக்கு முன்பாக தமிழினம் தொடர்ந்தும் உலகம் ஏற்கும் சனனாயக வழிமுறையில் அரசியற் போர்க்களங்களை, உரிமைசார் கருத்தாடல்களை முன்கொண்டு செல்கின்றோம். நிலைமாறுகால யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்ட எமது மக்கள் ஒவ்வொருவரும் ஆற்றுகின்ற அர்ப்பணிப்புமிக்க பங்கேற்பும் பங்களிப்புமே இன்றுவரை தொடர்வதற்கான பலமாகிறது. அதிலும் குறிப்பாக வளர்ந்துவரும் இளையோரின் சிறந்த சிந்தனைக் கூர்மைகளே வாழ்விட மொழியிலான தேர்ச்சியிலும், வாழ்விட தேச இறையாண்மைக்கான மற்றும் தேசவழமைச் சட்ட மூலங்களையும் மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் கடைப்பிடிக்க பிரதான பெருமைநிறை பண்புகளாக அமைவதை காணமுடிகின்றது.
அன்பான மக்களே!

தாயகத்திலே போரும் போர்சூழ்ந்த வாழ்வியலுக்குள்ளும் இருந்த மக்கள் களமுனைகளின் அவசர அவசியத்திற்கும், கனதிக்கும், தகமைக்கும் ஏற்றவாறு எவ்வாறு தம்மை உடனுக்குடன் விழிப்பூட்டி, நிலைகுலையாமல் அணியமாகி, உணர்வுபூர்வமாக அர்ப்பணிப்புமிக்க செல்நெறியில், இருந்தார்களோ அவ்வாறானதொரு பட்டறிவிலிருந்து அவசிய நிலையுணர்த்தி, மக்களை விழிப்புக் கொள்ள வைக்கும் மடலாக, இதனை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

இந்திய வல்லாதிக்க அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சையை ஆயுதமாக ஏந்திப் பட்டினித் தீ வளர்த்து, பன்னிரண்டு (12) நாட்கள் ஒரு சொட்டு நீருமின்றி உண்ணா நோன்பிருந்து, உலகம் வியந்து நின்ற மாபெரும் தியாகத்தின் சொத்தான லெப். கேணல். திலீபன் அவர்களின் முப்பத்தாறாவது (36) ஆண்டு நினைவேந்தலின் ஒன்பதாவது (09) நாளான எதிர்வரும் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று, யேர்மனியின் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள டோட்மூண்ட் (Dortmund) நகரிலே பிரபல தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களின் ஒரு களியாட்ட வியாபார இசை நிகழ்வை நடாத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர்.

பல்வேறுபட்ட இசை நிழ்வுகளை ஏற்கனவே யேர்மனியில் நிகழ்த்தி வருவதில் தானே தொடர்பாளராக, முகவராக செயற்பட்டு வருவதாக தன்னைத் தானே முன்னிலைப்படுத்திவரும் திரு. ஓடின் தனபாலசிங்கம் அவர்களிடம் இதுபற்றிய அனைத்து விடயங்களையும் நட்பு ரீதியாகவும், அலுவலக ரீதியாகவும், நேரடியாகவும், தொலைபேசிகளூடாகவும் கதைத்தபோது, அதனை தார்மீகமாக புரிந்துகொண்டவராகவும், குறித்த நிகழ்வினை தியாகி. திலீபன் அவர்களின் நினைவேந்தல்க் காலத்திற்கு பின்பாக மாற்றியமைப்பதாகவும் உறுதியளித்திருந்தமையால், மிக மிக எளிமையாக கடந்து செல்லலாமென எண்ணியிருக்கையில், எவ்விதமான கருத்துப் பகிர்வோ தொடர்போ கொள்ளாது மீண்டும் அதே கால நேரங்களில் வெளியான விளம்பரங்களைக் கண்டு கவலையும், திகைப்பும் அடைந்தோம்.

ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையால் வசமாகாத இதயங்கள் இல்லை. அதேபோன்று அவரது தமிழ்ப்பற்றும், அவரது எழிமையான, தூய்மையான பண்பும் அவர் தனது இசைத்துறைப் பேராற்றலால் பெற்றுக் குவித்திருக்கும் விருதுகளைப் போலவே அவரை நெஞ்சார நேசிக்காத தமிழர்களே இல்லை. இந்த மிக உன்னதமான மனிதனை தமிழ் மக்களின் மன நெருடலுக்குள் ஆட்படுத்தி, தமிழீழ மக்கள் மாத்திரமல்ல தமிழக மற்றும் உலகவாழ் தமிழர்களே அவரை தமிழின விரோதியாக சித்தரித்துவிட வேண்டுமென்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே சந்தேகமும் கோபமும் கொள்ள வைக்கின்றது.

தியாகி திலீபனது அகிம்சைப் போராட்டமானது, இந்திய நடுவண் அரசுக்கும் அதன் அக்கால வன்மங்களுக்கும் எதிரானதோடு, காந்திய வழிமுறையிலானதுமாகும். திலீபன் அவர்களின் ஈகத்திற்குப் பின்னர் காந்திய தேசம் பட்ட அவமானங்கள் காரணமாக திலீபனின் போரை ஏளனம் செய்தும், அதனைப் பொருட்படுத்தாமலும் கடந்து செல்வதன் தொடர்ச்சிக்கு உரமூட்டுவதான ஒரு திட்டமிடல் அலகே இந்த களியாட்ட நிகழ்வின் மறைபொருளாகலாம்.

இந்த நிகழ்ச்சிக்கான காலத் தெரிவின் தவறு பற்றிய பரிபூரணமான விளக்கமடங்கிய பல மின்னஞ்சல்களை திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு தொடர்புடையோர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்தது ஒரு நல்ல பதிலை எதிர்பார்த்துள்ள இந்தக் காலப்பகுதியில், நுளைவுச் சிட்டைகளைப் பெறுவதையோ, விளம்பரங்களை ஏற்பதையோ தவிர்ப்போம்.

அன்பான இளையோர்களே!

எமது தாயக விடுதலைக்கான போராட்ட வரலாற்றிலே ‘இந்திய அமைதிப்படை’ என்ற போர்வையிலே எமது மண்ணில் கால்பதித்த இந்திய வல்லாதிக்க அரசு பின்னாளில் சிறிலங்கா பேரினவாத அரசுடன் கூட்டிணைந்து அமைதிக்கல்ல எமை அழிக்க வந்ததென கோர முகத்தை வெளிப்படுத்த முற்பட்ட வேளையிலே, அதன் கபடத்தனங்களை உலகறியச்செய்த மகத்தான தியாகியாகவே திலீபன் அவர்கள் எங்களுடைய நெஞ்சங்களிலே வாழ்கின்றார். எப்படி இதை நெஞ்சம் மறக்கும்?

எமது சுதந்திர விடுதலைக்கான வரலாற்றுப் போரை நீங்கள் ஒவ்வொருவரும் நன்கு படித்து உணர்ந்து அதற்காக புலம்பெயர் தேசங்களில் நீங்கள் தொடர்ச்சியாக ஆற்றுகின்ற தெளிந்த செயற்பாடுகளை நம்பித்தானே கல்லறைகளில் துயிலும் மாவீரர்களும், அவர்களை உவந்தளித்த பெற்றோர்களும், உலகத் தமிழர்களுமாக காத்திருக்கிறார்கள். உங்களுடைய சிறந்த செயற்பாடுகளை இருட்டடிப்புச் செய்து, உங்களுடைய உழைப்பின் ஒரு பகுதியை வைத்தே உங்களுடைய உணர்வுகளை மழுங்கச் செய்யும் தீயவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்.

‘திலீபன் மாமா’ என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உணர்வோடு பதித்து, நெஞ்சினிய நாயகனாகப் போற்றும் இராசையா பார்த்தீபன் என்ற அந்த மாவீரன் உங்களைப் போலவே கல்விப் புலத்திலே ஒரு மகத்தான சாதனையாளனாக இருந்தான். வடதமிழீழத்தின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே மருத்துவபீட மாணவனாக தெரிவாகிய போதிலும், தன் இனம்படும் இன்னல்கண்டு கல்வி வாழ்வைத் துறந்து எமக்காக தன்னையே தந்தான் எப்படி மறப்போம்? நினைவேந்தல் நாட்களை உணர்பூர்வமாக ஏந்தி நிற்கவேண்டியது எமது உரிமையல்லவா?

அன்பான பெற்றோர்களே!

குழந்தைப் பருவத்திலே தன் தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் ஒரு பிள்ளை வளர்த்த பொழுதுகளையும், அவனது சகோதரர், தந்தை வளர்த்த அவன் பற்றியதான கனவுகள் எத்தகையவையாக இருந்திருக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்வோம். பன்னிரெண்டு நாட்களும் உருகி உருகி ஈகமான திலீபனை உங்களுடைய பிள்ளையாகத்தானே சுமக்கின்றீர்கள்? நாங்கள் திலீபனை நெஞ்சார நேசிப்பதன் பெறுமானத்தை மீண்டும் பிள்ளைகளுக்கு உணர்த்தி, திலீபனின் நினைவேந்தலுக்கு உரித்தான பன்னிரெண்டு நாட்களையும், இல்லங்களிலும் பொது இடங்களிலும் நினைவேந்த தயாராகுவோம்.

அன்பான உறவுகளே!

தியாகி லெப்.கேணல். திலீபனின் அறத்தின் உன்னதமான பன்னிரண்டு நாட்களிலும் ( செப்டெம்பர் 15 தொடக்கம் 26 வரை) எவ்வகையான களியாட்ட நிகழ்வுகளுக்கும் இடமளிக்காது. தன்மானத் தமிழினத்தின் உணர்வுகாக்க ஒன்றிணைவோம்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.