செல்வச்சந்நிதியானின் அற்புதங்களும் அதிசயங்களும்!
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகப்பெருமானின் ஆலயமானது கந்தபுராண வரலாற்றுக் காலத்தில் இருந்து ஆரம்பமாவதாக வரலாறு கூறுகின்றது. அந்த வகையில் தொண்டைமான் ஆறு எனும் பெயருடன் சந்நிதி ஆலயத்திற்கு பின்புறம் உள்ள கடல் நீர் ஏரியானது ஆரம்பகாலத்தில் வல்லைவெளியில் இருந்து மழைநீர் வழிந்தோடும் தாழ்நிலப்பகுதியாக வல்லைவெளி, வெளிலங்கிராய் , தொண்டைமானாறு பெருங்கடலுடன் இணைகின்றது. இவ்வாறு ஆறு பெருங்கடலுடன் இணையும் பகுதி ஆற்றுவாய் என்று கூறப்படும்.
ஆற்றுவாய்க்கு அருகில் வலி.கிழக்கு பிரதேச சபையும் வடமராட்சியையும் இணைக்கும் தொண்டைமானாறு பாலம் அழகான தோற்றத்தில் அமைந்திருப்பதும் சந்நிதி வேலனின் அருளாட்சியே. பாலத்தின் அடிவாரத்தில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மு.நவரத்தினசாமி (ஆழிக்குமரன்) யின் கம்பீரமான சிலை தொண்டைமானாறு மக்களுக்கு முயற்சிக்கான வீரத்தினைத் தருகின்றது.
வல்லைவெளியானது ஆரம்ப காலங்களில் வல்லியப்பெரும்வெளி என்னும் பெயருடன் இருந்துள்ளது . அதற்கு ஆதாரமாக தற்போது அப்பிரதேசங்களை உள்ளடக்கிய காணி உரிமையாளர்களின் உறுதிகளில் காணிப்பெயர் வல்லியப்பெரும்வெளி என்னும் பெயரில் உள்ளது.
வல்லியப்பெரும் வெளியில் இருந்து தொண்டைமானாறு வரை ஓடும் கடல் நீரேரி வல்லியாறு என்று ஆரம்பகாலத்தில் பெயர் கொள்ளப்பட்டுள்ளது . கந்தபுராணத்திலும் முருகப்பெருமானின் தூதுவராக அனுப்பப்பட்ட வீரபாகு தேவர் சூரனிடம் தூது செல்லும் வழியில் சந்திக்காலம் வரவே கால்பதித்து தரித்து வல்லியாற்றில் ஸ்ஞானம் செய்து ( உடல் கந்தம்) கொண்டு வந்த வல்வை இணை ஆற்றுக்கரையோரம் இருந்த பூவரசம் மரத்தடியில் நிறுத்தி சந்திக்காலப் பூசையினைச் செய்து முருகப்பெருமானை வழிபட்டு பின்னர் அவர் தான் வந்த வேலையான தூது செல்லும் பணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
தேவியினால் பார்வதி தேவியின் காற்சிலம்பில் இருந்து உதிர்ந்த நவரத்தினங்களாகிய நவவீரர்களில் மூத்தவரே வீரபாகு தேவராவர். ஒரு விதத்தில் வீரபாகு தேவர் முருகப்பெருமானின் சகோதரராகவும் பார்க்கப்படுகின்றார். காரணம் தோற்றுவிக்கப்பட்டதினால் அவ்வாறான புகழ்பெற்ற ஞானம் உடைய முருகப்பெருமானின் போர்ப்படைக்கு வீரம்மிக்க தலைவனாக இருந்த வீரபாகுதேவர் அவர்கள் கால்பதித்து இறங்கி முகாமிட்டு இருந்து முருகப்பெருமானுக்கு சந்திகால பூஜை செய்த இடம் என்றால் அவ்விடத்திற்கு ஞானமும், வீரமும், தானாக வந்தவிடும் அல்லவா! வீரபாகு தேவர் கால்பதித்த இடம் ஆலயத்திற்கு வடக்குப் பக்கம் உள்ள கல்லோடை எனினும் பகுதியாகும். இதனால் சந்திதி வேலனுக்கு "கல்லோடைக்கந்தன் " என்னும் பெயரும் உண்டு.
சந்நிதி வேலனிடம் வரும் அடியார்கள் பலரும் இப்போது வீரபாகுதேவர் கால்பதித்த கால்ச்சுவட்டினை வணங்கி செல்கின்றார்கள். அவ் புனித பாதச்சுவடு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.மேற்படி தொண்டைமானாறானது வல்லைவெளி கரணவாய் , குடத்தனை, ஆனையிறவு , முல்லைத்தீவு வரை தாழ்நிலங்கள் ஊடாக தொடர்புபட்டு உள்ளது.
இதனால் முல்லைத்தீவு கண்ணகி அம்மனின் அருளாட்சி பெற்ற இடமென்பதால் அங்கிருந்து ஓடிவரும் புனித நீரானது தொண்டைமானாறு வழியாக ஒடுவதினால் சந்நிதி வேலவனின் மூலஸ்தானத்தில் கண்ணகி அம்மனுக்கும் ஓரிடம் உள்ளது. கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் உப்புநீரில் விளக்கு எரிவதைப் போல் செல்வச்சந்நிதியிலும் மகோற்சவத்திற்கு முன் ஆனி, ஆடி மாதத்தில் ஒரு திங்கட்கிழமை இரவு தீர்த்தமெடுப்பு பூசை நடைபெற்று அடுத்த திங்கள் வரை அவ் உப்பு நீரில் விளக்கு எரிந்து அத் திங்கள் குளிர்ச்சி பொங்கலும் நடைபெறும்.
செல்வச்சந்நிதிக்கும் கதிர்காமக்க ந்தனுக்குமான தொடர்பாக கதிர்காம காடுகளில் ஐராவத எனும் யானை சாபவிமோட்சனம் தேடி அலைந்து திரிந்தது. ஐராவசு என்பது தேவலோகத்தில் பணிபுரியும் இறைதூதுவர் ஒருவராவர்.
இறை தூதுவரான கந்தர்வன் தேவலோகத்தில் செய்த சிறு தவறுக்காக வியாழபகவானால் சாபத்துக்கு உள்ளாகி கதிர்காமக் காடுகளில் ஐராவசு என்னும் யானையாக சாப விமோட்சனம் தேடி அலைந்து திரிந்தது . அக் காலப்பகுதியில் அக்காட்டுப்பகுதியால் சென்ற சிகண்டி முனிவரைத் தாக்குவதற்காக கோபத்துடன் செல்கின்றது. அதனைக் கண்ணுற்ற சிகண்டி முனிவர் தான் செல்லும் பாதையின் ஓரத்தில் நின்ற வெற்றிலைக்கொடியின் இலையை பறித்து வேலாக மாறி யானையைத் தாக்க வேண்டி இறைவனை வணங்குகின்றார். அவ்வெற்றிலை இலையானது வேலாக மாறி யானையின் தலையில் தாக்கி ஞானத்தினை வழங்குகின்றது.
ஞானத்தினை பெற்ற ஐராவக சிகண்டி முனிவரைப் பணிந்து வணங்கி தான் செய்த தவறுகு மன்னிப்புக் கோரி தனக்காக சாபம் நீங்க வழி கூறுமாறு இறைவனை வேண்டி நின்றார். அதற்கு சிகண்டி முனிவர் ஈழத்தில் வடபால் அமைந்த வல்லி நதிக்கரையோரம் உள்ள புனிதம் நிறைந்த பூவரசம் மரத்தடியில் தியானம் இருந்து இறைவனை அடைவாய் எனக் கூறி அருளினார். அதனைக் காது குளிர கேட்ட ஐராவசு முனிவருக்கு நன்றி கூறி வடபால் நடந்து தற்போது உள்ள சந்நிதி ஆற்றங்கரை பூவரசின் கீழ் கடும் தவம் புரிந்து இறை நிலை அடைந்து முத்தி பெற்றது. அவ் முத்தி பெற்ற பூவரச மரத்தடியில் இன்றும் ஐராவசு யானையாகிய தேவலோகத் தொண்டனின் கந்தர்வன் ஐராவசு யானையின் சமாதி அமைந்துள்ளது . அவ் சமாதிக்கு மேலே நாக தேவதைகள் கருங்கற்கல் ஆகி காவல் செய்து வருகின்றார்கள்.
சிகண்டி முனிவர் பறித்து எறிந்த வெற்றிலை வேலாக மாறி ஐராவசு யானையினைத் தாக்கி ஞானத்தினை வழங்கியதை நிலைத்து நிற்கும் வகையிலே செல்வச்சந்நிதி வேலவன் வீதி உலா வரும்போது வேல் பெருமானின் நடுப்பகுதியில் வெற்றிலை இலை ஒட்டப்பட்டு வீதியுலா வருவதும் சிறப்புடைய வழிபாடாக நடைபெற்று வருகின்றது.
வீரபாகு தேவர் வேல் வைத்து சந்திக்கால பூசைசெய்து புனிதமடைந்த பூவரச மரத்தடியில் இப்பொழுதும் தேவலோக தூதுவர் கந்தர்வன் ஐராவசு எனும் யானையாக சமாதி அடைந்து மேலும் புனிதம் பெற்ற இவ்விடத்தினை இவ்வழியால் சென்று வரும் மருதர் கதிர்காமர் வழிபட்டு வந்தார்.
மருதர் கதிர்காமர் முருகப்பெருமானால் ஞானமும் சித்தும் உடையவராக பிறந்ததினால் வேல் பெருமானின் இருப்பிடத்தினை அவரின் ஞானத்தினால் உணர்ந்து அப்படியே சென்று வரும்போது பூவரசமரக்கடியிலும் தியானம் இருந்து வழிபட்டு வந்துள்ளார். ஆகவே அவருக்கு அருள் பாலிக்க எண்ணிய முருகப்பெருமான் அவருக்கு பல சோதனைகள் கொடுத்து மேலும் தன்பால் ஈர்த்து கதிர்காமர் முன் தோன்றி நீ எனக்கு பூவரசமரத்தடியில் பூசை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கதிர்காமர் தான் பிராமணர் அல்லாத குடும்பத்தினை சேர்ந்தவர் என்பதினால் தனக்கு பூசை முறைகள் தெரியாது நான் எப்படி பூசை செய்ய வேண்டும் என முருகப்பெருமானிடத்தில் கூறினார் . அதற்கு முருகப்பெருமான் நீ இப்பொழுது கண்களை மூடித்திற எனக்கூறினார். கதிர்காமரும் முருகப்பெருமான் கூறியதைப்போல் கண்களை மூடித்திறந்தார். என்ன ஆச்சரியம் கதிர்காமர் கண்களை மூடும் போது சந்நிதிப்பகுதியில் நின்றவர் கண்களைத் திறக்கும்போது கதிர்காமத்தில் நின்றார். அங்கே கதிர்காமத்தில் நடைபெறும் வாய்கட்டி பூசை செய்யும் முறைகளை முருகப்பெருமான் கதிர்காமருக்கு காண்பித்து விளக்கமும் கொடுத்து வெள்ளி வேல் ஒன்றையும் கதிர்காமரிடம் கொடுத்து இதனை பூவரசம் மரத்தடியில் வைத்து பூசை செய்யக் கூறி மறுபடியும் கண்களை மூடித் திறக்கப் பணித்தார். மீண்டும் கண்களை மூடித்திறக்கும் போது கதிர்காமர் சந்நிதிப் பூவரசமரத்தடியில் நின்றார். அன்றிலிருந்து மருதர் கதிர்காமர் முருகப்பெருமான் வழங்கிய வெள்ளி வேல் பெருமானுக்கு விளக்கேற்றி தூய்மை செய்து வரலானார். கதிர்காமர் சிறப்பான முறையில் பூசைகள் செய்து வந்தாலும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை முருகனிடத்தில் கேட்டுக் கொள்வார்.
பூவரசம் மரத்தடியில் வைத்து வணங்கும் வேல்பெருமானுக்கு மழை நீர் , வெய்யில் படாமல் பனையோலையால் குடிசை அமைத்து வணங்கி வந்தார் . அவ்வாறே பூசை முடிந்து விபூதி கொடுக்கும் முறை தெரியாது கதிர்காமர் அவஸ்த்தைப்பட" கதிர்காமா அஞ்சாதே விபூதியை நீ எடு அதை நான் கொடுக்கிறேன்" என கூறினார். அதேபோல் கதிர்காமரும் செய்து வரலானார்.
அதேபோல் இன்றும் ஆலய பூசை முடிவுற்றதும் அடியார்களுக்கு
விபூதி பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அடியார்களின் தலையில் முருகப்பெருமானே விபூதி இட்டு ஆசிர்வதிப்பதாக அடியார்கள் மகிழ்ச்சி அடைந்து முருகப்பெருமானின் காலில் விழுவதாக பூசகரின் காலில் விழுந்தும் வணங்கி வருகின்றார்கள். முருகப் பெருமானிடத்தில், கதிர்காமர் எவ்வாறு அழுது படையல் செய்வது என முருகனிடத்தே கேட்க முருகப்பெருமாான் கூறினார்.
" நீ ஆலமிலையில் அமுது படைத்துக்கொள். அவை 63 நாயன்மார்களுக்கும் ஒன்று எனக்கும் மற்றயது உனக்கும் "என்றார். அதே போல் 65 ஆலமிலையில் அமுது படைத்து 63 நாயன்மார்களாக ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பலர் அதனை பிரசாதமாகப் பெற்றுக் கொள்கின்றனர் . பல அடியார்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என பலர் இங்கு தங்கி நின்று சந்நிதியானின் ஆற்றில் நீராடி , பூவரசமரத்தடியில் தியானம் இருந்து மூலஸ்தானத்தில் அபிசேகம் செய்யும் தீர்த்தத்தினை கோமயத்தில் ஏற்றிப் பருகியும் உடலில் பூசியும் , நெய்வேத்தியமான ஆலமிலைப் பிரசாதத்தினை உண்டு தீர்க்க முடியாத நோய்களையும் நீங்கப் பெற்று நல்வாழ்வுதனை அடைந்துள்ளார்கள்.
முருகப்பெருமானும் கதிர்காமரும் ஆலய வாசல்பகுதிக்கு இருபக்கமும் இருந்து உரையாடுவார்கள். இதனால் செல்வச்சந்நிதியில் ஆலயத்திற்கான பிரதான பாதையை விட பிரதான பாதைக்கு இடது பக்கமுள்ள நாவல் மர வாசல் பகுதியூடாக உள்ளே சென்று ஆலயப் பரிவாரங்களை சுற்றி வழிபாடாற்றி பிரதான பாதைக்கு வலது பக்கமுள்ள கதிர்காம முகப்பு வாசல் வழியே வெளியேறுகிறார்கள். இவ்வாறே இன்றும் அடியார்கள் அதிகமாகப் பாவித்து வருகின்றனர்.
முருகப்பெருமானிடம் கதிர்காமரும் உரையாடிக் கொண்டிருக்கையில் குறுக்கே செல்லக் கூடாது என்பதனால் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது . பெரும்பாலும் விடயம் தெரிந்த அடியார்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மருதர் கதிர்காமருக்கு முருகப்பெருமான் கூறுகின்றார்.
நாளை கதிர்காமக் கோயில் கொடியேற்றம் ஆரம்பமாகின்றது . என்னைப் பயணம் அனுப்பி வைக்குமாறு கூறுகின்றார். அதற்கு கதிர்காமரும் தயாராகின்றார் . பிரயாணம் செல்லும் போது கொண்டு செல்வதற்குரிய உழுத்தம் பிட்டு தயாரித்து நெய்வேத்தியம் செய்து பயணப்பிட்டும் கொடுத்து ஆலயத்திலிருந்து சிறிது தூரம் முருகப் பெருமானுடன் வந்து வழியனுப்பி வைக்கின்றார். அதன் பின் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நாள் இரவு மருதர் கதிர்காமரை நித்திரையில் இருந்து எழுப்பி நான் வந்து விட்டேன் எனக்கு பசியாகவும், களைப்பாகவும் உள்ளது . எனக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார். கதிர்காமரும் அச்சமயம் வீட்டிலிருந்த பொருட்களான பயறு, சர்க்கரை , தேங்காய் இவற்றைக் கொண்டு பயற்றம் துவையல் செய்து
சாப்பிடவும், தாகத்திற்கு அருகில் இருந்த தென்னையில் இளநீரும் பறித்துக் கொடுத்து சந்நிதி வேலவனின் பசியையும் , தாகத்தினையும் தணித்து ஆலயத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
இவ் நிகழ்வுகளே இன்றும் மருதர் கதிர்காமரின் வழித்தோன்றல்களினால் ( சந்நிதிப் பூசர்கள் ) இன்றும் அதேபோல் கதிர்காமக் கொடியேற்றத்திற்கு பயணப்பூசையும் செய்து உழுத்தம் பிட்டு வழங்கும் நடைமுறையும் கதிர்காம தீர்த்தத்தில் அன்று இரவு பூசை முருகப்பெருமான் வந்து சேர்ந்ததை பூசகர்களுக்கு அருள் பூசை ஆரம்பமாகி நடைபெற்று பயிற்றம் துவையலும் இளநீரும் நெய்வேத்தியமாகப் படைக்கப்படுகின்றது. இவ்வாறாக பூசைகள் சிறப்பாக நடைபெற சந்நிதி வேலவனை நாடி சித்தர்களும் , யோகிகளும் , ஞானிகளும் , முனிவர்களும் , சுவாமிகளும் , பக்தர்களும் அடியவர்களாக வரத்தொடங்கினார்.
இவ்வாறாக வருகை தந்த சித்தர்களும் , முனிவர்களும் , சுவாமிகளும் ஆலயச் சூழலில் மரநிழலில் குடிசைகள் அமைத்து தியானம் இருந்தனர் . அவர்கள் தியானம் இருந்து இறைநிலை அடைந்த இடங்கள் அனைத்தும் இன்று அன்னதான மடங்களாக காட்சி தருகின்றது .
பக்தர்களும் அதிகமாக வர ஆரம்பித்ததினால் அதிக நேரத்தினை ஆலயத்தில் அடியார்கள் செலவு செய்தார்கள். இதனால் அவர்களுக்கும் உணவுக்காக நேரம் செல்வதினால் ஆலயத்தில் முருகப்பெருமானுக்காக படைக்கப்பட்ட நெய்வேத்தியம் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. பின்னர் அது போதாது நிலை ஏற்படவே . மகேஸ்வர பூசை செய்யப்பட்டு அடியார்களுக்கு அன்னதானம் ஆலயத்தில் முதலில் வழங்கப்பட்டது. அதன் பின் ஆலயத்தில் வழங்கப்படும் அன்னதானம் அதிகளவான அடியார்களுக்கு ஒரே சமயத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டபோது ஆலய சூழலில் அன்னதான மண்டபங்கள் , மடங்கள் ஆகின.
கதிர்காமர் அமைத்த ஓலைக் குடிசையும் கதிர்காமரின் வழித்தோன்றல்களான சந்ததிப் பூசகர்களின் முயற்சியால் அடியார்களின் நேர்த்திக் கடன்களுக்கான கொடுப்பனவுகள் மூலமும் காணிக்கைகள் மூலமும் ஆலயக் கற்கள் மூலமும் கட்டப்பட்டு இன்று பெரும் ஆலய உயரமான மணிக் கோபுரம் உயரமான நேர்முட்டியும் அருள் பாலிப்பது சைவ பெருமக்களாகிய எமக்கு பெருமையே . எம்பெருமானுக்காக மிக உயர்ந்த தேர் ஒன்றினை தேர்த்திருப்பணி சபை செய்ய ஆரம்பித்து வெள்ளோட்டமும் அவ்வருடத்திற்கான தேர் உற்சவமும் நடைபெற்றது . அவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இலங்கையில் மிக உயரமான தேர் ஆகவும் உலகத்தில் மிக உயரமான தேர் எனும் மூன்றாவது இடத்தில் இருந்த தேர் எரிக்கப்பட்டு சாம்பலாகியது.
சந்நிதி வேலவனின் அழகிய சித்திர தேர் செய்வதற்கு முன்னர் இருந்த கட்டுத் தேரில் வீதி உலா வந்த முருகப் பெருமான் தேர் எரிந்த பின்பும் 2002 ம் ஆண்டுவரை கட்டுத்தேரில் வீதி உலாவந்து அருள் பாலித்தார்.
2000 ம் ஆண்டு கட்டுத் தேர் ஆலயத்திற்கு மேற்கு வாசல் பகுதிக்கு வருகையில் குடை சாய்ந்தது. அதனால் அடியார்களின் பெரும் ஒத்துழைப்பாகவும் அப்போது இந்து கலாச்சார அமைச்சராக இருந்த தி . மகேஸ்வரனால் நிதி ஒதுக்கப்பட்டு ஆலய உரிமையாளர்களின் முயற்சியாலும் சந்நிதி வேலவனுக்கு புதிய சித்திரத்தேர் ஒன்றும் விநாயகப்பெருமானுக்கு ஒரு சித்திரக்தேரும் புதிதாக ஒரு வருடத்துக்குள் அமைக்கப்பட்டு 2004 ம் ஆண்டு இரு தேர்களும் வெள்ளோட்டம் கண்டும் மகோற்சவத்தின் தேர் உற்சவத்தின் போதும் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள் பாலித்தருளினார். தொடர்ந்து தேர் உற்சவத்தின் போது சண்முகப்பெருமான் வள்ளி , தெய்வானை அம்மன் சமேதரராக சகடையில் வீதி உலா வந்த காரணத்தினால் சண்முகப்பெருமானுக்கும் ஆலய நிர்வாகத்தினால் புதிய தேர் செய்யப்பட்டு 2008 ம் ஆண்டு வெள்ளோட்டமும் தேர் உற்சவமும் நடைபெற்றது.
தற்போது மூன்று தேர்களும் பழைய தேர்முட்டியில் நிறுத்தி பாதுகாக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் எரியூட்டப்பட்ட தேர்முட்டிக் கட்டடம் என்பதனால் பல வருடங்கள் சென்றதனாலும் கட்டடம் இடிந்து வந்தது . இதனால் இதனை இடித்துப் புதிதாக கட்டவேண்டும் எனப் பொறியியலாளர்கள் கூறினார். புதிய தேர்முட்டிக் கட்டத்தை கட்டுவதற்கும் சந்நிதி வேல்ப்பெருமான் அருளாசியினை வழங்கிடவே 2017 ம் ஆண்டு மகோற்சவம் முடிவுற்றதும் தேர்கள் ஆலய வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டு எரிந்த பழைய தேர்முட்டி முற்றாக இடித்து அகற்றப்பட்டு முழுவதும் புதிதாக தேர்முட்டி கட்டப்பட்டு 2018 இல் அத்தேர் முட்டிக்கட்டடத்தில் தேர் உற்சவத்திற்கான விழாக்கள் சிறப்பாக நடைபெற்று 2019 ம் ஆண்டு தேர்முட்டி வேலை முழுமையாக பூரணப்படுத்தப்பட்டு நிறைவேறியது.
மருதர் கதிகாமர் முதல் அவருடைய சந்ததி வழி உரிமைப் பூசகர்களினால் இன்றும் மரபு மாறாத பூசை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது . அனைத்து விடயங்களையும் செல்வச் சந்நிதி வேலவனே செய்கின்றார். நாம் அதன் சிறு அங்கமாக உள்ளமையினை இட்டு மிகப்பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
கருத்துகள் இல்லை