அமைதிக்கான பெண்கள் நடைப்பயணமும், தீர்ப்பாயம்

 


அமைதிக்கான பெண்கள் நடைப்பயணமும், தீர்ப்பாயம் - 3 இன் முடிவுகளும் ஒரு புள்ளியில் இணைதல்.


அமைதிக்கான பெண்கள் நடைப்பயணமானது தமிழீழத்தில் இடம்பெறுகின்ற சிறிலங்காவின் இனஅழிப்பு மற்றும் அடக்குமுறைகளை வெளிக்கொணரும் அதே தருணத்தில், தீர்ப்பாயம் - 3 இன் முடிவுகளும் தமிழீழப்பெண்களது ஆதாரங்களின் அடிப்படையில் , "தமிழினப்படுகொலைக்கான முதன்மைப் பொறுப்பு" யாரென்பதை வெளிப்படுத்தவிருக்கிறது. 


தீர்ப்பாயம் - 3 பேர்லினில் நடைபெற்றவேளை அங்கே நூறுக்கு மேற்பட்ட சாட்சியங்களை நீதிபதிகள் கண்டறிந்து ஆய்வுசெய்தனர். பெண்போராளிகள், சிறிலங்கா அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட பெண்கள், ௧ணவனை இழந்தோர், கிழக்கு வாழ் தமிழ் இசுலாமியப்பெண்கள் ஆகியோரது சாட்சியங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவற்றுள் அனைத்துமே ஆதாரங்களைக் கொண்டவை என்பதே இதன் இன்னொரு சிறப்பம்சமாகும்.


2009 வரை பெண்போராளிகளாக இருந்தவர்கள் தம்மை அடையாளப்படுத்தி, தமது நிலை, போராட்டவரலாறு, செயற்பாடுகளை அடையாளப்படுத்தி தமிழீழத்திற்கு வெளியே சுயமாகச் சாட்சியமளித்த முதல் நீதிமன்றமாக இத்தீர்ப்பாயம் அமைகிறது. 2009 இன் பின்னர் தமிழீழத்திற்கு வெளியே "நான் ஒரு போராளி" என அடையாளப்படுத்தி, அனைத்துலக நீதியாளர்/ஆய்வாளர்களின் முன்பு அச்சமின்றி எமது பெண்போராளிகள் சாட்சியமளித்தமையும், கிழக்கிலிருந்து பலபெண்கள் இணையமூடாகச் சாட்சியமளித்தமையும் முதன்முதலில் இத்தீர்ப்பாயமூடாகவே சாத்தியமானது.


தீர்ப்பாயத்தின் முடிவுகளை வெளியிட ஒன்றரை வருடமானது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். சாட்சியமளித்த உறவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல், அவர்களது தற்போதைய நிலையைப் பலப்படுத்துதல், அனைத்துநீதியாளர்களினதும் ஒருமித்த கருத்தை இணைத்தல் போன்வற்றிற்காகவே பல்வேறு ஒன்றுகூடல்கள் நிகழ்த்தப்பட்டன. காலநீடிப்பிற்கான அடிப்படை இதுவேயாகும். 


இந்தத்தீர்ப்பாயம் - 3 தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவுநாளில் வெளியிடப்படுவதை உண்மையில் நாம் தீர்மானிக்கவில்லை. பெண்கள் மீதான அடக்குமுறைகளை ஒழித்து, அவர்களைப் போராட்டத்தில் இணைத்த லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவுநாளில் இத்தீர்ப்பு வெளிவரும் என்பதை நாமும் எதிர்பார்த்திருக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதியான, Anna Esther Cecena அவர்களே இந்நாளை எமக்கு அறியத்தந்தார். அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம், பெண்போராளிகளது சாட்சியங்களை உள்ளடக்கிய தீர்ப்பாயம், அதைத்தலைமையேற்று நடாத்திய நீதிபதியும் ஓர் பெண் என்ற அடிப்படையில், மீளவும் பெண்களின் வலிமையைத் தமிழீழத்தின் சார்பில் உலகறியச் செய்யும் மாதமாக இது யேர்மனிய மண்ணில் நிகழ்கிறது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நிகழ்த்தும் அதிசயமாகவே இதை நாம் பார்க்கிறோம்.


25.09.2023 அன்று யேர்மனியின் Frankfurt நகரில் தீர்ப்பாயமுடிவுகள் வெளியிடப்படுகின்றன. 24.09.2023 அன்று அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம் நிறைவுறுகிறது. தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவுநாளில், அவர் தமிழீழப் பெண்களைப் போராட்டத்தில் இணைத்து "சுதந்திரப்பறவைகளாக" மாற்றியதை நினைவுகூர்ந்து, தமிழினப்படுகொலையின் பின்னதாக மீளவும் பெண்கள் உலக அரங்கில் எழுந்துநிற்கிறார்கள். 


பெண்விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை என்ற தேசியத்தலைவரின் வார்த்தை தொடர்ந்தும் எம்மண்ணில் நிலைபெறும். அதை உலகெங்கும் வாழும் தமிழீழப்பெண்கள் நிகழ்த்துவர்.


(தீர்ப்பாய முடிவுகளை இணையவழியிலும் காணலாம்)


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.