இது மனவுறுதிக்கான காலம்......!!

 


ஒவ்வொரு வேளையும்

பசி முட்டி

ஊசியாய்  நீளக்குடலை

தாக்கும் போது

பன்னிருநாளும்

கண்களை நனைக்கிறது!


இதங்களை அழுத்தி 

ஆழமாய் தைக்கிறது

அண்ணா!


பார்த்தீபா

மக்களுக்காக 

மக்களின்

உரிமைக்காக 

உயிராயுதமாய்

உன் உடலை

கோரிக்கைகளால்

கொழுத்திப்போட்டாய்!


பாரதமோ

வன்மப் பசியடங்கி

கொழுத்திய பசி

நெருப்பை

அணைத்து

உன் உயிர்பிரியா

வரத்தினை

எமக்களிக்குமென

ஏங்கி நின்றபோது

தாங்க முடியா

வலியினை

தந்துபோனது!


ஒவ்வொரு ஆண்டும்

உன் நினைவுத்தடங்களை

கடக்கையில்

ஓர்மமாய் நின்ற

மறத்தழகும்

கூர்மையாய் நின்ற

அறத்தழகும்

ஆரத்தழுவுதைய்யா!


மக்களுக்காக 

கண்ட கனவு

மெய்ப்பட

நெறி பிறழாக்

கொள்கை வழி

நிற்கவேண்டுமென்று

நெஞ்சம் நினைக்குதய்யா!


அஞ்சுவதும் துஞ்சுவதும்

அடிமைகளாய் நிலைக்குமென்று

அடிமனசு வெடிக்குதய்யா!


ஆதலால் 

கனவுகளை

காதல் செய்து

கால்களோ

நீதியின் வாசல் தேடி

உரிமைக்காய்

நகருதய்யா!


உயிருள்ளவரை

உமை மறவாது

உங்கள் மரபு வழியை

சிதையாது

எங்கள் பயணங்கள்

தொடரும்!


அது தலைவன் மொழியில்

மட்டுமே

படரும்!


நீங்கள்

நினைவிடங்களை

சிதைக்கலாம்

ஆனால்

நினைவுகளையும்

கனவுகளையும்

ஒருபோதும்

அழிக்க 

முடியாது!

அது

ஆன்ம பலமாய்

வியாபித்து 

நிற்கிறது!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.