தியாக திலீபனை அகற்றிவிடுவது இன்னும் நூறாண்டு சென்றாலும் முடியாது!

 


தியாகி திலீபன் நினைவேந்தலை எல்லாத் தடைகளையும் மீறி நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இது வாக்கு வேட்டையாடும் உத்தி என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அந்த விமர்சனங்களில் உண்மையிருக்கிறதா?.


மக்களின் வாக்குகளைப் பெறுவதானால் இரண்டு முதன்மையான வழிகள் உண்டு. 

1) மக்களுக்கு பிடித்தமான விடயங்களைச் செய்வது

2) மக்கள் வேண்டுவதைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்குவது


இதில் முதலாவதனை முன்னணி செய்திருக்கிறது.


தமிழ் மக்களின் கூட்டு மனவுணர்வில் நிரந்தராக இடம்பிடித்திருக்கும் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது முன்னணி.


இதனையேன் மற்ற அரசியற்கட்சிகளால் செய்ய முடியவில்லை?


ஒன்று, தியாகி திலீபன் வரித்துக்கொண்ட கொள்கைகளுக்கு நேர்மையாக அவர்களால் இருக்க முடியாது.


இரண்டு, பிராந்திய வல்லாதிக்கம் என்று கூறிக்கொள்பவர்களை இவற்றால் பகைக்க முடியாது.


மூன்றாவது, பதின்மூன்றாம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொண்டவர்கள் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல் செய்கிற கூத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


முன்னணியின் தலைவரும் செயலாளரும் நாட்டில் இல்லாத நிலையில் செயற்பாட்டாளர்கள் அதிலும் பெண்கள் முனனின்று இந்தக் கடமையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள்.


இதுபொறுக்காமல், இன்னொரு குதர்க்கத்தை சில இந்திய சார்புப் பத்தி எழுத்தாளர்கள் அவிழ்த்துவிட்டுள்ளார்கள். தியாகி திலீபனை நினைவேந்துவதனை இந்தியா விரும்பாது என்பதனால் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகொண்ட சிறிலங்கா அரசாங்கம் முன்னணியின் செயற்பாட்டுக்கு மறைமுகமான ஆதரவை வழங்கியிருக்கிறதாம். அதனால் நினைவேற்தலைக் குழப்ப விரும்பவில்லையாம்.


நிகழ்வை நிறுத்தக்கோரி சிறிலங்கா காவற்துறை யாழ் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ததையும், வழக்குக்கு தேவையான ஆவணங்கள் கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் கொண்டுவரப்பட்டதனையும் யாழ்ப்பாணத்தில் வாழும் இந்தப் பத்தியாளர்கள் அறியாதிருக்க நியாயமில்லை.


ஆக, தமிழ்த் தேசியத்தின் உச்சக் குறியீட்டை நினைவுகொள்ள சிறிலங்கா பேரினவாதம் அனுசரணை வழங்கியிருக்கிறதாம். பத்தி எழுத்தாளர்களின்இத்தகைய குதர்க்கங்களை மக்கள் கணக்கில் எடுக்கப்போவதில்லை.


எத்தகைய தடைவிதிப்பினும் தமிழ் மக்களின் கூட்டு மனவுணர்விலிருந்து தியாக திலீபனை அகற்றிவிடுவது இன்னும் நூறாண்டு சென்றாலும் முடியாது என்பதனையாவது இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கோபி ரத்னம்

பிரித்தானியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.