ஈரத் தீ (கோபிகை) - பாகம் 17!!

 


அன்றைய பின் மாலைப்பொழுதில் துயர் நிறைந்த அந்தச் செய்தி காற்றிலே கலந்து அனைவருக்கும் வந்து சேர்ந்தது.


வைத்தியசாலையில் சிலர் இது பற்றியே கூடிக்கதைத்துக் கொண்டிருந்தனர்.

பொத்துவிலில்  இருந்து புறப்பட்டு நல்லூர் வரை பேரணியாக வந்து கொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஊர்தி சிங்கள பிற்போக்குவாதிகளால்  கிழித்து எறியப்பட்டு , ஊர்தியோடு பயணித்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாம்.

அகிம்சையின் மீது நடத்தப்பட்டிந்த ஆக்கிரமிப்பு தமிழ் மனங்களை எல்லாம் வலிக்கச் செய்திருந்தது.

அகிம்சையின்  தேசமென்று பேசப்படும்  பாரத தேசம் பட்டினிப்போராட்டத்தை விருப்புடனே பார்த்து ரசித்த காலங்கள்  தானே...
திலீபன் அண்ணாவின் உண்ணாநோன்பின் காலங்கள்.

அன்று,  வாய்திறக்கவில்லையே பாரதம்.

மருத்துவ மாமகன், சருகெனக் காய்வதை அன்று உலகம் வேடிக்கை தானே பார்த்தது.

எண்ணங்கள் மனதை உலுக்க,  நெஞ்சு கனக்க அமர்ந்திருந்தேன். 

அப்போது, மேகவர்ணனோடு, வந்த தேவமித்திரனை நான் கவனிக்கவில்லை.

வீதியில் கிழித்து வீசும் அளவிற்கு திலீபன் அண்ணா என்ன செய்தார்? இந்தக் கேள்விதான் எனக்குள் உழன்றுகொண்டிருந்தது.

ஜனநாயக வழியிலான முயற்சிகள் தோற்றுப் போனதால் அகிம்சையை  ஆயுதமாக்கியதா அவர் செய்த தவறு?

இணையதளங்களும் முகநூல்களும் இந்த விடயத்தையே ஆற்றாமையாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

ஒவ்வொன்றையும் பார்க்கப்பாரக்க இதயம் வெடிப்பது போல இருந்தது.

என் முன்னால் அவர்கள் இருவரும் அமர்ந்த பின்னர் தான் சுய உணர்வு பெற்றேன்.

"என்ன டொக்ரர், ஒரு மாதிரி இருக்கிறியள்?"  மேகவர்ணன் கேட்டதும்,  விழி நிறைத்த நீரை அவசமாகத் துடைத்தபடி  பார்த்தேன்,  அருகில் தேவமித்திரன்.

"ஒன்றுமில்லை" என்றது உதடுகள்.

"எங்கட நிம்மதிக்காக, எங்கட சந்தோசத்துக்காக உருகிப்போன திலீபன் அண்ணாவின்ரை  ஊர்தியை இப்பிடி சுக்குநூறாக்கிப்  போட்டாங்களே என்ற வருத்தம் தானே சமர்க்கனி?"

என்று கேட்ட தேவமித்திரனிடம் நான் எதுவும் சொல்லவில்லை.

"என்ன இந்தப் பக்கம்? "  குரலைச் சாதாரணமாக்கி கேட்க முயற்சித்தேன்.

தேவமித்திரனின் கண்களில் இருந்த வலியை என்னாலும் உணர முடிந்தது.

"நாளைக்கு , இதோடு இன்னும் ஒரு ஊர்தி, வன்னியில் இருந்து வெளிக்கிடப்போகிறது.
அந்த அலுவல்களுக்காக வந்தனான்,  அப்படியே , வர்ணனையும் உங்களையும் பார்த்திட்டுப் போவம் எண்டு....வந்தனான்."

"ஓ......என்ன குடிக்கிறீங்கள்?" எனவும்
"அதொண்டும் வேண்டாம், நான் சும்மா கதைச்சுக்கொண்டு இருப்பம் என்றுதான் வந்ததே....

"பாத்தியே மச்சான் , உந்தச் சிங்கள காடையள் என்ன செய்திருக்குதுகள் எண்டு,..." மேகவர்ணன் சொல்ல.

"அடிமட்ட சிந்தனை இது, ஒரு உன்னத மனிதனின் ஊர்தியை இப்படி அலங்கோலப்படுத்தி இலங்கை அரசாங்கம் தன்னைத்தானே அசிங்கப்படுத்தியிருக்கிறது.  அதுவும், இலங்கை பொலிசார் பார்த்துக் கொண்டிருக்க இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது,  ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு உள்ளது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் புலம்பெயர் உறவுகளும் உலக நாடுகளும் அறிந்துகொண்டிருப்பார்கள்.  திரும்ப ஒரு போரை எதிர்கொள்ள ஆசைப்படுகிறினினம் போல...."
சொன்னது தேவமித்திரன்.

"என்னால் தாங்க முடியேல்லை, திலீபன் அண்ணா என்ன செய்தவர்,  இனியாவது எங்கட தமிழ்ச் சனம் ஒண்டா சேர்ந்து நீதி கேட்குமோ எண்டுதான் கவலையா கிடக்கிறது "  என் வார்த்தைகளைத்  தேவமித்திரனும் மேகவர்ணனும்  ஆழமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.


தீ .....தொடரும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.