ஈரத்தீ ( கோபிகை) - பாகம் 18!!
கடும் வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்று வீசி, சூழலையும் மனங்களையும் இதப்படுத்திக் கொண்டிருந்தது.
அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து சமைத்துவிட்டு, வெளியே வந்தான் தேவமித்திரன்.
அகரனும் அன்று தேவமித்திரனோடு தான் நின்றான். இன்னும் தத்தெடுப்பதற்கான சட்ட அலுவல்கள் முடியாத போதும், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அகரனின் வீட்டிற்கு அருகில் இருந்து தெரிந்தவர்கள் வந்ததால் , அவர்களோடு
அகரனும் வந்திருந்தான்.
பசுமை வற்றிப்போன அகரனின் பாலை விழிகளுக்குள், ஒளியைக் கொண்டு வரவேண்டும் என்பதே தேவமித்திரனின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பக்கத்து வீட்டு பாமதி அக்காவின் மகனோடும் வேறு இரண்டு சிறுவர்களோடும், முன் காணியில் கிட்டிப்புள் ஆடியபடி,
"இனியன்....ம்....ம்...."
என விளையாட்டின் குதூகலத்தில் மகிழ்வோடு சத்தமிட்டுக் கொண்டிருந்தான் அகரன்.
பார்ப்பதற்கு அத்தனை மகிழ்வாக இருந்தது தேவமித்திரனுக்கு. அகரனையும் அவனது கனவுகளையும் கலையாமல் , செழிப்பாக்கிவிடலாம் என்பதில் இப்போது முழு நம்பிக்கை ஏற்பட்டிருநதது.
அகரனைப் பொறுத்தவரை, இந்தப் பாசக்கூட்டிற்குள் தானும் பொருந்திக் கொண்டோம் என்கிற மகிழ்வுதான் ஏற்பட்டிருந்தது.
அவனது ஒவ்வொரு செய்கைகளிலும் அந்த மகிழ்ச்சி வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. கண்கள் கனிய கனிய கவிதைகளைப் படித்த ஒருவன் எவ்வாறு புழகாங்கிதம் அடைவானோ , அப்படி இருந்தது , அந்த இரண்டு நாட்களில் அகரனின் மனநிலை.
அகரனுடைய சந்தோசம், தேவமித்திரனையும் சந்தோசப்படுத்த, படியிறங்கி கீழே வந்தான்.
"அகரன்.....சாப்பிடலாம் வா...."
என்றுவிட்டு,
"இனியன் நீயும் வாடா...." என்றான்.
"இல்லை மித்ரன் மாமா, அம்மா சாப்பாடு கொண்டு வருவா, நான் வீட்டிலேயே சாப்பிடுறன்" என்று பதில் தந்த இனியனிடம்,
அம்மாவுக்கும் சேர்த்துதான் சமைச்சனாங்கள், தாத்தா , காலையிலையே பாமதி அக்காட்டைச் சொல்லிப் போட்டார், நீ வா, வந்து சாப்பிடு" என்றதும்
அகரனுடன் கூடவே நடந்துவந்தான் இனியன்.
"நீங்கள் போய், கைகால் கழுவிக்கொண்டு வாங்கோ, நான் வாழை இலை வெட்டிக்கொண்டு வாறன் " என்று விட்டு தேவமித்திரன் வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்குச் செல்ல, சின்னவர்கள் இருவரும் தொட்டியை நோக்கி நடந்தனர்.
தகப்பனாருக்கு சிறிய தட்டு ஒன்றில் சோறு போட்டு, அவருக்காக உப்பு, உறைப்பு குறைத்துச் சமைத்த கறியை விட்டான். கூடவே அவித்த முட்டைகளில் ஒன்றையும் கீரைக்கடையலில் சிறிதளவும் வைத்துவிட்டு, தந்தையாரிடம் தட்டை நீட்டினான்.
"எனக்கேனப்பு , முட்டை எல்லாம்...... " என அலுத்துக்கொண்ட தந்தையிடம்,
"அப்பா....இண்டைக்கு ஒரு நாள்தானே.....நெடுக இப்பிடிச் சாப்பிடுறேல்லைதானே .....சாப்பிடுங்கோ" என்றான்.
'அகரனும் இனியனும், 'சாப்பிடுவாரோ இல்லையோ' என்று சந்தேகத்துடன் பார்க்க,
அவரும் சிரித்தபடியே சாப்பிடத்தொடங்கினார்.
இவர்கள் இருவரும் தேவமித்திரனுமாக பெரிய வாழை இலையில் சோற்றைப் போட்டு ஊர்க்கோழி இறைச்சி கறியும் கத்தரிக்காய் வெள்ளைக்கறி, கீரை கடையல் அவித்த முட்டை எல்லாவற்றையும் வைத்தனர்.
பின்னர், "அகரன்,இனியன் சாப்பிடுங்கோடா" என்று விட்டு, தானும் சாப்பிடத் தொடங்கினான் தேவமித்திரன்.
மகனையே பார்த்த தேவமித்திரனின் தந்தையாருக்கு கண்கள் வெகுவாக கலங்கிவிட்டது.
வருத்தம் வந்த நாள் முதல் அவருக்குப் பத்தியமாகச் சமைப்பதையே சாப்பிடுகின்ற மகன், இன்றுதான் சற்று சுவையோடு சாப்பிடுகிறான் என நினைத்தபோது கண்கள் கலங்கியது.
தந்தை விழி நீரைத் துடைப்பதைக் கண்டவுடன்
" என்னப்பா...... சரக்குத்தூள் கூடிப்போச்சோ' என்று கேட்டதும்,
"இல்லை....இல்லை" என்றவர், கண்ணில் தூசி பட்டுவிட்டது என்று விட்டு சாப்பிடத்தொடங்கினார்.
அகரனும் புன்னகையோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
மகனுடைய மகிழ்ச்சி தேவமித்திரனின் தந்தையாருக்கும் மனநிறைவையே கொடுத்தது.
தன் மகனின் வாழ்க்கையில் அகரனின் வரவு ஏதோ மாற்றத்தை உண்டுபண்ணிவிடும் என அந்த தந்தை மனம் நம்பியது.
தீ .....தொடரும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை