மலர்ந்த கார்த்திகையின் பிறப்பால்!


 மலர்ந்த கார்த்திகையின்

பிறப்பால்
கலங்கிக்கொண்டிருக்கிறது
என் மனம்
ஓடியாடி கூடிக்குலாவி
தோள்தந்த தோழியரும்
இரத்தமும் சதையுமாய்
தியாகத்தின் சிகரங்களாய்
புதைத்தனரே கல்லறைக்குள்
அங்கோ
ரவை துளைத்து
குருதி வழிந்தோடுவதைப் பார்த்து
கானக பட்சிகளுக்கும்
அழுததைக் கண்டேன்
இங்கோ
துயர் சுமக்கும்வேளை
நகைப்போடு கடக்கும் சிலரால்
நானும்தான் வியர்ந்தேன்
சீறிவந்த எரிகுண்டு
முகத்தை பதம் பார்த்ததனால்
கருப்பான முகமென்று
திருமணச் சந்தையிலே
கூறுவிலை போட்டு
கேட்கின்றார் பல லட்சம்
ஒற்றைக்காலை இழந்ததனால்
பொருமிய மனதோடு
தாய்த்தேசம் தந்த பரிசென்று
காலத்தை கடத்துகிறாள்
இன்னொருத்தி
ராசி இல்லாத சுடரினியோ
கணவனைத் தேடுகிறாள்
காணாமல்போனார் பட்டியலில்
கார்த்திகை மாதம் என்றாலே
கண்ணீரும் கம்பலையும்தானென
ஓலமிடுகிறாள்
மானமாவீரனின் தாயொருத்தி
சிறைப்பட்ட போதிலும்
மகிழ்வாக இருந்தவர்கள்
அந்தோ துடிக்கின்றார்
இவ்வாழ்க்கை போதுமென
இதனால்தானோ
மலர்ந்த கார்த்திகையின்
பிறப்பால்
கலங்கிக்கொண்டிருக்கிறது
என் மனம்.....!
-பிரபா அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.