உயிர்க்கிறது காலப்பெருவெளி..!

 


கருக்கொண்ட வானம் 

இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில் 

சாலையைக் கடக்கின்ற தாயின் 

கண்ணீர்க்கோடு 

கரைந்து மறைகின்றது, 

தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து

சிதறி விழுந்த மணற் துளிகள் 

மழையில் கரைந்து அழுகின்றன, 

அன்றொருநாள் தூவப்பட்ட பூக்களின் நினைவுகளில் 

வேலியோரப் பூவரசு இலைகளைச் சொரிந்து 

தன் கிளைகளை அசைக்கின்றது,

மூடிய வாய்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளும்

இசைக்கப்படும் கீதங்களும் 

உள்ளங்களில் தீபம் ஏற்றுகின்றன, 

அடித்தும் உடைத்தும் வீசப்பட்ட 

சிதிலங்களில் 

தெரிகின்ற முகங்களில் 

சிந்தப்படும் புன்னகையில்

உயிர்க்கிறது காலப்பெருவெளி..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.