உங்களை வணங்குகிறோம்!


கனவுகளை உரசி கனத்த நினைவுகளை பிரசவித்து

விதைத்த விதைகளின்

தியாகத்தினை இதயவறைகளில்

இருத்தியவாறு காலமூச்சு

சூடு தணியாது வீசி எழுகிறது!


இது வீரியமானவரின் மாதம்

விடுதலை என்ற சத்திய இலட்சியத்திற்காக சாகத்

துணிந்தவரின் நினைவுக்காலம்!


கருவில் சுமந்த பிள்ளைகளையும்

தோளில் சுமந்த குழந்தைகளையும்

தமிழின விடுதலைக்காக தனிமையில் விட்டுப்போனோரும்

தங்கள் விதைகளை தாங்களே

நிலம் கீறி விதைத்தோருமென

நீண்டு விரியும் பெரும் தியாகத்தை

நெஞ்சிலே தாங்கி நிற்கும் காலம்!


அண்டம் திரண்டபோதும் 

கொண்ட கொள்கைக்காக

மண்டியிடாது மண்விடுதலையை

திண்ணமாக உரைத்து

மாண்ட மறவரின் மாதம்!


எங்கள் புனிதர்களின் அறத்திற்கு

இறப்பு என்பது ஒருபோதும் இல்லை!

அவர்கள் கனவுகள் ஒருபோதும்

மறக்கடிக்கப்படப் போவதுமில்லை!


நாங்கள் உங்கள் நினைவுகளையும்

கனவுகளையும் இருதயத்தில்

ஆளமாய் இருத்தி இருக்கும் வரை

எதிரியினதும் அதன் உதிரியினதும்

சூட்சுமங்கள் கண்ணாடியாய்

நொருங்கும்!


உங்களை மறக்கவும் மாட்டோம்!

மறக்கடிக்க விடவும் மாட்டோம்!


நீங்கள்

எங்கள் விடுதைக்கான வரலாற்றுப்

புத்தகங்கள்

உங்களை படித்துக்கொண்டே இருப்போம்!


அது

எங்களை வழிநடத்திச் சென்று

ஒருநாள்

இலக்கின் எல்லையை

அடையும்!


அதுவரை

அடைமழையாய்

பொழிவோம்!

விடுதலைப் பயணத்தில்

விளிப்பாய்

இருப்போம்!


✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.