மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் 2023!
‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ நான்காவது ஆண்டாக “நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் ஐரோப்பிய நேரம் காலை 9.01 மணிமுதல் மாலை 18.00 மணிவரை இணைய வழியில் நடாத்தப்படவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
“தமிழீழப் போராட்டம் ” தொடர்பான பரந்துபட்ட கேள்விகளும் பன்னாட்டுப் போராட்டங்கள் சார்ந்த கேள்விகள் மற்றும் நிகழ்கால உலக விவகாரங்கள் அடங்கியதாக இத்திறனறிதல் இருக்கும் என்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
நிறைவில் உடனடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும் இத்திறனறிதல், தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மூன்று மட்டங்களில் நடாத்தப்பட்டுள்ளது.
‘வரலாற்றைப் படி ! வரலாற்றைப் படை’ எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய இளையோரிடத்தேயும் பொதுமக்கள் மத்தியிலும் எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றை புதிய தொழில்நுட்பத்தூடு கொண்டு செல்வதே இத்திறனறிதலின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ள தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
1) திறனறிதலில் “அகவை வேறுபாடின்றி ” அனைவரும் பங்குகொள்ள முடியும்.
2) ஒருவர் “ஒரு தடவை மட்டுமே ” திறனறிதலைச் செய்யலாம்.
3) குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.
4) “நேரம் கடந்து ” முடிக்கப்படுமிடத்து சான்றிதழ்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற மாட்டாது.
5) தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
6) தமது பெயர்கள் பிழையாக குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கப்பெறும் என்பதோடு மாற்றம் செய்யமுடியாது என்பதை கவனத்திற்கொள்க.
7) Icloud மின்னஞ்சல் முகவரிகளைத் தவிர்க்கவும்.
8) கணினி, வரைபட்டிகை (Tablette).திறன்பேசிகளில்(Smartphone) மட்டுமே திறனறிதலைச் செய்யவேண்டும்.
காலச் சூழல்களே மாந்தர்களின் இயங்குநிலையையும் இருப்பையும் தீர்மானிக்கிறது.
உலகின் அரசியல், பொருண்மிய, வணிக, அறிவியல் தொழில்நுட்பத் தரவுகளும் எமது வாழ்வியலில் உள்ளடங்கியிருக்கின்றன.
உலகளாவிய தமிழர்களின் வரலாறு தொடரவேண்டுமானால் எமது கடந்தகால வரலாற்றினையும் கற்க வேண்டிய தேவையுள்ளது. இதற்காகவே “வரலாற்றுத் திறனறிதல்” இணையவழியூடாக நடாத்தப்படுகின்றது.
இந்த தொலைநோக்கைப் புரிதலாக்கிக்கொண்டு அதில் பங்குகொள்வதன் மூலம் வரலாற்றறிவூடு எமது விடுதலையை விரைவாக்குவோம்.
கருத்துகள் இல்லை