தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 அனைத்துலகத் தொடர்பகம்.!

 


25.11.2023


நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச்சந்ததியின் சுதந்திர வாழ்விற்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மானமாவீரர்களை நினைவு கூரும் எழுச்சிநாளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அனைத்துத் தமிழீழ மக்களும் எழுச்சிகொண்டு, மாவீரச்செல்வங்களுக்கு மலர்தூவி நெய்விளக்கேற்றி நினைவேந்தும் நாள் நெருங்கிவிட்டது. தமிழீழ மக்களாகிய நாம் எமது மாவீரர்களைக் கண்முன்னே கொண்டுவந்து அவர்களுடன் பேச ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகவே போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த எம் மாவீரர்கள் மகத்தானவர்கள். எம் மாவீரர்களின் அற்புதமான தியாகங்கள் அவர்களின் உயரிய அற்பணிப்புக்கள் அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள், ஏக்கங்கள் அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றையும் கொண்ட ஒட்டு மொத்த வெளிப்பாடாகவே எமது விடுதலைப்போராட்ட வரலாறு இன்றும் வழிகாட்டிநிற்கின்றது.

எமது மண்ணின் விடுதலைக்காக தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்களையும்; உடன்பிறப்புக்களையும் உரித்துடையோர்களையும் எமது தேசம் என்றும் போற்றிநிற்கின்றது. எமது மண்ணில் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் உடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர்களை நினைவேந்திட தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் பேரெழுச்சிகொண்டுநிற்கின்றனர்.

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களை மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கமான சிந்தனையில் உருவான மதிப்பளிப்பு நிகழ்வானது ஒரு தேசிய நிகழ்வாகவே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மாவீரர்களைத் தந்த பெற்றோர்களே! அவர்தம் குடும்பத்தினர்களே! தாங்கள் வாழும் நாடுகளில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பெற்ற இடத்தில் நடைபெறும் மதிப்பளிப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.

எமது வீரவிடுதலை வரலாறு, எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில், பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து எம்மைத் தலைநிமிரவைத்து, வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே. இம் மாவீரர்களை நினைவேந்திடும் தேசிய நாளான நவம்பர் 27ல் நெய்விளக்கேற்றி வணக்கம்செலுத்துவதோடு, தமிழீழம் விடுதலையடையும்வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோம்.

 புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

மாவீரர் பணிமனை
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.