தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை!


 தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27.11.2023எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!


இன்று மாவீரர்நாள். 


தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றி நினைவேந்தி உறுதிகொள்ளும் எழுச்சிநாள்.


உலகில் மிகவும் தொன்மையான எமது தேசிய இனத்தின்  சுயநிர்ணய உரிமையை மீட்டெடுத்து, சொந்த மண்ணில் எமது மக்கள் தன்மானத்தோடு சுதந்திரமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளிற்காக மடிந்த மானமறவர்களை நினைவேந்தி வணக்கம் செலுத்தும் தேசிய நாள்.


எமது போராட்டப் பாதையில் ஒப்பற்ற தியாகங்கள் புரிந்து, எண்ணற்ற வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து, அளவிடமுடியாத மகோன்னத அர்ப்பணிப்புகளைச் செய்து, எமது தேசத்தின் நீண்ட போராட்ட வரலாற்றுச் சக்கரத்தை ஓயாது உந்திக்கொண்டிருப்பவர்கள் எமது மாவீரர்கள்.


மாவீரர்கள் புரிந்த ஈடிணையற்ற தியாகங்களும் அவர்கள் படைத்த வீர வரலாறுகளும் எமது போராட்டப் பாதையில் எமக்கு ஆன்ம மனவலிமையைத் தருகின்றன. புதிய உத்வேகத்தோடு தொடர்ந்தும் எம்மைப் பயணிக்கவைக்கின்றன. இந்த வரலாற்று நாயகர்களைப் பெற்றெடுத்து, தாய்நாட்டுக்காக உவந்தளித்த பெற்றோர்களும் அவர்தம்; குடும்பத்தினரும்  என்றுமே போற்றுதற்குரியவர்கள். இவர்கள் என்றும் தமிழீழத் தேசத்தின்; பெருமதிப்பிற்குரியவர்கள்.


எமது மாவீரர்களின் அளப்பரிய அர்ப்பணிப்புமிக்க உறுதியான போராட்டமே இன்று தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை உலகறியச்செய்துள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் உள்நாட்டு வரம்புகளை மீறி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி, சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தீவின் பூகோளக்கேந்திர நிலையும், இந்தியாவின் ஆதிக்க அபிலாசைகளும், உலக முதலாளித்துவத்தின் வர்த்தக விரிவாக்கப் போட்டிகளும் பின்னிப்பிணைந்து ஒரு சிக்கலான பரிமாணத்தை அடைந்திருக்கிறது. இதனால், எமது இனத்தின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் பெரும் இடையூறுகள் இருந்துவருகின்றன. இந்தச் சவால்களையும் நாம் எதிர்கொண்டுதான் எமது விடுதலையை வென்றெடுக்கவேண்டியுள்ளது. 


தமிழ் மக்களிற்கெதிராக சிறிலங்கா அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறைகள், படுகொலைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தபோதும் அதற்கான தீர்வேதும் கிடைக்காத நிலையில், 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான தீர்மானத்தின் அடிப்படையில், 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் தமிழீழத்திற்கான தமது ஆணையினை வழங்கியிருந்தனர். அதன் பின்னரான காலத்தில் பல அடக்குமுறைகளையும் அழிவுகளையும் சந்தித்து, 2009 இல் முள்ளிவாய்க்காலில்  பேரழிவினைச் சந்தித்து இன்றுவரை தமிழின அழிப்பிற்குள்ளான இச்சூழமைவில் தமிழீழத் தனியரசுக்கான மக்கள் கோரிக்கை இன்னும் பலமடங்கு வலுப்பெற்றுள்ளது என்பதே நிதர்சனமாகும்.


தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல், இராணுவமயமாக்கல், நிலஅபகரிப்பு, மொழி, பண்பாட்டு அழிப்பு எனத் தமிழ் மக்களின் தேசியவாழ்வினை அழித்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தினையும் தனிச்சிங்களத் தேசமாக மாற்றும் நடவடிக்கைகளைச் சிங்கள இனவாத அரசு முன்னெப்போதும் இல்லாதளவிற்குத்  தீவிரப்படுத்திவருகின்றது. இதன் ஓர் அங்கமாக, எமது குமூகாயத்தில் போதைப்பொருள் பாவனைத் திணிப்புகளும் வன்முறைக் கலாச்சாரமும் திட்டமிட்டுப் பெருகவிடப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தில் சிங்கள இனவாத அரசினால் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் கைதுசெய்யப்பட்டுப் பலர் படுகொலைகள் செய்யப்படுவதும்  சாதாரண விடயங்களாகக் கொள்ளப்படுவதோடு, தமிழ்மக்கள் நிம்மதியின்றி அச்சத்தோடு வாழ்தல் எனும் நிலமை தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதேவேளையில் இனவழிப்பை நடாத்தி ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் தமிழீழத்தைக் கரைப்பதற்கு, சிங்கள அரசும் அதன் பின்னால் இருக்கக் கூடிய வல்லரசுகளும், தங்களுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. சிங்கள அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பானது எந்தவொரு கட்டத்திலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்பதனால், அதனைத் தமிழ்மக்கள் அடியோடு நிராகரித்துவந்துள்ளனர். சிறிலங்காவின் மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்தும் - எதிர்த்தும் அல்லது அரசியலமைப்பின் உருவாக்கத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாமலும் ஒதுங்கியே இருந்துள்ளனர். 


இன்று, தனது கொரூரமான இனவாத முகத்தினை மறைத்து, சூழ்ச்சிகரமான ஓர் இனஅழிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவரும்  மக்கள் ஆணையற்று ஆட்சிசெய்துவருபவருமான  ரணில் விக்ரமசிங்கவிற்கு எதுவித நிபந்தனைகளுமின்றி ஆதரவு தெரிவித்துவரும் தமிழ் அரசியல் தரப்புக்களை எமது மக்கள் இனங்கண்டு நிராகரிக்கவேண்டும். ஒற்றையாட்சியை எதிர்த்து தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை ஏற்று, கொள்கைரீதியாக விட்டுக்கொடுப்பின்றி அர்ப்பணிப்போடு செயலாற்றிவரும் அரசியற்தரப்புகளை மிகவும் விழிப்புணர்வோடு கண்டறிந்து அவர்களிற்கு உங்களது முழுமையான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனஅழிப்பிற்கு ஓர் நீதியான அனைத்துலக விசாரணையே சரியான நடவடிக்கையாக அமையும் என்பதனை அறிந்தும் உள்ளகவிசாரணைக்கு ஒப்புதல் வழங்கி, இன அழிப்பினை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இனவெறி அரசைத் தொடர்ந்தும் தமிழ்க்கட்சிகள் காப்பாற்றிவருவது கவலைக்கும் கண்டனத்துக்கும் உரிய செயற்பாடாகும். தமது பதவிகளுக்காகவும் வெறும் சலுகைகளிற்காகவும் உரிமைகளை விற்கும் அரசியற்கட்சிகளின் செயற்பாடுகள் அருவருப்புக்குரியது. 


அன்பார்ந்த தமிழீழ மக்களே! 

உலகின் பல பாகங்களில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் போராடி விடுதலைபெற்ற அனைத்து இனங்களிற்கும் நாடுகளிற்கும் இருக்கும் அதே உரிமைகள் எமது மக்களிற்கும் எமது போராட்டத்திற்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர். 


வேறெந்தத் தெரிவுகளுமற்ற நிலையில் எமது மக்கள் தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வழிமுறையே தமிழினத்தைப் பாதுகாத்து நின்றது என்ற உண்மையைத் தமிழர்தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கைத்தீவில் நிகழ்ந்தவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை வலியுறுத்தி நிற்கின்றன.


மனித உரிமைகள் பேரவையில்தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறல் என்ற விடயம் வெறுமனே ஒரு பேச்சுப்பொருளாக மட்டுமே இருக்கின்றது தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற உண்மையான முழுமையான ஒரு பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இவை வல்லரசுகளுடைய நலன்சார் பூகோளப் போட்டியிலே சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவருவதற்கும் தொடர்ந்தும் சிறிலங்காவைத் தமது ஆதிக்க வட்டத்திற்குள் வைத்திருப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேசமானது பொறுப்புக்கூறல் என்ற விடயத்தைத் தங்கள் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தும் நிலமையை மாற்றுவதன் மூலமே தமிழ் மக்களிற்கான நீதியைப் பெற்றுகொள்ளமுடியும் என்பதனை உணர்ந்து  நாம் எமது போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்.


அன்பார்ந்த மக்களே!

எமது தாயகத்தில் தொடரும் நிலஅபகரிப்புகள், அரசியற்கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான போராட்டங்களெனப் பல வழிகளிலும் சர்வதேசத்திடம் நீதிவேண்டி மக்கள் போராடிவருகின்றார்கள். இப்போராட்டங்களை முடக்கி, தொடர்ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப்  போராடும் மக்களிற்கெதிராகப் பல நீதிமன்றத்தடைகளை ஏற்படுத்திவரும் சூழலில்  அவ்வாறான அச்சுறுத்தல்களையும் தாண்டி, இப்போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் கைதுசெய்து, இவ்வாறான பிரச்சினைகளுக்கு நீதிவழங்கிய நீதிபதிகளையும் அச்சுறுத்தி ஒரு மோசமான நிலமையினை ஏற்படுத்தி உரிமை மறுப்பைத் தொடரும் இச்சமகாலத்தில் தமிழர்களாகிய நாம் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பேரெழுச்சியோடு தொடர்போராட்டங்களை மேற்கொள்வது எமது வரலாற்றுக் கடமையாகும்.


எம்மண்ணில் துன்பங்களிற்கும் துயரங்களிற்கும் முகங்கொடுத்து, எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து, என்னதான் நிகழ்ந்தாலும் தாய்மண்ணிலேயே வேரூன்றி நிற்கவேண்டுமென்ற உறுதியோடு வாழும் எமது மக்களே, எமது போராட்டத்தின் அச்சாணியாகத் திகழ்கிறார்கள். அந்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சிறப்பிக்க உதவும் பாரிய பொறுப்பு இன்றும் எமது புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.


புலம்பெயர் தேசங்களில் தொடர்ச்சியான அரசியற்சந்திப்புகள், தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் மக்கள் போராட்டங்கள், ஈருருளிப்பயணங்கள், ஒளிப்படக் காட்சிப்படுத்தல்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள், நாடுகள் வாரியாக நிறைவேற்றப்படும் தமிழின அழிப்பிற்கு எதிரான தீர்மானங்கள், தமிழினப் படுகொலையாளர்களிற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், எமது நீதிக்கான சட்டரீதியான முன்னெடுப்புக்கள், எமது விடுதலைப்போராட்டத்தைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்களிற்கு எதிராக இளையோர்களால் சமூகவலைத்தளங்களில் நடாத்தப்படும் விழிப்புணர்வுகளென பல வழிகளிலும்  போராடிவரும் இச்சூழமைவில், எமது ஒன்றுபட்ட சக்தியைச்சிதைக்கும் நோக்குடன் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு செயற்பட்டுவரும் எமது மக்கள், தேசியச்செயற்பாட்டாளர்கள், இளையோர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் நாம் பாராட்டுவதுடன், தொடர்ந்தும் ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்கள், நாடுகள் வாரியாகத் தீர்ப்பாயங்களென எமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவேண்டியுள்ளதால்;, இவற்றை வெற்றிகரமாகச் செய்துமுடிப்பதற்கு எமது வாழ்விடநாடுகளின் அரசுகள், அரசியற்பிரமுகர்கள், மனிதவுரிமை அமைப்புகள், சட்டவல்லுனர்கள் பொதுமக்கள் என அனைவரையும் நாடி, எமது விடுதலைப்போராட்டத்தை முன்னகர்த்தும் தார்மீகப்பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிற்கும் உள்ளது.


அன்பான தமிழ்நாட்டு மக்களே!

எமது விடுதலைப்போராட்டம் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை எமக்கு நீங்கள் வழங்கி வரும் அன்பும் ஆதரவும் மிகவும் உணர்வுபூர்வமானது. கட்சி அரசியல் கடந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் எமது இயக்கத்தின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் ஆழமான அன்பினையும் மதிப்பினையும் நாம் அறிவோம். எமது எதிரியானவன் தமிழ்நாட்டு மக்களிற்கும் எமக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைக் காலந்தோறும் முன்னெடுத்து வருகின்ற பொழுதும் இவை அனைத்தையும் முறியடித்து இன்றளவும் எமது விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவினை நீங்கள் வழங்கிவருவது எமக்குப் பெரும் நம்பிக்கையளிக்கின்றது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசின் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுசெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மேற்கொள்ளவேண்டுமென அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். அது மட்டுமன்றி ஈழத்தமிழர்களிற்கான தீர்வாக, 13ஆம் திருத்தச் சட்டத்தினை இந்திய மத்திய அரசு திணிக்க முயல்வதனைத் தொடர்ந்தும் நீங்கள் எதிர்த்து, அதனைத் தடுத்து நிறுத்துவதோடு, தமிழீழத் தனியரசு அமைவதற்குத் தொடர்ந்தும் குரல்கொடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 


அன்பார்ந்த இளையோர்களே!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில்; இளையோர்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழீழ விடுதலைப்பயணத்தில் தற்பொழுது நீங்கள் முன்னெடுக்கும் பணியானது மிகக்காத்திரமானதாக அமைந்துவருகின்றது. இதன் வெளிப்பாடாக, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களது தலைமைத்துவப் பண்புகளும் தத்துவக் கோட்பாடுகளும் தமிழீழ விடுதலைபோராட்ட வரலாறுகளும் அடுத்த தலைமுறையினரிற்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சிகரமான திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுவருகின்ற இச்சூழமைவில் இளையவர்களாகிய நீங்கள் விழிப்போடு செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும். அத்தோடு தமிழ்த்தேசிய உணர்வு அழிந்துவிடாது பாதுகாப்பதும், தமிழ்த்தேசிய அடையாளத்தினைத் தக்கவைப்பதும் இளையவர்களது பெரும் பொறுப்பாகும். எமது மொழி, பண்பாடு, சுயமரியாதை போன்ற தேசியப்பண்புகளையும், இன அடையாளத்தினையும் நாம் பாதுகாப்பதன் மூலம் தாயத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் இளையோர்களாகிய நீங்கள், ஒருங்கிணைந்து   சிங்கள-பௌத்த மேலாண்மையின் கட்டமைப்புசார் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும்  தமிழீழப் போராட்டத்தை முன்னகர்த்தவும் இளையோர்கள் தொடர்ந்தும் முன்வரவேண்டும் என வேண்டிநிற்கின்றோம்.


அன்பார்ந்த மக்களே!

21ம் நூற்றாண்டில், தென்கிழக்காசியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்  வீரம்செறிந்த, தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் நிறைந்த வீரியமான  போராட்டமாகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மட்டுமே கருத்திற்கொள்ளலாம்.  2009 மே 18 இல், தமிழீழ விடுதலைப்புலிகள் தற்காலிகமாக ஆயுதங்களை மௌனிப்புச்செய்தனர்.  விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஆயுத மௌனிப்புக்காலம் வரை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே, பிரபாகரன் அவர்களின்  நேரடி வழிநடத்தலில்  தமிழீழ விடுதலைப்போராட்டம் படைத்த சாதனைகள் அசாத்தியமானவை. உலகப்பரப்பில் வேறெங்கும் நிகழாத அற்புதங்கள், காலநதியில் கரைந்து போகாத சரித்திரங்கள், தமிழினத்திற்கு மட்டுமன்றி உலகில் விடுதலை வேண்டிப்போராடும் இனங்களிற்கெல்லாம் கிடைத்த  வழிவரைபடம் இது.  கடந்த மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டத்தில் எண்ணற்ற இராணுவ  மூலோபாயங்களையும், விடுதலை அரசியல் மூலோபாயங்களையும், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வகுத்து அவற்றில் வெற்றியும் கண்டுள்ளார். இந்த வெற்றிச் செயன்முறைகளெல்லாம் தேற்றங்களாக, செயற்பாட்டுடன் கூடிய  சிந்தனைகளாக உலகப்பரப்பெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டுதான் உலக ஏகாதிபத்திய சக்திகள்  அஞ்சுகின்றன. குறிப்பாக தென்கிழக்காசியாவில் சுயநிர்ணய உரிமையுள்ள  பல தேசிய இனங்கள் அடக்கப்பட்டு ஏகாதிபத்திய சிந்தனைக்குள் முடக்கப்பட்டுள்ளன. சிறைவைக்கப்பட்டுள்ள தேசிய இனங்களுக்கெல்லாம் ஒரு விடுதலைத் திறவுகோலாகத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை விளங்கப்போகின்றது. இதைக்கண்டுதான் உலக ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். எனவே தமிழீழத்தேசியத் தலைவரின் சிந்தனையைச் சிதைத்து அழிக்கவேண்டுமெனில், தமிழீழத் தேசியத்தலைவரையும், அவர் கொண்ட இலட்சியப்பற்றையும், மாவீரர்களின் தியாகங்களையும், மொத்தத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மரபுரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட வரலாற்றையும் அழிக்கவேண்டும். இதுவே இன்று எதிரிகளாலும் அந்நியசக்திகளாலும் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழீழத் தேசியத்தலைவரின் வீரப்பண்புகளைக் கேள்விக்குறியாக்குதல். மாவீரர்களின் வீரச்சாவு சார்ந்த வரலாற்று வெளிப்பாடுகளைத் தடம்மாற்றுதல், விடுதலைப்போராட்டத்தின் இராணுவப் பரிமாண வரலாறுகளை  அழித்து, சாதாரண கிளர்ச்சிக்குழுக்களின் வரலாறுகள் போன்று வடிவமாற்றம் செய்தல்  போன்ற சதித்திட்டங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மிக நுணுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மரபுவழியிலான இயங்குநிலைக்கோட்பாட்டைச் சிதைத்தழிக்கும் நோக்கில் எதிரிகளாலும், துரோகிகளினாலும், திட்டமிட்டுக்  கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும்  பொய்ப்பரப்புரைகளை நாம் வன்மையாகக்கண்டிக்கிறோம். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக எதிரிகளும், அந்நிய சக்திகளும், துரோகிகளும் மேற்கொள்ளும் சதித்திட்டங்களையும் சவால்களையும், முறியடித்து மண்டியிடா வீரத்துடன் களமாடிய மாவீரர்களின் உளவுரணையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற விடுதலை உறுதியுடன், தமிழீழ இலட்சியத்தை வென்றெடுக்கும் வரை நாம் தொடர்ந்தும் போராடுவோம்.


‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.