தீபங்களைப் போற்றுங்கள்.... !!

 


தரையைத் தவிர்த்து விட்டு நதி நகர்ந்து விட முடியாது.  அதே போல மாவீரர்கள்  என்ற மகா உன்னதர்களை  உச்சரிக்காமல் தமிழினம் கடந்து விட இயலாது. 


விடியலுக்காக விதையாகிப்போன இவர்கள்,  காலம்,  கர்ப்பம் தரித்து பெற்றெடுத்த இரண்டாம் கடவுளர்கள். 


மாவீரர்களை நினைவுகூர்வது தடுக்கப்பட்ட நாட்களில் கூட,  அறை மூலைகளில் அன்றைய நாளின் தீபம் அணையாமல் எரிந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம். 


காலமாற்றமானது, தமிழர்கள் குறித்து  உலகத்திற்கு சில சிந்தனைகளைக் கொடுத்திருக்கிறது. சில  ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான்  அறநெறி நின்றவர்கள் குறித்து அதிக தேடலையும் எதிர்பார்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.  அதன் சூட்சுமங்களை ஆராய ஆரம்பித்திருக்கிறது.  உரிமை கோரல் என்பதை... ஏன், எதற்காக,  எப்படி என்று ஆராயத் தொடங்கியிருக்கிறது. 


மாவீரர்களின் கனவுகள் என்பது,  சாதாரணமானவை அல்ல.  மனித நெறியின்  மகத்துவம் எங்கள் மாவீரர்கள்.  உலகியலின் ஆச்சரியமாக, எப்போதும் நடைபெறாத இனிமேலும் நடத்த முடியாத என , சில களத்திடை  காரீயக் கனல்கள் எம்மவர்களுக்கே உரித்தானது. 


ஆகச்சிறந்த அன்பென்பது எங்கள் மாவீர மணிகளுக்கு   மட்டுமே சொந்தமானது.  அதிலும் கந்தகத்தை விழுங்கி கனலைக் கொப்பளித்தவர்களின் ஈகம் என்பது வார்த்தைக்குள் அடங்காத ஈரம். 


செருக்களம் நின்று செருக்குடைத்த எம் மறவர்கள் தமிழர் வாழ்விற்கும் தமிழர் பெயரிற்கும் என்றென்றும் நிலைபேறானவர்கள். 


தற்காலத்தில் மாவீரர்களின் அபிலாஷைகளை அழித்து,  அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தி,  இளையோரை, நாகரீக போர்வையில்,  சகதிக்குள் அமிழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் சில புல்லுருவிகள் செயற்பட்டு வந்தாலும் வழிவழியாக தம் பிள்ளைகளை இறை பக்தியோடு துதிக்கும் மனங்கள் உள்ளவரை எதுவும் சாத்தியமற்றதே.  

எம் பிள்ளைகள்,  வரலாறு பற்றியும் அதன்  ஆழ அகலங்கள் பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும்.   இஸ்ரேலைப்போல நாமும் செயற்படுதல் அவசியமானது. 


ஒவ்வொரு யுகங்களும்  ஒவ்வொரு சம்பவங்களையோ அல்லது ஒவ்வொரு மனிதர்களையோ வைத்து தான் நினைவு கொள்ளப்படுகிறது. அந்த வகையில்,  பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகள் தமிழின வாழ்வென்பது,  சேனையின் நாயகனைக் கொண்டு தான் நினைவுகொள்ளப்படும். தமிழரின் முகவரியானவன் வல்லையின் நாயகனே.. 


கலைப்பதும் கொண்டாடுவதும் மனதின் மார்க்கம் தான்.  தமிழர்கள் ஒரு ஜோதியாக  கொழுந்து விட்டு எரியாதவரை,  நாம் விடியல் காணுவது சாத்தியமில்லை.  தமிழரசி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.