ஈரத்தீ (கோபிகை) - பாகம் 22!!

 


அந்தக் கேள்வி எனக்குள் ஒரு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.


பதில் சொல்லத் தோன்றாமல், தலையை மேலும் கீழுமாக ஆட்டினேன்.

"அப்ப....முகநூலில் உங்கள் படத்துடன் காரிகா என்று பெயர் இருந்ததே."

அது எனது புனைபெயர். வீரச்சாவடைந்த எனது அக்காவின் பெயர்.

"அட, ராட்சசியே..." எனச் சிரித்த தேவமித்திரன், 
"அது சரி.....அப்பாவை ஆஸ்பத்திரி கொண்டு வந்த போதே உனக்கு என்னை அடையாளம் தெரிந்ததா?" என்றதும்
"ம்ம்......பாத்த உடனே, கண்டுவிட்டேன்"
என்றாள் சமர்க்கனி.

"ஏன் உடனே கதைக்கவில்லை,  என்னோடை இல்லாட்டியும் அப்பாவோடு  ஏன் கதைக்கவில்லை?" சற்றே கோபமாகக் கேட்டவனிடம்,

"மாமா....அண்டைக்கு வந்த நிலைமை,   உடனே அறிமுகம் செய்து கதைக்கிற மாதிரி இல்லை தானே, பிறகு, முகநூலில் உங்களுக்கு நட்பு அழைப்பு கொடுத்தனான், நீங்கள் ஏற்காததாலை ...பிறகு அழிச்சிட்டன்.

"பிறகும் இவ்வளவு நாள்.....நான் தான் என்று தெரிந்தால் மேகவர்ணனிட்டையாவது  என்ரை இலக்கத்தை வாங்கி கதைச்சிருக்கலாமே...."

"நான் என்னண்டு அவரிட்டைக் கேக்கிறது....? "

"அது சரி...இவ்வளவு பக்கத்திலை இருந்திருக்கிறாய்....ஆனால் நான்...."

"பரவாயில்லை விடுங்கோ... இப்பதான் தெரிஞ்சிட்டுதே...பிறகென்ன...அகரனைப்பற்றிச் சொல்லுங்கோ?  "மாமா.....எப்படி  இருக்கிறார், நான் ,  வர்ணன் அண்ணாட்டை மாமாவைப்பற்றி அடிக்கடி கேட்கிறனான்..."சமர்க்கனி சொன்னதும்

"என்னைத்தான்   விட்டிட்டியள் போல..."
என்ற தேவமித்திரனுக்கு அவளால் பதில்  சொல்ல முடியவில்லை.

உண்மையில் அவள் தேவமித்திரனைப்பற்றி கேட்காமல் விட்டதுக்கு காரணம் இல்லாமல் இல்லை.

அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதையோ அவனுடைய வாழ்க்கைத்துணை பற்றியோ  எந்த விடயத்தையும்  அறிந்து விடக்கூடாது என்பதில் ஆழ் மனதில் இருந்த அச்சமே அதற்கான காரணம்.

"சமர், சின்ன வயசிலை ஒண்டா படிச்சனாங்கள்,  பக்கத்திலை பக்கத்திலை   ஒரே குடும்பம் மாதிரி வாழ்ந்திருக்கிறம்,  உன்னுடைய வீடு என்னிலையும் என்னுடைய வீடு உன்னிலையும் வைச்சிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு ஆழமானது?, கமலா மாமி அடிக்கடி சொல்லும் விசயம் சமரைக் கைவிட்டிடாதை   எண்டுறது தான்....நான் தான் அதை மறந்திட்டன் "....தேவமித்திரன் சொல்ல,
"வீடெண்டு சொல்ல எனக்கு யாருமில்லை.....தவிர சுற்றுச்சூழல் எல்லாரையும் இப்படி ஆக்கிப்போட்டுது....இதிலை ஆரை குறைசொல்லமுடியும்?   என்ற சமர்க்கனியை

" நீ சொன்ன விசயத்தை அப்பா கேட்டால் துடிச்சுப்போவார், இனிமேல் இப்படி நீ யோசிக்கவேகூடாது...."  என்று விட்டு அவளோடு சேர்ந்து நடத்தான்.

சற்று தள்ளி தேநீர் கடை இருந்தது.
"வாங்கோ...
ஏதாவது மெலிதாக சாப்பிட்டுவிட்டுப் போவம்,  "
தேவமித்திரன் சொல்ல தயங்கி நின்றாள் சமர்க்கனி.

" சமர்....என்ன நீ, ஏன் என்னை வெளி ஆளாக நினைக்கிறாய்?  பொறு...பொறு.....அப்பாட்டப்போய்  எல்லாம் சொலுறன்...."

அவனது போலி மிரட்டலில் இருவரும் சிரித்தனர்.

அகரனும் வண்ணமதியும் இருபக்கமாக தேவமித்திரன்,  சமர்க்கனியோடு  நடந்து கொண்டிருந்தனர்.

"சமர்,  இந்த விசயத்தில் எவ்வளவு ஒற்றுமை பாத்தியா?" என்றான் இருபக்கமுமாக வந்த பிள்ளைகளைக் கண்களால் காட்டியபடி.

" ஓமோம்....ஆண்கள் , இப்படி ஒரு முடிவு எடுப்பது அபூர்வமான விடயம்"  என்ற சமர்க்கனியிடம்,

"ஏன்....இதென்ன புதுமை, வாழ்க்கை பற்றிய தெளிவு இப்படி ஒரு முடிவு எடுக்க வைச்சது" என்றான் தேவமித்திரன்.
தீ .....தொடரும்.       

    

 


  

  

                 கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.