மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணுக்கும் – விற்பனை செய்த பணியாளருக்கும்  விளக்கமறியல்!

 


“அழிக்க முடியாத நினைவுகளும் தொடரும் துயரங்களும்” – ஆற்றுப்படுத் முடியுமா?  


மட்டக்களப்பில் மேதகுவின் பிறந்த நாளையிட்டு கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட பெண்ணையும்,   கேக்கை விற்பனை செய்த பேக்கரி பணியாளரையும்,  எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில், கேக்கை வெட்டி கொண்டாட சென்ற பெண்ணை,  சட்டவைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என அறிக்கை சமர்ப்பிக்குமாறும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


புலி உறுப்பினரான தனது கணவனை, யுத்தத்தில் இழந்த பாலிப்போடி உதயகுமாரி என்ற இந்தப் பெண், நாவற்குடாவில் தனிமையில் வசித்துவருகிறார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தளபதி ரமேஸின்  நெருங்கிய உறவினர் எனவும் அறியப்படுகிறது.


இவர் சம்பவதினமான கடந்த 26ம் திகதி மேதகுவின்  பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தலைவரது பெயர் பொறித்து, தலைவர் அண்ணா என எழுதி வாங்கியபடி, அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில் பயணித்துள்ளார்.


அங்கு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர், “தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை? தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள்”, என சத்தமிட்டபடி சென்றுள்ளார்.


அதனைால் அவரை பின் தொடாந்து சென்ற புலனாய்வு பிரிவினர், துயிலும் இல்லத்தில் அவரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் பணியாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.


இந்த நிகழ்வுகள் இந்த நூற்றாண்டின் சொல்லொனாத் துயரங்களாக தொடர்கின்றன. நான்கு தசாப்த்த யுத்தமும், அது ஏற்படுத்திய தாக்கங்களும், இழப்புகளும், காயங்களும், வடுக்களாக மனங்களை ஆக்கிரமித்துள்ளன.


பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும், கணவர்களை இழந்த பெண்களும், மனைவிகளை இழந்த கணவர்களும், திருமணத்தை தொலைத்த முதிர் கன்னிகளும், அவையவங்களை இழந்த மாற்று திறணாளிகளும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களும் என,  வடகிழக்கெங்கிலும் சோகம் விரவிக் கிடக்கிறது.


ஆளும் அரசாங்கங்கள் இந்த நிலைமைகளை புரிந்துகொண்டு தமது மக்களை ஆற்றுப்படுத்தலுக்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். 


குறிப்பாக தென்னாபிரிக்க பாணியில், இனங்களுக்கிடையிலான உண்மை மற்றும் நல்லிணக்க வழிமுறையை இதையசுத்தியுடன் உருவாக்க வேண்டும்.


மறுபுறம் சரி பிழைகள் – விமர்சனங்களுக்கு அப்பால் நாட்டின் – நீதித்துறையின், சட்டதிட்டங்களை – நீதிமன்ற தீர்ப்புகளை மக்களும் பாதுகாப்பு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும்.


நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான ஜனநாயக வழிமுறைகளை மக்கள் மீற முற்பட்டால் அது சட்ட மறுப்பு போராட்டமாக மாறும். 


மாறாக நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக, நீதித்துறை அவமதிப்பாக மாறும். 


இதற்காக மக்களை மட்டும் தண்டிக்கும் ஆளும் அரசாங்கங்கள் பாதுகாப்பு தரப்பை, அதிகாரிகளை  தண்டிக்க மறுக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


மறுபக்கம் இந்த நிலைமைகளை கையாள,  தமிழ் பேசும் மக்களை (வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம்) பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தமிழ் – முஸ்லீம்கள்) அடங்கிய ஒரு பொதுச்சபை உருவாக்கப்பட வேண்டும். 


அந்த சபை தமது அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் சென்று தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகள், பொதுப் பிரச்சனைகள்  குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கான தீர்வைப் பெற,  நாடாளுமன்றிலும், அதற்கு வெளியிலும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். 


தத்ததமது கட்சிக் கோட்பாடுகளை, நடைமுறைகளை சுயமாகப் பேணும் அதேவேளை, பொதுவான பிரச்சனைகள் குறித்து பேசவும், செயலாற்றவும் புதிய அரசியல் செல்நெறியை உருவாக்கவும் இவர்கள் முனைவார்களா? #ஞாபகங்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.