‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையும் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கமும்!!

  

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990
யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார்.

பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார்.

விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக்கமிகு வகையிலும் எடுத்துச் சொல்வதற்கு எமது ஏட்டின் வாயிலாக கருத்துப்பரப்புரை செய்த காலப்பகுதியில் பாலா அண்ணையின் ஆலோசனைகளும், உதவிகளும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் – வெற்றிக்கும் உறுதுணை புரிந்தன.

போரோ! சமாதானமோ! எதுவாக இருந்தாலும் அந்த அந்தக் காலப் பகுதியில் – அந்தந்த விடயங்களுக்கு ஏற்ப தலைவரின் கருத்தை – விளக்கங்களை எமக்குத் தெளிவுபடுத்தி இயக்கத்தின் நிலைப்பாடுகளை எமது பத்திரிகை வாயிலாக வெளிக்கொணர்வதில் பாலா அண்ணை பெரும்பங்கு வகித்தார்.

பத்திரிகை வெளியீட்டு அனுபவத்திலும் – எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்ட அனுபவம் குறைந்த போராளிகளாகிய எங்களுக்கு அந்தக் காலத்தில் ‘இதழியல்’ தொடர்பான அறிவூட்டல்களையும் – கருத்துப்பரப்புரை தொடர்பான எழுத்து நுட்பங்களையும் சொல்லிக்கொடுத்து பாலா அண்ணை எங்களை வழிப்படுத்திவந்தார்.

1984ம் ஆண்டு தமிழ் நாட்டில் இருந்து ‘விடுதலைப்புலிகள்’ இதழை தலைவர் ஆரம்பித்துவைத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து பன்னிரு இதழ்கள் வரை ‘விடுதலைப்புலிகள்’ ஏடு வெளியிடப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்திலும் பத்திரிகையின் மேற்பார்வையாளராக பாலா அண்ணாவையே தலைவர் நியமித்திருந்தார்.

போராட்டத்தின் ஆரம்ப நிலையான அன்றைய காலகட்டத்தில் ஷவிடுதலைப்புலிகள்| ஏட்டின் மூலம் உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றி – போராட்டத் தலைவர்கள் – அவர்களின் கோட்பாடுகள் பற்றி பாலா அண்ணை எழுதி வெளியிட்ட கட்டுரைகள் போராளிகள் மத்தியிலும் – மக்கள் மத்தியிலும் நன்கு பிரபல்யமாகியிருந்தன. தமிழ்நாட்டின் வசதிக்கேற்ப அப்போது வெளிவந்த அந்தப் பன்னிரு இதழ்களும் நவீன அச்சு இயந்திரத்தின் உதவியுடன் அழகுற வெளிவந்திருந்தன.

1986ம் ஆண்டின் பிற்பகுதியில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டை விட்டகன்று தாயகம் வந்து போராட்டத்தை நேரடியாக வழிநடாத்தத் தொடங்கியபோது தமிழ்நாட்டில் ‘விடுதலைப்புலிகள்’ ஏடு அச்சாவது நிறுத்தப்பட்டது. பின்னர் நடந்த இந்திய – புலிகள் போர்க்காலத்திலும் பத்திரிகை வெளிவரவில்லை.

இந்தியப் படையின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து 1990 பெப்ரவரி மாதம் ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையை மீண்டும் ஆரம்பிக்குமாறு தலைவர் ஆணையிட்டிருந்தார்.

எமது இயக்கத்தின் கொள்கைப் பரப்பு அறிவை வழங்கி – போர்ப்பண்பூட்டும் வேலையையும் ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகை செய்யவேண்டும் என்றும் தலைவர் பணித்திருந்தார்.

பதின்மூன்றாவது இதழிலிருந்து ‘விடுதலைப்புலிகள்’ ஏடு தலைவரின் எண்ணத்தைச் சுமந்தவாறு, அதன் கருத்துப் பரப்புரைப் பணியைச் சிறப்புறச் செய்துவருகின்றது.

பத்திரிகைக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன் மட்டும் பாலா அண்ணையின் கடமை முடியவில்லை. தேவை ஏற்படும் போதெல்லாம் தானே இயக்க நிலைப்பாடுகளைக் கட்டுரைகளாக வரைந்து ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகைக்கு மெருகூட்டிவந்தார். குறிப்பாக, பேச்சுவார்த்தைக் காலங்களில் தனது நேரடி அனுபவங்களூடாகப் பேச்சு மேசையில் என்ன விவாதிக்கப்பட்டது. அந்தப் பேச்சுக்களின் விளைவுகள் என்ன! என்ற விபரங்களை விளக்கக் கட்டுரைகளாக எழுதி ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டிற்குத் தருவார்.

அதுமட்டுமல்ல, தலைவர் முன்னெடுக்கும் சமூக வேலைத் திட்டங்கள் மற்றும் நிர்வாக இயந்திரங்கள் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களைத் தலைவரின சிந்தனைக்கு ஏற்ப எழுதி ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டின் வாயிலாக வெளியிட்டுப் பத்திரிகைக்கு ஒரு கருத்துக்கனதியைக் கொடுத்தார்.

பெண் விடுதலையும் – புலிகளும், மதமும் – புலிகளும், சாதீயமும் – புலிகளும்… என்ற தலைப்புக்களில் எமது விடுதலை இயக்கத்தின் கொள்கை ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையில் வெளிவந்திருந்தன. அவை மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன.

எழுத்து என்பது, அதுவும் தேச விடுதலைக்கு உரம் சேர்க்கும் எழுத்து என்பது வெறும் சொற் கூட்டங்களாக அல்லாமல் மக்களின் இதயத்தை ஊடுருவித் தாக்கத்தை விளைவிக்கும் வகையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் பாலா அண்ணை உறுதியாக இருப்பார்.

அதனால், எழுதும்போது கருத்துக்களைச் சுருக்கமாகவும் – அதேவேளை தெளிவாகவும் எழுதவேண்டும் என்று போதிப்பார். பாலா அண்ணையின் வழிகாட்டலில் ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகை மிக தரமாகவே வெளி வந்தது. இனிமேலும் அவரது நினைவுகளைத் தாங்கியவாறு ‘விடுதலைப்புலிகள்’ ஏடு வெளிவரும்.

நன்றி - விடுதலைப்புலிகள் குரல்: 134

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.