பெண் போராளிகளின் தற்போதைய வாழ்வு!

 



ஒரு காலத்தில் உலகத்தால்  கொண்டாடப்பட்ட

பெண் போராளிகளின் தற்போதைய வாழ்வு


ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? 


‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார்.


கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.


இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம்.


அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது.


வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள்.


நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே!


அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.


நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை.


மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள்.


செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.


முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீரா


இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?


• நன்றி

முகப்புத்தகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.