வடக்கிற்கு வெகுவிரைவில் விஜயம் செய்வேன்!

 


வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பற்றாக்குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு வெகுவிரைவில் வருகை தருவேன்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வடக்கு மாகாண பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தில் உரையாற்றிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், சார்ளஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், இம்ரான் மாரூப் ஆகியோர் வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சேவை பற்றாக்குறைகளை சுட்டிக்காட்டி உடனடியான தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

வடக்கு மாகாணத்தில் உள்ள முருங்கன் வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை, அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலை ஆகியன தரமுயர்த்தப்பட்டுள்ள போதிலும், பௌதீக மற்றும் ஆளணி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் அடிப்படை பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், இம்ரான் மாரூப் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் சேவை கட்டமைப்பின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார்கள்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, வடக்கு மாகாணங்களில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்திற் கொண்டுள்ளேன். வெகுவிரைவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்வேன்.சகல தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்தின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சகல தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.