மழைக்கால பரிதாபம்!!

 


இலங்கையில்,  அதுவும் வடக்கில், மழை, அடைமழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது.  மக்கள் வெள்ளத்தில் மிதந்து தத்தளித்தவண்ணம் உள்ளனர். 


சமைப்பது, சாப்பிடுவது என்பது போன்ற அன்றாட காரியம் கூட மிக கடினமான ஒரு விடயமாக உள்ளது. பல வயோதிபர்கள், தனித்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் மிகவும் சிரமமான ஒரு நிலையையே எதிர்கொள்கின்றனர்.


காலநிலையின் சீற்றம் பெருவெள்ளமாக ஓடும் நிலையில் மக்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. வாய்க்கால்கள் நிறைந்து வழிகின்றன. வீதிகளை மறைத்து நீர் நிறைந்து ஓடுகிறது. காணிகள் நீரால் நிறைந்து கிடக்கிறது. கால்நடைகள் சரிந்து உறங்கமுடியாமல் நின்றபடியே சூரியனுக்காக தவம் செய்கின்றன. கோழிகள் இரை தேடி உண்ணமுடியாமல் அவதிப்படுகின்றன. வீட்டின்  ஓரங்களை நிறைத்தபடி மழை நீர் ஓடுவதால் வீட்டுக்குள்ளும்  நிலங்கள் உவனித்துக்கிடக்கிறது.

 கிளிநொச்சி மாவட்டத்தில்  மழையினால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையும் காணப்படுகிறது. இரணைமடு குளத்தின்  வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி - தருமபுரம்  பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட வேளையில் முதலில்  முதிய தம்பதிகளைச் சந்தித்தேன். 

உண்மையில் போடுவதற்கு நல்ல குளிர் தாங்கும் ஆடைகள் கூட இல்லாத நிலையில் தான் அவர்கள் இருந்தனர்.  வீட்டின் வாசலில் தட்டி நிற்கிறது வெள்ளநீர்.

இன்னும் சற்று பெரிதாக மழை பெய்தால் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்துவிடும் அபாயநிலை.


"என்ன சாப்பிட்டீர்கள்?" என்று கேட்டபோது,  "காலையில் தேத்தண்ணி மட்டும் தான்" என்றார் அந்த அம்மா நடுங்கியபடி.

அவரது கணவரின் ஆடை கூட ஆங்காங்கே கிழிந்து காணப்பட்டது.

நாங்கள் உணவு கொடுக்கச் சென்ற போது மாலை 3 மணியிருக்கும்.  முதல் நாளிலும் என்ன சாப்பிட்டார்களோ என்பது தெரியாது. 

அடுத்த வீடு, கணவனை இழந்த இரண்டு குழந்தைகளோடு வாழும் ஒரு விதவைப் பெண்ணின் வீடு. 

அவர்கள் வீடு இருக்கும் இடம் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் வீட்டுக்குள் நீர் புகுந்து விட்டது. நான் பார்த்த போது, சில பலகைகளை அடுக்கி கட்டில் போல செய்து விட்டு தாயும் பிள்ளைகளும் அதன் மேல் அமர்ந்திருந்தனர். 

ஆண் துணை இல்லை,  தன்னால் முடிந்த தனக்கு தெரிந்த வகையில் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தார் அந்த தாய்.

உணவுப் பொதிகளைக் கொடுத்து விட்டு, "காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?" என்று கேட்டேன் 

தாயார் பதில் எதுவும் சொல்லவில்லை....

பிள்ளைகள் தான்,  "மாங்காய்  கஞ்சி" என்றனர்.

மாங்காய் கஞ்சியா? எனக் கேட்க,  

"ம்ம்....நேற்றைய பழஞ்சோறு அடிப்பானையில்  கொஞ்சம் இருந்தது...அவருக்குள்ள உப்பும் மாங்காய் சிவியதுமாகப் போட்டு  கரைத்த குடிக்க கொடுத்தேன்,  அதைத்தான் சொல்லுகினம்" என்று அந்த தாய் சொன்ன போது, அந்த பிஞ்சுகளின் முகத்தில் தெரிந்த எல்லாரையும் ஏக்கமும்.....

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

"என்ன தொழில் செய்கிறீர்கள்? " என்றேன்.

கூலி வேலைக்கு தான் போறது..மழையால் வேலையும் இல்லை..கஸ்ரம்தான் ....என்றார் கண்ணீருடன்.

இவ்வாறு பல குடும்பங்களைப் பார்க்க முடிந்தது.  பாதிப்படைந்துள்ள பெரும்பாலானவர்கள், பிள்ளைகளை மண்ணுக்காகக் கொடுத்தவர்களும் ஆண்துணை அற்றவர்களும்  தான்.   

அன்றாடம் பொருட்கள் வாங்கி வாழ்க்கையை நகர்த்தும் இவர்களைப் போன்றவர்கள் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளாகும் போது,   சமாளிப்பது என்பது சிரமமான ஒரு விடயம்.

 இவர்களுக்கு உணவுப்பொருட்களோடு குளிர் தாங்கும் ஆடைகள், நுளம்புவலை, பெட்சீற் என்பவையும் தேவையாக உள்ளது.  

கொடை உள்ளம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி வழங்கி வைத்தால் வயோதிபம் வந்து உடல் தளர்ந்த இவர்கள் இந்த மழைக்காலத்தில் சற்று நிம்மதியாக வாழ்வார்கள்....

சிறு பிள்ளைகளும் மழையின் கஷ்ரத்திலிருந்து  சற்று மீட்சி காண்பார்கள்.

கோபிகை  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.