ஈரத்தீ (கோபிகை) - பாகம் 25!!

 




எங்கோ தூரத்தில் குருவி ஒன்றின் ஓசை அழகிய இசையாக ஒலித்துக் கொண்டிருந்தது.  மெல்லிய குளிர் சூழ்ந்த அந்தப் பொழுதில்  ஏதேதோ கனவுகளின் சஞ்சரிப்பில்  புன்னகை முகத்துடனே கண் விழித்தேன்.


'இன்று பொருட்கள் எல்லாம் ஏற்றவேண்டும்,  மேகவர்ணன் அண்ணா ஒழுங்கு செய்து தந்திருந்த வாகனம் காலையிலேயே வந்து விடும்....' என்ற எண்ணம் உந்த , சட்டென்று  எழுந்து அமர்ந்து கொண்டேன்.  நான் எழுந்த வேகத்தில்,  வண்ணமதியும் எழுந்து அமர,

"என்னடா.... ?" என்றேன்.
"இல்லை....  "  என்ற  தொனியில் தலையை அங்கும் இங்கும் ஆட்டினாள்.

" இன்று வீடு மாற வேண்டும்,  நாங்கள் யாழ்ப்பாணத்தில் தான் இனி இருக்கப்போகிறோம்......
உனக்கு சந்தோசம் தானே? "என்றேன்,

"ஓமக்கா...." சொல்லி முடித்தவள், என் மெல்லிய முறைப்பைக் கண்டதும்   அப்படியே வார்த்தையை விழுங்கி விட்டாள்.

"அம்மா என்று சொல்லு என்ன..." என்றேன்.  சம்மதமாகத் தலையை ஆட்டியவளை கரம் பற்றி எழுப்பி,  காலைக்கடன்களை முடிப்பதற்கு அனுப்பினேன்.


அதற்குள்,  நானும் கிணற்றடியில் பல் துலக்கி  வாய் கொப்பளித்தபடியே சமையல் கட்டிற்குள் நுழைந்து இருவருக்குமாக   இஞ்சி தேநீர் தயார் செய்தேன்.

அப்போது, தானும் காலைக்கடன்களை முடித்து வெளியே வந்த வண்ணமதி,  "அம்மா.......  நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? " என்றாள்.

"வேண்டாம் கண்ணம்மா....நீ இதைக் குடிச்சிட்டு,  குளித்து தயாராகடா...நானும் தயாராகிறேன்"  என்றபடி
தேநீரை நீட்டினேன்.  

சற்று நேரத்தில் இருவரும் தயாராகி, வரவும் வர்ணன் அண்ணா அனுப்பிய வாகனம் வரவும் சரியாக இருந்தது. 

காலைச்சாப்பாடு எதுவும் செய்யவில்லை,  போத்தலில் இருந்த முட்டைமாவில்  கொஞ்சம் எடுத்து,  சிறு தட்டில் போட்டு வண்ணமதியிடம் கொடுத்து விட்டு, இரண்டு கரண்டி மாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே வெளியே வந்தேன்.   



"அம்மா...இது என்ன மா?" கேள்விக்கணை தொடுத்த வண்ணமதியிடம் எதையும் ஆராய்ந்து அறியும் திறன் இருந்தது.

"இது முட்டை மாவடா.....குத்தரிசி, பயறு, உளுந்து,  கடலை, கௌ பிபோன்ற   தானியங்கள் சேர்த்து வறுத்து திரிக்கிற  மாவுடன் நல்லெண்ணெய் விட்டு முட்டை அடிச்சு ஊத்தி வறுத்து எடுக்கிற மாதான்...உடம்புக்கு மிக ஆரோக்கியமான ஒன்று...சாப்பிடு" என்றேன்.

அப்போது, பொருட்கள் ஏற்றும் வாகனத்தை முந்திக்கொண்டு வந்து நின்றது அந்தச் சிவப்பு  நிற மகிழுந்து. 

'இது.....அன்று....தேவமித்திரன் ...சென்ற...'  எண்ணமிடும் போதே அதிலிருந்து இறங்கிய தேவமித்திரனையும் அகரனையும்  பார்த்ததும் வியப்பும்  மகிழ்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது.

என் உள்ளத்தின் மகிழ்ச்சி,  என் முகத்தில்  தெரிந்திருக்க வேண்டும். தேவமித்திரன் சிறு கண்ணசைப்பின் மூலம் தன்னுடைய  பூரிப்பை வெளிப்படுத்தினார்.

அந்த இனிய தருணத்தில் இலயித்துப்போயிருந்த நான் ,  சட்டென்று,  "வாங்கோ...வாங்கோ...அகரன்..வா..வா..." என்று அழைக்கவும்
இருவரும் உள்ளே வந்தமர்ந்தனர்.

என்னுடைய வீட்டில்,  தேவமித்திரனை முதல் முதலாகப் பார்த்த போது, எனக்கு கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை...

"மித்திரன் இருங்கோ...நான் குடிக்க தேநீர் போடுகிறேன்..." என்று உள்ளே செல்ல எத்தனிக்க,
" சமர்...சமர்..நீ பதற்றப்படாதை, எனக்கு இப்ப ஒன்றும் வேண்டாம் .....இதிலை கொஞ்சம் இரு....பிறகு மற்றதெல்லாம் பார்ப்போம்.....நான் உன்ரை தோழன்,  அதுவும் உயிர் நண்பன்.....சம்பிரதாய வரவேற்பு ஒன்றும் எனக்கு தேவையில்லை..." என்றுவிட்டு,
"வண்ணமதி...இந்தாம்மா...
இதை உள்ளே வையுங்கோ..." என்று ஒரு பார்சலைக் கொடுத்தார்.

"என்ன..என்ன இது...?" என்று நான் கேட்கவும்
"சமர், இப்ப தானே சொன்னன், சம்பிரதாய வார்த்தைகள் எங்களுக்குள்ள வேண்டாம்,   அப்பா உனக்காக காலைச் சாப்பாடு செய்து தந்தவர்,  எனக்கு தெரியும்,  நீ காலைச்சாப்பாடு செய்திருக்கமாட்டாய்  என்றது , வண்ணமதிக்கும் கொடுத்துச்  சாப்பிடு" என்றார்.

பொருட்கள் ஏற்ற வந்தவர்கள்  காத்திருப்பதை நினைவுபடுத்திய  தேவமித்திரன்,  காரில் இருந்து  சுடுநீர் போத்தலை எடுத்து,  தானே கொண்டு வந்த கப்புகளில் கோப்பியை ஊற்றிக்கொடுத்தார்.

அவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு உள்ளே வந்து,  "சமர், எல்லாம் பொதி செய்திருக்கிறது தானே...அல்லது நான் பொதி செய்யவா, " என்றதும்

"இல்லை....இல்லை...எல்லாம் கட்டி வைத்திருக்கிறேன்" என்றேன்.
"சரிசரி...நாங்கள் பார்க்கிறோம்...நீங்கள் ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ, " என்று விட்டு
" அகரன்...வா..." என்றபடி விரைந்து நடக்க,   நானும் வண்ணமதியும் அகரனையும் தேவமித்திரனையும் நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

பொருட்கள் ஏற்றும் வேலை முடிய, 
"நீங்களும் வாங்கோ...சேர்ந்து சாப்பிடுவோம்..." என வண்ணமதி அழைக்கவும் 

"ஓமோம்...வாற அவசரத்திலை நாங்களும் வடிவாச் சாப்பிடேல்லை தான்....காணுமோ சாப்பாடு ?" என்றதும் 

"மாமா..நிறைய சாப்பாடு வைச்சிருக்கிறார்....காணும் வாங்கோ" என்றேன்.

நால்வரும் இணைந்து சாப்பிடுகிற அந்தத் தருணத்தை நான் இழக்க விரும்பவில்லை. அதே எண்ணம் தான் தேவமித்திரனுக்கும் என்பது எனக்கு புரிந்தது.  
 
ஒரு குடும்ப கூட்டிற்குள் நாங்கள் நால்வரும் இணைக்கப்பட்டிருப்பது போல இருந்தது அந்த தருணம்.


தீ தொடரும்......






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.