ஈரத்தீ (கோபிகை) - 26!!

 


கார்த்திகை மாதமொன்றின்  நண்பகல் வெயில்  சுட்டெரித்துக் கொண்டிருந்தது.  அது சாதாரணமாக எறிக்கின்ற வெயில் போல அல்ல.    மழைக்கு முந்தைய வெயில் என்பது அதன் அடர்த்தியிலும் ஆக்ரோசத்திலும் தெரிந்தது.



கிளிநொச்சியில் இருந்து புறப்பட்ட  மகிழுந்து, பரந்தன் கடந்து ஆனையிறவில் பயணித்துக் கொண்டிருந்தது.

தேவமித்திரனும் அகரனும் முன்னாலும் நானும் வண்ணமதியும் பின்னாலும் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.


என்னுடைய மகிழுந்தில் தான் எங்கள் பிரயாணம் .
தன்னுடைய மகிழுந்தை  மேகவர்ணன் அண்ணாவை கொண்டு வரச் சொல்லிவிட்டு, தேவமித்திரன் , எங்களோடு தானும் இணைந்து கொண்டார்.

"நாங்களும் உங்களோடு வரலாமா? " என்ற குறும்பான கேள்வியுடன்.



ஆனையிறவில் வந்த போது , என் தேகம் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.  ஆனையிறவு தளத்தில் தான் அண்ணா வீரச்சாவடைந்தான்.  அப்போது சிறு பெண்ணாக இருந்த எனக்குள் பனிப்படலம் போல அந்த நினைவுகள் வந்து போகும்.

ஆனையிறவின் வெளிகளில் தான் அவனுடைய கடைசி மூச்சு கலந்திருக்கிறது.  அந்த உப்புக் காற்றும் கிண்ணாமரப் பற்றைகளும் அவனுடைய ஆக்ரோசத்தை இலைகளை அசைத்து சொல்வது போல இருந்தது.  அவன் மட்டுமல்ல,  அவனோடு காவியமான அத்தனை வேங்கைகளினதும் இறுதிச் சுவாசம் அங்கு தானே நிலைகொண்டிருக்கும்....

எண்ணத்தின்  தணல், உள்ளத்தை உருக்கி,  விழிகளின் வழியே உப்பு நீரைப் பிரசவித்தது.

அப்போது எல்லாம் எங்களுக்கு துணையாக இருந்தது தேவமித்திரனின் குடும்பம் தான்.  

அமைதிப்படையாக வந்தவர்கள் அவலத்தை தந்து,  அழிவைப் பரிசளித்த போது, அண்ணா போராட்டத்தில் இணைந்து கொண்டான்.

"எங்கள் இனத்தாயின்  சங்கு கழுத்தை ஈனர்கள் நெரிக்கிறார்கள்... ..இன மானம் காக்கப் புறப்படுகிறேன், தாயே விடைகொடு" என்ற வரிகளுடன்.....

அந்தக் கடிதம் பார்த்து அம்மா கதறி அழுது துடித்த போது, சுவரோடு ஒட்டி நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். 

இப்போதும் அந்த நினைவு பசுமையாக இருந்தது எனக்குள்.  அப்போது,  அண்ணாக்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து  பசியாறிச்  செல்வதுண்டு. அப்பாவிற்கு அந்த அண்ணாக்கள் மீது அப்படி ஒரு பாசம்.
அவர்கள் வராத நாட்களில் எப்போதாவது, தானே சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.

பாடசாலை  ஆசிரியரான அப்பா,  புரட்சிகர சிந்தனைகளின்  சொந்தக்காரர்.  கார்ல்மார்க்ஸ் இன் தத்துவம் மீது தீராத ஒரு நேசம் அப்பாவுக்கு.

சிவப்புச் சிந்தனைகளை நெய்த கார்ல் மார்க்ஸ், அப்பாவுக்கு தெய்வமானார். 

கலப்பை பிடித்தவர்களும் களத்துமேட்டில் நிற்பவர்களும் முதலாளி வர்க்கத்தின் மூர்க்கத்திற்குள் புதையுண்டு போகிற அவலத்தை எழுத்தாயுதத்தால் மாற்ற நினைத்த மார்க்சிய சிந்தனைகள் அப்பாவின் வழியாக எங்களுக்கும் கடத்தப்பட்டது.

தன் சிந்தனைகளையே சீர்வரிசையாக இந்த உலகிற்கு கொடுத்த கார்ல் மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நிறைந்து போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே.


வடமராட்சியில் கரவெட்டி என்கிற எங்கள் சின்னக் கிராமத்தில் இருந்து,  ஒருநாள்  பணிக்குச்  சென்ற அப்பா,  வீடு திரும்பவே இல்லை.   அப்பாவின் கீறோ சைக்கிளும்  சின்னப்பையும் அதற்குள் இருந்த கார்ல்மார்க்ஸின் புத்தகங்களுமே  ஒரு நீண்ட வயல் வெளியில் கிடந்ததாக எங்களிடம் கொண்டு வந்து தரப்பட்டது.

முதலில் அப்பா,  பிறகு அக்கா,  அடுத்தது அண்ணா என அடுத்தடுத்து ஏற்பட்ட பேரிழப்புகள் அம்மாவையும் என்னையும் முடக்கிப்போட்ட அந்த நாட்கள்  கண்ணுக்குள் நிழலாடின.

வாழ்க்கை தான் எவ்வளவு வஞ்சகமானது....அத்தனை உறவுகளையும் பிரித்து தனிமரமாக நிற்கவைத்துவிட்டதே.....

எண்ணங்கள் கனக்க பெருமூச்சோடு கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

கண்ணாடி வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்த தேவமித்திரன்  ,  கண்களாலேயே "என்ன?" எனக்கேட்டது கண்ணாடி வழியாக  தெரிந்தது.



தீ .....தொடரும்.




    
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
 






  

  





      







           





















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.