ஈரத்தீ (பாகம் 24 ) - கோபிகை!!
'
வாழ்க்கை பற்றிய புரிதலா....?' மனங்குரங்கு சட்டென்று அங்கும் இங்கும் தாவியது.
'தேவமித்திரனுக்கு திருமணமாகி, மனைவியோடு ஏதாவது பிணக்கோ.... '
அந்த எண்ணமே மனதில் பெருங்கசப்பை உண்டுபண்ணியது. 'கடவுளே தேவமித்திரன் வாழ்க்கையில் அப்படி ஏதும் இருக்கக் கூடாது.' அவசரமாக ஒரு வேண்டுதலை கடவுளிடம் வைத்தேன்.
புரண்டு படுத்தபடி எண்ணங்களில் உழன்று கொண்டிருந்த என்னை, சடாரென்று என் மீது வந்து விழுந்த வண்ணமதியின் கால்கள் நடப்பிற்கு இழுத்து வந்தது.
திருமபிப் பார்த்தேன், என்னுடைய இடுப்பில் தனது கால்களைப் போட்டு ஆசுவாசமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
என்னை அறியாமல் விழிகளில் நீர் கோர்த்தது. அம்மா உயிரோடு இருந்த காலங்களில் இப்படித் தான் உறங்குவது.
" சமர்...தள்ளிப்படு பிள்ளை.." அம்மா பலமுறை சொன்ன பிறகு தானே நான் காலை எடுப்பது...
வண்ணமதியின் கால்கள் அப்படியே இருக்கத்தக்கதாக மெல்ல திரும்பி, அவளது தலையைக் கோதினேன். நான் தாயாகிவிட்ட உணர்வில் மனம் பூரித்தது.
"அம்மா...நான் ஒரு சிறு பெண்ணைத் தத்தெடுத்திருக்கிறேன்....
நானும் அம்மாவாகி விட்டேன்..." படுக்கை அறையில் மாட்டப்பட்டிருந்த அம்மாவின் படத்தைப் பார்த்துச் சொன்ன போது, அம்மா அருகில் வந்து அணைத்துக் கொண்டது போல ஒரு பிரமை.
"சுடரி...சுடரி...நீ ஏங்காதே..."என்ற வரிகள் அலைபேசி.அழைப்பு இசையாக ஒலிக்கவும்
'யார் இந்த நேரத்தில்..... ' என நினைத்தபடி,
அதனைக் கையில் எடுத்துப் பார்த்தேன்.
புதிய இலக்கம்....நேரம் பார்த்தேன், ஒன்பது மணி.
இணைப்பை அழுத்தி ,
"ஹலோ..." என்றேன்.
"சமர்....." ஒரு ரீங்கார இசையாக என் காதில் ஒலித்த அந்தக் குரல், நிச்சயமாக தேவமித்திரனுடையது தான்.
இவ்வளவு விரைவாக என் இலக்கம் தேடி , அழைப்பு எடுப்பார் என எதிர்பார்க்காததால் மனம் விம்மியது.
"ம்...."
வார்த்தைகள் வரவில்லை எனக்கு.
"சமர்...ஹலோ...சமர்..." மீண்டும் மீண்டும் தேவமித்திரன் அழைக்கவும் தான் நான்
என்னை நிதானமாக்கி,
"ஹலோ...." என்றேன்.
என்ன நினைத்தோ, "அப்பா கதைக்கவேணுமாம்....குடுக்கிறன்....என்று விட்டு, அலைபேசியைக் கைமாற்றுவது புரிந்தது.
"தேவா... ஸ்பீக்கரில் போடு..." என மாமா சொல்வது தெளிவாகக் கேட்டது.
"அம்மா...சமர்க்கனி...." தளுதளுத்து வந்த அவரது அழைப்பு என்னை அப்படியே உருக்கியது. அம்மா அழைப்பது போல...பரிமளம் மாமி அழைப்பது போல...
"மா...மா...." விம்மலோடு வெடித்து வந்தன வார்த்தைகள்.
"எப்படியம்மா இருக்கிறாய்... ? அண்டைக்கு நான் வந்த போது நிலைமை சரியில்லை...சுயநினைவில் இல்லை......நீயாவது கதைச்சிருக்கலாமே தங்கம்....." என்ற போது கட்டுக்கடங்காமல் அழுகை பீறிட்டது.
"மா....மா..அது..." அழுகை முட்டிக்கொண்டு சத்தமாக வெளிப்பட.....
கேட்டுக் கொண்டிருந்த தேவமித்திரன்,
"சமர்....என்ன...சமர்...அழாதை..".என்றதும் வாயை இறுக மூடி, மெல்ல என்னை சகஜமாக்கிக் கொண்டேன்.
எதிர்ப்பக்கம் , மாமாவும் விக்கி அழுவது புரிந்தது.
'பாவம் மாமா...என்னால் அவரும் அழுகிறார் , என்ன முட்டாள்தனம் செய்கிறேன் ' என நினைத்தபடி,
"மாமா...அழாதேங்கோ " என்றேன்.
"சரியம்மா...நான் அழேல்லை...நீ யோசிக்காதையம்மா....
என்னாலை இப்ப கதைக்கமுடியேல்லை...
நீ வீட்ட வாம்மா...நிறைய கதைக்கவேணும்....வா...வா..
எனக்கு உன்னைப் பாக்கவேணும், வா...கண்ணம்மா "
என்றபடி,
"இந்தா தேவா..." என தேவமித்திரனிடம் அலைபேசியைக் கொடுப்பது எனக்கு அலைபேசி வழியே செவியில் விழுந்தது.
நான் மௌனமாகவே இருக்க,
சற்று நேரத்தில் , "சமர்...." என்ற அந்த ஆழ்ந்த குரல் இதயத்தை ஊடுருவியது.
"ம்...." மேலே எதுவும் பேச முடியாமல் மீண்டும் விம்மல்கள் குதித்துக் கொப்பளித்தன.
"என்ன சமர்..ஏன் இப்படி அழுகிறாய், காலைல கூட நல்லா கதைச்சியே...நான் அழைத்தது ....பிடிக்கவில்லையா...."
எனக்கேட்க,
"மித்தூ....நீங்கள் என்னை இப்படி தேடி, கதைப்பீங்கள் என்று நான் நினைக்கவே இல்லை....மாமாட்ட கதைத்தது, அம்மாவோடு கதைச்ச மாதிரி.. பரிமளம் மாமியோடை கதைச்ச மாதிரி...." என பெருமூச்சோடு நிறுத்தினேன்.
"அசடு....நான் பயந்திட்டன்....நாங்கள் தொலைச்சிட்டு தேடின பொக்கிஷம் நீ.... உன்னை அப்படியே மறந்திடுவமா...
நீ கிடைச்சது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா...."
"உண்மையாவா....?"
நான் கேட்க
"சமர்....என்ன நீ...நீ ...நாளைக்கே வீட்டுக்கு வா....மற்றதெல்லாம் பிறகு கதைப்பம்... நீ அழாதை....நீ அழுதால் நான் தாங்கமாட்டன்....தெரியும் தானே....பைற்...." என்றதும் சட்டென்று சிரித்துவிட்டேன்.
"தேவமித்திரன் மீது அளவில்லாத அன்பு சுரந்தது, எங்கே அதனை வெளிப்படுத்திவிடுவேனோ என்ற பயத்தில்,
' நாளைக்கு எனக்கு நிறைய வேலை...இரண்டு நாள் கழித்து வருகிறேன்...பிறகு கதைக்கிறேன் " என்று விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.
தீ .....தொடரும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

.jpeg
)





கருத்துகள் இல்லை