இரும்படிக்கும் இடத்தில் ஈக்களுக்கென்ன வேலை?

நான் பொங்கலுக்கு எதிரானவனும் அல்ல, தேசிய பொங்கலை மலையகத்தில் பொங்குவதற்கு எதிரானவனும் அல்ல என்பதை கூறிக் கொண்டு.


அப்படி என்றால் இம்முறை மலையகத்தில் தேசிய பொங்கல் நிகழ்வை நடத்துவதில் எனக்கென்ன பிரச்சினை இருக்கிறது ? 


இன்றைய பொருளாதார நெருக்கடியில் மலையக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மலையக மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடும் மனநிலையில் தான் உள்ளார்களா ? இது யோசிக்க வேண்டிய விடயம் தான் என்றாலும் நாட்டில் ஏனைய மக்கள் அனைவரும் நலமாக பொருளாதார ரீதியில் வளமாகத் தான் இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. முழு நாடுமே அப்படியான  நிலையில் இருக்கும் பொழுது இந்த பொங்கல் கொண்டாட்டம் தேவையா? என பலரும் யோசிக்கலாம். ஆம் தேவை தான்



என்பேன் நான். இந்த நாட்டில் ஏனைய இன மொழி, கலை, கலாசார விடயங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே தமிழ் இன மக்களின் கலை, கலாசார, சமய, பண்பாட்டு விடயங்களுக்கும் ஒரு தேசிய ரீதியிலான மதிப்பும், பெருமையும் பறைசாற்றப்பட வேண்டும் என்ற கொள்கையில் நாம் தமிழர் அனைவரும் உடன் பட்டே ஆகவேண்டும் !


இந்த தேசிய பொங்கல் விழா நிகழ்வானது ஒன்றும் புதிதாக இலங்கையில் கொண்டாடப் படவில்லை. கால காலமாக தமிழ் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் இத்தேசிய பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை நாம் அறிந்திருப்பது அவசியம் ...


இத்தனை காலம் நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வுகளை விட இம்முறை நடக்கும் தேசிய பொங்கல் விழா ஏன் விசேடமானது? விமர்சனத்திற்குள்ளாகிறது?


மலையகத்தில் நடைபெறுகிறது என்கிற பிரச்சினையா (பிரதேசவாத)? 


இல்லை இதொகா இதை நடத்துகிறதே அதனாலா? 


ஆம் அவையும் ஒரு காரணங்களே என்றால் மறுப்பதற்கில்லை ... 


நெருங்கும் தேர்தல் கால சூழலில் வாக்கை மையப்படுத்தியதாக... 


தம் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க அல்லது பரீட்சித்து பார்க்க...


தான் சார்ந்த அல்லது தனக்கு சார்பானவர்களை நிகழ்வுகளில் உள்ளீர்ப்பதன் மூலம் எதிர் வரும் தேர்தலுக்கு முன்கூட்டியே ஆதரவை திரட்டும் ஒரு மூலோபாயமா? 


ஆம் அவையும் இல்லாமல் இல்லை. இந்த தேசிய பொங்கல் நிகழ்வை நிச்சயம் ஒரு அரசியல் கட்சி அல்லது தேசிய அரசாங்கம் தான் நடத்தும் நடத்த வேண்டும்., எனவே அவர்களுக்கு எதிரானவர்களின் இதுபோன்ற கருத்துக்களும் இருக்கும் என்பது யதார்த்தமே ! 


ஆனால் என்னுடைய கேள்வி தமிழர்களாகிய நாம்,   நம் பாரம்பரிய கொண்டாட்ட நிகழ்வான பொங்கல் விழாவை இன்றைய நம் நாட்டு பொருளாதார சூழலில் எத்தனை நிதி நெருக்கடியான நிலையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்?...


 அதில் மக்களின் உழைப்பு, பணம், எதிர்காலம் என எவ்வளவோ அடங்கியுள்ளது? எனவே அப்பணத்தை பொங்கல் நிகழ்வுக்கு செலவழிப்பதில் கவனம் எடுத்தல் அவசியமா? இல்லையா?


இந்நிகழ்வுக்கு செய்யப்படும் செலவு என்பது நாட்டு மக்களின் பணம் அப்பணத்தில் தென்னிந்திய நடிகைகளை கொண்டு வந்திருப்பது என்பது வீண் செலவு என கருதுகிறேன். 


அந்த நடிகைகள் எதன் அடிப்படையில் அழைக்கப் பட்டுள்ளனர் ?

இந்நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டனர்?


தமிழர் என்ற அடிப்படையிலா? அப்படி என்றால் அவர்கள் தமிழரா? 


இல்லை தமிழர் பண்பாடு, கலை, கலாசார, சமய வழிமுறைகளை, நெறிமுறைகளை பின்பற்றிவரும் முன்மாதிரிகள் எனபதாலா?

அதற்கான ஆதாரங்கள் ? 


வெறுமனே நடிகைகள் என்பதற்காகவும் 

பெண்கள் என்பதற்காகவும்

சினிமா துறையில் உள்ளவர் என்பதாலும் 

அவர்களுக்கு நீங்கள் எதோ ஒரு விதத்தில் நன்றி அல்லது கைமாறு அல்லது விளம்பரப் படுத்த பார்க்கிறீர்கள் என்று தானே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது? 


தென்னிந்திய கலைஞர்களை நம் நாட்டுக்கு குறிப்பாக மலையகத்திற்கு கொண்டு வரவேண்டியது அத்தியவாசியமே யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் எத்தனையோ இசைக்கலைஞர்கள், 

மேடை நாடக, வீதி நாடக, புராண நாடக நடிகர்கள் இசை வாத்திய கலைஞர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சமூக, அரசியல் பாண்டித்தியம் பெற்றவர்கள்  என எத்தனையோ பேர் உள்ள போது ஒன்றுக்கும் உதவாத திரை நடிகைகளை கொண்டு வந்து அவர்கள் மூலம் நம் மக்களுக்கு என்ன நன்மை? அவர்களிடம் கற்றுக் கொள்ள தெரிந்து  கொள்ள என்ன உள்ளது?


ஏற்கனவே மலையகத்தின் கலை, கல்வி, சமூக வீழ்ச்சிக்கு தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக் காட்சிகள் கேபில் கனெக்சன் என பொழுது போக்கு அம்சங்கள் எம்மை வதைத்துக் கொண்டிருக்கும் போது ...


இத்தனை கால தமிழன் பாரம்பரியத்தை இந்த நடிகைகளை வைத்து தான் இலங்கைக்கு நம் மலையக சமூகத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டுமா? 


அப்படியே ஒரு தேவை இருப்பதாக நீங்கள் கருதி இருந்தாலும் ஏன் நம் நாட்டு கலைஞர்கள் உங்கள் எண்ணத்தில் தோன்றவில்லை? 


சகோதரன் ஜீவன் அவர்களே!

கலைஞர்கள் சமூகத்திற்கு எத்தனை முக்கியம் என அறிந்ததால் தென்னிந்தியாவில் இருந்து நடிகைகளை ஒரு தேசிய நிகழ்வுக்கு அதுவும் தமிழனின் பாரம்பரிய நிகழ்வுக்கு இத்தனை செலவழித்து நடிகைகளை கொண்டு வந்துள்ள நீங்கள் இன்று உங்கள் அரசியல் வரலாற்றில் எத்தனை நம் நாட்டு அல்லது நம் மலையக கலைஞர்களை உருவாக்கி இருக்கிறீர்கள்? அவர்கள் உருவாக காரணமாகி இருக்கிறீர்கள்? 


கலைஞர்களுக்கு நீங்கள் இதுவரை பொதுவாகவும் சரி தனிப்பட்டும் சரி வழங்கியுள்ள வாக்குறுதிகள் நினைவிருக்கிறதா? அவற்றில் எத்தனையை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள் ?

டேட்டா பேஷ் ஆதாரங்கள் உள்ளதா? 


ஏற்கனவே தென்னிந்தியாவில் எல்லா துறையிலும் நடிகர், நடிகைகளை வைத்து பெண்களின் கவர்ச்சியை, பெண்களை காட்சி பொருளாக்கி என அரசியலையே கேலிக்கூத்தாக்கி இருக்கிற நிலையில் நீங்கள் இலங்கையிலும் குறிப்பாக மலையகத்திலும் அதையே செய்ய முற்படுகிறீர்களா? 


இலங்கையில் எத்தனை திறமையான கலைஞர்கள் உள்ளனர் ?

இசை, நாடகம், சினிமா, எழுத்து,  விளையாட்டு என ? 


அண்மையில் கூட மலையகத்தில் இருந்து தென்னிந்தியா சென்று சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்று வந்த பாரம்பரிய வீரர்களும் உள்ளனர்  தேடிப்பாருங்கள்!


நீங்கள் இது போன்ற விடயங்களில் விமர்சிக்கப் படுவது இங்கிலாந்தில் கல்வி கற்ற ஒரு இளைஞனுக்கு இருக்க வேண்டிய அறிவுபூர்வமான, யதார்த்த பூர்வமான, முற்போக்கான மக்களை, மனிதர்களை, அரசியலை, அரசியல் கலாசாரத்தை உருவாக்குவார் என எதிர்பார்த்தோரை தொடர்ந்தும் ஏமாற்றி வருதால் தான். 


உங்களை வழி நடத்துவோர் பிழை செய்கிறார்கள். உங்களை இந்தியாவில் இருந்து இயக்கும் உங்களை பரம்பரையாக அரசியல், தொழிற்சங்க வழிகாட்டல் செய்யும் நபர்களின் அப்டேட் இன்மையால் வந்த வினை அது.


அவர்களை அப்டேட் ஆகச் சொல்லுங்கள். தேவைப்பட்டால் எங்களை போன்றோரை இணைத்துக் கொள்ளுங்கள். இதை விட அறிவுபூர்வமான, கல்வி சமூகத்தில் இருந்து பலரை அறிமுகம் செய்கிறேன் உங்களுக்கு வழிகாட்ட ஆலோசனை சொல்ல ... 


அதிகாரத்தை கவர்ச்சி பெண்களில் முதலீடு செய்த பலர் இறுதியில் மிக விரைவாக அதன் பலா பலன்களை அனுபவித்த வரலாறே உண்டு ஜீவன்...


"ஜீவன் செய்வார்" என எதிர்பார்த்த எத்தனையோ படித்த இளைஞர்களுக்கு நீங்கள் "வச்சி செய்றீஙக" என்பது மட்டும் உறுதியாகிறது... 


மீண்டும் சொல்கிறேன் , இரும்படிக்கிற இடத்தில் ஈக்களை கொண்டு வருகிறீர்கள் கொல்லன்கள் வெளியே இருக்கிறார்கள்... சம்பந்தமே இல்லாத ஆட்களாக ... 


கேஜி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.