3 போட்டியாளர்களும் இன்று கூடி தீர்மானம்!

 


இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தேர்தல் மூலமே தெரிவு செய்வது என தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் மூன்று போட்டியாளர்களும் இன்று காலை கூடித் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் இல்லத்தில் இன்று காலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கூடி ஆராய்ந்தனர்.

பாரம்பரியத்தின்படி தேர்தல் இன்றி கட்சியின் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் இதன்போது கலந்துரையாடினர்.
ஆயினும் அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படாத நிலையில் தேர்தல் மூலமே தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வை நடத்துவது என மூவரும் சந்திப்பின் இறுதியில் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்;குழுக் கூட்டம் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை கிளையில் இடம்பெற்ற நிர்வாக தெரிவு முறைகேடு தொடர்பிலும் பேசப்பட்டது.

நிர்வாகத்தில் இடம்பெறாத 6 உறுப்பினர்களையும் பொதுக்குழுக் கூட்டத்தில் உள்வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழரசு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை வரும் 21ஆம் திகதி நடத்துவதுடன், தேசிய மாநாட்டை 28ஆம் திகதி நடத்துவது என்ற ஏற்கனவே எடுத்த முடிவு மாற்றமின்றி பேண ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து, கட்சியின் சிரேஷ்ட தலைவர்; இரா. சம்பந்தன், கட்சியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் போட்டியின்றி தலைவர் தெரிவு இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் கட்சியின் செயல்குழுவும் இதனையே வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைமை பதவிக்கு போட்டியிடும் சி. சிறீதரன், எம். ஏ சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோரிடம் இது தொடர்பில் முடிவை அறிவிக்குமாறும் அல்லது சுழற்சி முறையில் தலைமை பதவியை வகிப்பது குறித்து சிந்திக்குமாறும் செயல்குழுவினர் கூறினர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் இன்று பேசி முடிவெடுப்பதாக சுமந்திரன் எம். பி. தெரிவித்தார்.
இதனை செயற்;குழுவும் ஏற்றுக்கொண்டது.

இதனை அடுத்தே போட்டியாளர்கள் மூவரும் இன்று காலை கொழும்பில் கூடி இந்த முடிவை எட்டியுள்ளதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.