‘லால் சலாம்’ படப்பாடல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!


 சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘திமிறி எழுடா..’ எனும் பாடலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்பட இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘லால் சலாம்’. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த்,, விக்னேஷ், விவேக் பிரசன்னா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, செந்தில், லிவிங்ஸ்டன், ஜீவிதா, நிரோஷா, அனந்திகா சனில்குமார், தான்யா பாலிகிருஷ்ணா,தங்கதுலை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னாள் இந்திய துடுப்பாட்ட அணியின் நட்சத்திர வீரரான கபில்தேவ் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.  எக்சன் எண்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ஓடியோ வெளியீடு அண்மையில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘திமிறி எழுடா..’ எனத் தொடங்கும் பாடலை மறைந்த பின்னணி பாடகர்கள் பாம்பே பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர் பாடியிருக்கிறார்கள். 

இது தொடர்பாக இசைப் புயல் ஏ. ஆ ரஹ்மான்  தன்னுடைய எக்ஸ் தளத்தில்,“ மறைந்த பின்னணி பாடகர்கள் பாம்பே பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர்களின் குரல்கள் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களுடைய குடும்பத்தாரிடம் முறையாக அனுமதிப் பெற்றிருக்கிறோம். அதற்கு தகுந்த ஊதியத்தையும் வழங்கியிருக்கிறோம். ஏ ஐ தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் எந்த சிக்கலும் உருவாகாது.” என பதிவிட்டிருக்கிறார். 

இதனால் இனி இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த பிரபல பின்னணி பாடர்களின் குரல்கள் மீண்டும் தமிழ் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கக்கூடும் என அவதானிக்கலாம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.