அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை 6 பேர் பலி!

 


இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஆனால், கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வீதிகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாமையே பல விபத்துக்களுக்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை இடமாறல்களில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீதி விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமை அவதானிக்கப்பட்டது.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஹோமாகம - நியந்தகல அதிவேக மேம்பாலத்தில் நேற்று காலை 1,50,000 ரூபா பெறுமதியான உயர் அழுத்த மின் கம்பியின் ஒரு பகுதி அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதி சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த 3 பேர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபர்களைக் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதேவேளை, கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவரும் உயிரிழந்தார்.


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.


கடவத்தை மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையில் 27.1 மைல்கள் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வேன், கொள்கலன் பெட்டி இணைக்கப்பட்ட லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


லொறி தொழில்நுட்பக் கோளாறால் வீதியின் இடதுபுறம் நின்ற போது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது.


ஹிக்கடுவையில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த ஒஸ்ரிய நாட்டை சேர்ந்த குடும்பமே விபத்துக்குள்ளான வேனில் பயணித்துள்ளது.


இந்த விபத்தில், வேனில் பயணித்த 37 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும், வேனின் சாரதியான இலங்கையரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நேற்று காலை அதிவேக வீதியில் பயணித்த போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தனர்.


இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.