சமூக சேவையா, சமூக சீரழிப்பா?

 


அவரின் காலில் முள்ளொன்று ஆழமாக குத்திவிட்டது. ஆனால் வலிக்கவில்லை. அப்படியே விட்டுவிடுகிறார். சில நாட்கள் சென்றபின்னர் முள் குத்திய இடத்தில் சீழ் கட்டி கால் அழுகத் தொடங்கிவிட்டது. வைத்தியரிடம் சென்றால், தசையை கிழித்து முள்ளை பிடுங்க வேண்டும், கடுமையாக வலிக்கும் என்கிறார்.  இன்னொருவர் காயத்துக்கு மருந்து கட்டி விடுகிறார். முள் அப்படியே இருந்து கால் மீண்டும் சீழ் பிடிக்கிறது. இங்கு வலியை தாங்கிக் கொண்டு முள்ளை பிடுங்கி விடுவதே தீர்வாகும்.


இது போல சமூக சேவை என்று வருகின்ற போது சமூகத்தை சீரழிக்கின்ற முள்ளை அப்படியே வைத்துவிட்டு மருந்து கட்டுகின்ற வேலையைத்தான் சமூகசேவை என்ற பெயரில் நாம் செய்து வருகிறோம். மட்டுமன்றி அந்த சேவைகளால் சமூகத்தை சீரழிக்கும் உள்ளக காரணிகளை மேலும் வளர்த்து விடுகிறோம். 


ஏழ்மையான ஒரு விதவைத்தாய் இருக்கிறார். அவருக்கு திருமண வயதில் 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் எப்படி நிறைவேற்றுவது என அவர் மீது நாம் கனிவு கொண்டு வீட்டை கட்டி கொடுத்து அவரின் பிள்ளைகளை நிறைவேற்ற உதவலாம். அல்லது சீதனமின்றி ஆண்மகனை தேடி அவரின் பெண்களை நிறைவேற்றி விடலாம். 


இதில் வீடுகட்டிக் கொடுத்து அவரின் பெண்மக்களை நிறைவேற்றி விடும் முதலாவது தெரிவு பெரும் சமூகசேவையாக எமக்கு தோன்றும். இரண்டாவது தெரிவு விளம்பரங்களின்றி சத்தமில்லாமல் முடிந்து விடும். சீதனம் என்பது சமூகத்தை கடுமையாக சீரழிக்கின்ற ஒரு சமூக நோய். இங்கு ஆற்ற வேண்டிய சமூகசேவை சீதனம் என்ற முள்ளை சமூகத்தினுள்ளிருந்து கலைவதே ஆகும். ஆனால் அதனை அப்படியே விட்டுவிட்டு சீதனம் என்ற சமூக சீரழிப்பை வளரக்கவே நாம் உதவி செய்கிறோம். அதுவே சீரழிந்த சமூகமொன்றில் நமக்கு பேரையும் புகழையும் ஈட்டித் தருகிறது. 


ஏழ்மையான இன்னொருவர் இருக்கிறார். அவருக்கு சிறு வயதில் 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களின் படிப்புச் செலவுகள், இதர தேவைகள் என பல இருக்கின்றன. அன்றாட உணவுக்கே கடுமையாக அல்லல் படுகிறார். அவரின் கஷ்டத்தைக் கண்டு வருந்தி பிள்ளைகளுக்கு சப்பாத்து, கொப்பி, பேனை, பேக் வாங்கி கொடுத்து, செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என பத்தாயிரம் பணத்தையும் கொடுத்துவிட்டு அதனை பெரும் சமூக சேவையாக விளம்பரம் செய்கிறோம்.


ஆனால் அவர் உழைத்து வாழ்வதற்கான ஏதுக்களை செய்து கொடுத்தால் அவரின் ஏழ்மை முற்றாக அகன்று விடும். அதை நாம் செய்வதில்லை.


இன்னொருவர் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியுடன் இருக்கிறார். அவருக்கு அன்றை சாப்பாட்டையும் 2-3 நாட்களுக்கு சமைப்பதற்கான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதை சமூகசேவையாக விளம்பரம் செய்கிறோம். 


இங்கும் நோய்க்கான முள்ளை கலைய நாம் தவறிவிடுகிறோம். 


அண்டை வீட்டான் பசித்திருக்க உண்ணாதே என்று மார்க்கம் சொல்கிறது. உறவுகளை பேணச் சொல்கிறது. அப்படியிருக்க உணவில்லாமல் பசித்திருக்க வேண்டிய நிலை ஒருவருக்கு ஏன் வருகிறது? அப்படியான நிலை ஒருவருக்கு வருகிறதென்றால் சமூக சேவை தொழிற்பட வேண்டிய புள்ளி அவருக்கு உணவளிப்பது மட்டுமல்ல. மாறாக அவரின் உறவினர்கள், அண்டை வீட்டாருடனான உறவையும் அன்பையும் மேம்படுத்தி விடுவதாகும். அதற்கு எந்த பொருட் செலவும் நமக்கு ஏற்படப்போவதில்லை. 


ஆனால் இங்கு பொருட் செலவு செய்து அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்து, அவருக்கும் ஒரு தொகையை கொடுப்பது பெரும் சமூக சேவையாக விளம்பரம் செய்கிறோம். ஆனால் உறவுகள் பிரிந்து நோய்வாய்ப்பட்டு கிடக்கும் சமூகத்தை அப்படியே விட்டு விடுகிறோம். 


உறவினர்கள், அண்டை வீட்டாருடன் அன்பாக இருந்தாலே மூன்றாம் நபரிடம் கையேந்தவோ,  பசியுடன் உறங்கப்போகவோ வேண்டி வராது. கஷ்டப்படும் ஒருவரின் உறவுகள், அண்டை வீட்டார் என எது குறித்தும் ஆராயமல் சமூகசேவை என்ற பெயரில் நாம் ஒருவருக்குச் செய்யும் உதவிகள், அவர் தனது உறவுகளை முறித்துக் கொண்டு அவர்களின் முன்னால் இறுமாப்புடன் சுயாதீனமாக வலம் வரவே உதவுகிறது. இங்கு சமூகசேவை என்ற பெயரில் நாம்  சமூகத்தை சீரழித்து விடுகிறோம். 


"நான் செத்துக் கிடந்தா நீ தூக்கத் தேவல்லடா. AC போட்ட KDH வரும்டா தூக்குறத்துக்கு" என்று உறவினரை திட்டி துரத்துகின்ற அளவுக்கு நாம் சமூகசேவை செய்திருக்கிறோம்.


இப்படியாக சமூகசேவை தொழிற்பட வேண்டிய புலம் வேறு ஒன்றாக இருக்க, சமூகசேவை என்ற பெயரில் சமூகத்தை சீரழிக்கின்ற உள்ளக பொறிமுறைகளை நாம் வளர்த்து விடுகிறோம். அது நமக்கு சேவை போல தோன்றுகிறது.


சமூகத்தை உயர்த்திவிடுதல் அல்லது சமூக மாற்றம் ஒன்றை ஏற்படுத்துதல் என்று வருகின்ற போது சமூக சேவகர்கள் தொழிற்பட வேண்டிய புலம் வேறாக இருக்கின்றது. 


ஏழைகளுக்கு பொருளாதார உதவி செய்வது ஏழ்மை உருவாவதை ஒரு போதும் ஒழிக்காது. மாறாக ஏழ்மை ஏற்படுகின்ற சமூக காரணிகளை கலைந்து விடுவதே ஏழ்மையை ஒழிக்கின்ற நிரந்தர தீர்வாக இருக்கும். 


இவ்விடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நண்பரின் வலிமா அழைப்பு ஒன்றுக்காக குருணாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் சிற்றூருக்கு எங்கள் நண்பர்கள் குலாம் சென்றிருந்தோம். அங்குள்ள கடைகள் எதிலும் பீடி, சிகரட், புகையிலை, பாக்கு போன்ற எந்த பொருளும் விற்பதில்லை. அது அங்குள்ள மஹல்லாவின் உத்தரவு. அதை மீறி யாரேனும் விற்றால்  அந்த சமூகம் கடைக்காரரை பழிக்கும். அவரின் கடையில் பொருட்கள் வாங்காமல் அவரை ஒதுக்கிவிடும். 


அது போல கொள்ளை லாபம், சீதனம், ஏழ்மை போன்ற சமூக சீரழிவுகளை ஒழிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப் படுத்துதல், ஆன்மீகத்தை சமூகத்தினுள் புகுத்துதல் போன்ற செயற்பாடுகள்தான் உண்மையான சமூக சேவையாக இருக்கும். அவற்றுக்கு காசோ விளம்பரமோ தேவையில்லை. காசு சேர்க்க செலவு செய்யும் நேரமும் உழைப்பும்தான் தேவை.


ஏழைகளுக்காக காசு செலவழிப்பது மட்டும்தான் சமூக சேவை என்ற விம்பம் பிழையானது. 


ஸகாத் ஸதகா என்பவற்றை எதற்காக செலவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் வரையறை செய்துள்ளது.  ஸதகா என்றுவிட்டு சீதன வீடு ஒன்றுக்காக எனது பொருளாரத்தை ஈகை செய்வது எனக்கு ஹராத்தை செய்த பாவத்தை மறுமைக்காக எழுதி வைத்துக்கொள்ளுமே தவிர நன்மை தராது. 


காசு கொடுப்பதுதான் சமூக சேவை என்றில்லை. சமூக சேவையில் உண்மையாக ஆர்வமுள்ளவர்கள் காசு செலவளிக்காமல் மிகப்பெரும் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். எல்லார் மனதிலும் ஆன்மீகத்தை விதைத்து விட்டாலே இங்கு பல சமூக அவலங்கள் தூர்ந்து இல்லாமலாகிவிடும். 


சமூக மாற்றம் குறித்த இந்த விடயங்களை சொன்னால், "கத்தி கொலை செய்யப் பயன்படும்; ஏற்றுக்கொள்!" என்று சொல்லிக் கொண்டு குர்ஆன் ஆயத்து ஒன்றை எடுத்து வந்து முரட்டு முஸ்லிம் ஒருவன் அடிக்க வருகிறான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.