போரும் வாழ்வும்!!
போர் என்பது தமிழ் மக்களாகிய எங்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒரு விடயம். போரிலிருந்து எங்களையோ எங்களில் இருந்து போரையோ பிரித்து விட முடியாது.
சிலர் நினைக்கிறார்கள், போர் என்றால் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த கடைசி யுத்தம் என.
அது, போரின் முடிவு காலம், சர்வதேசம் சேர்ந்து எமக்கு எழுதிய கொடியவிதி.
அது, சிற்றரசொன்றின் மணிமுடி, தரையில் வீழ்ந்த தருணம். அந்தச் சிற்றரசு, தனது மூன்று தசாப்த கால ஆட்சியில் கண்ட போர்கள் எத்தனை ....எத்தனை.....
தேவாலயங்களிலும் கோவில்களிலும் குவிந்து நின்ற போது, எமது மக்கள் கொத்துக் குண்டுகளினாலும் கொத்துக் கொத்தாகவும் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களின் கனவுகள் காவுகொள்ளப்பட்டன.
அவலம் எமக்கு ஆரம்ப புள்ளியாகத் தரப்பட்ட போது, நாங்கள் மௌனித்திருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எங்கள் வாழ்வியல் பறிக்கப்பட்டு, எங்கள் இருப்பு கேள்விகுறியானது. அதனால் தான், ஆயுதம் கையிலேறியது.
இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு விடயத்தை, கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, எங்கள் வாழ்வியல் அம்சங்களை, எங்கள் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்.
எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ எம்மால் சொல்லப்படுகிறவை எங்கோ ஒரு சின்ன மனதை அசைக்கும்.
அதில் தோன்றுகின்ற எண்ணங்களுக்கும் தாகங்களுக்கும் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக நிற்கும்....
காலம் வலை விரித்து பல காயங்களைத் தரும். அந்தக் காயங்களில் இருந்து நாம் அனுபவிக்கும் வலியை ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும், அது ஒவ்வொரு படைப்பாளிக்குமான கடமை. ஒவ்வொரு மக்களுக்குமான கடமை.
பிறப்பிற்கும் இறப்பிற்குமான வாழ்வில் இடைப்பட்ட தெரிவு நம் கையில் தான் உள்ளது.
அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நாங்கள் வரலாற்றில் பேசப்படுவோம்.
தமிழரசி.
கருத்துகள் இல்லை