ஆசிரியம்!!
ஆசிரியம் என்பது
அறப்பணி.
அதைச் சிறப்பாய் செய்வதுபெரும்பணி.
அன்றைய ஆசிரியர்
இன்றைய ஆசிரியர்
எனப் பார்த்தால்
வேறுபாடுகள் இங்கு
பலவாக மாறிடுதே.
கையிலே கம்பு,
கனிவும் கண்டிப்புமாக
அன்று.
கைபேசியுடனே
ஆசிரியர் கையேடு சுமந்து
இன்று.
ஆசிரியர் - மாணவர்கள்
இடைவெளி இருந்தது அன்று.
வெளிகள் நெருங்கமாச்சு,
மாணவர்கள் நண்பராச்சு.
மனநிலைகள் மாறியாச்சு
இன்று.
ஆசிரியப் பணிகளில்
கட்டாயம் வந்து விட
ஆசான்கள் மீதின்று
நம்பிக்கை குறைந்தாச்சு.
எளிய வாழ்வு
தொலைந்ததனால்
ஓடி உழைக்கும் நிலை ஆச்சு
கற்பித்தல் பணிகூட
கடைச்சரக்கு போலாச்சு.
அன்றைய ஆசான்கள்
அர்ப்பணிப்பு நிறைந்தவர்கள்.
இன்றோ அந்த நிலை
எதிர் நிலை ஆனாச்சு.
கல்வியை விற்றே
கார் வாங்கியோருண்டு.
கடமையை,
கடமைக்காய் செய்துவிட்டு
போவோரும் பலருண்டு.
'காசு வேண்டாம்
வந்து படி " என்றவர்கள்
அன்றைய ஆசான்கள்.
"காசிருந்தால் மட்டும் வகுப்பிற்கு வா"
என்கிறார்கள்
இன்றைய ஆசிரியர்கள்.
நாளொன்றுக்கு.
நூறென்று
கணக்குப் பார்த்தே
நகருது
உபாத்தியாயனின் நாட்கள்.
ஆசிரியம் இன்று
அலைக்கழியும் நிலைதான்.
விருதுக்காக சில பேர்
விரைந்து கற்றல் செய்வதுண்டு.
எண்ண மாற்றங்கள்
இயல்பாய் போனதால்
ஆசிரியர் நிலை
அவமதிப்பாய்
போவதுமுண்டு.
பிள்ளைக் கனிகளை
பித்தோடு பார்ப்பதால்
பெருமதிப்பிழந்து
நிற்போரும் உண்டு.
ஆசிரியர் இடமாற்றம்,
சம்பள உயர்வு,
ஏதோ ஒன்றுக்காய்
நித்தம் போராட்டம்.
சராசரி வாழ்வியலில்
ஆசிரியமும்
சேர்ந்ததனால்
தனித்துவம் கலைந்தாச்சு.
"உலகம் என்னிடம் வர
என் ஆசான்களே
காரணம்" என்று
மாவீரர் அலைக்ஸாண்டர்
ஆசிரியம் போற்றினார்.
இன்றைய மாணவர்கள்
இவ்வாறு போற்றுதல்
குறைநிலை
ஆனாச்சு.
இந்நிலை நீடித்தால்
காலக்கரைதலில்
ஏணிப்படிகளும்
ஏற்றம் குன்றலாம்.
அவனியில் ஆசிரியம்
அற்பமாய் மாறலாம்.
சிந்திப்போம்
சீர் செய்வோம்.
கோபிகை
கருத்துகள் இல்லை