சைரன் 108 - திரைப்பட விமர்சனம்!!



இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது சைரன் 108.

நடிகர் ஜெயம்ரவி நடுத்தரவயது  உருவத்தில் தோன்றியிருக்கும் இந்தத் திரைப்படம் பழிவாங்கல் கதையை அடிப்படையாகக் கொண்டது.


 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி வில்லன்களால் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை பெறுகிறார். சிறையில் நல்ல பெயரை எடுக்கும் ஜெயம் ரவி 2 வார பரோலில் வெளியில் வருகிறார். அவர் வெளிவந்த நேரம் அவரைச் சுற்றி கொலைகள் அரங்கேறுகின்றன. கொலையானவர்களுக்கும், ஜெயம்ரவிக்கும் என்ன தொடர்பு? சிறையில் நடந்த  மரணத்தால் ஏற்கெனவே கெட்ட பெயரை சம்பாதித்த காவல் அதிகாரி கீர்த்தி சுரேஷ் இந்த கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே சைரன் திரைப்படத்தின் கதை.

செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் திலகன்(ஜெயம் ரவி) பரோலில் வெளியே வருகிறார். பரோல் நேரத்தை பயன்படுத்தி தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்க நினைக்கிறார்.

இந்நிலையில் பரோல் நேரத்தில் சில பெரிய ஆட்களை கொலை செய்திருக்கிறாரோ திலகன் என போலீஸ் அதிகாரியான நந்தினிக்கு(கீர்த்தி சுரேஷ்) சந்தேகம் ஏற்படுகிறது. தற்போது திலகன் யாரையாவது கொலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி பரோல் நேரம் முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியது தான்.

ஹீரோ திலகனை ஆம்புலன்ஸ் டிரைவராக காட்டியிருப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட். திலகனின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மாற்றி மாற்றி காட்டிய விதம் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. பரோலில் வரும் திலகன் தன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது முன்னதாக திருமணம் முடிந்து அவரும், மனைவியும்(அனுபமா பரமேஸ்வரன்) சேர்ந்து வரும் காட்சியை காட்டுகிறார்கள்.


அதே போன்று சிறையில் இருந்து வந்து தன் மகளை திலகன் முதல் முறையாக பார்க்கும்போது அந்த சிறுமி பிறந்தபோது எடுத்த காட்சிகளை காட்டியுள்ளனர்.


கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற அப்பா திலகனை பார்க்க மறுக்கும் சிறுமி யுவினாவின் நடிப்பு சிறப்பு. அம்மாவாக வரும் துளசி ரசிகர்களை கவர்கிறார்.


தமிழ் சினிமாவில் பழிவாங்கல் கதைகளுக்கு பஞ்சமில்லை. வித்தியாச வித்தியாசமாக பல காட்சிகளைப் பார்த்திருந்தாலும் கதை என்பது ஒரே சாரம்சத்தை அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும். 


சைரன் திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது குடும்பத்தை நிலை குலையச் செய்த வில்லன்களை பழிவாங்குவாரா ஜெயம்ரவி? அதை எப்படி மாட்டிக் கொள்ளாமல் செய்கிறார் எனும் சஸ்பென்ஸை கூடுமானவரை காப்பாற்ற முயற்சித்திருக்கிறது சைரன். ஒட்டுமொத்த திரைப்படத்திற்குமான காட்சிகளைத் தாங்கும் பொறுப்பு நடிகர் ஜெயம்ரவி உடையது. அவரைச் சுற்றியே கதை இருப்பதால் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கட்டிப்போடும் பொறுப்பும், சுமையும் அவருக்கே உள்ளது. அதற்கேற்றார்போல் நன்றாக நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. தனது மகளை மறைந்திருந்து காணும் இடங்களில் கலங்கச் செய்யும் ஜெயம்ரவி வில்லன்களைப் பழிவாங்கும் இடங்களில் ரெளத்திரம் காட்டுகிறார். பல இடங்களில் பொறுமையான நிதானமான நடிப்பைக் கொடுத்து சென்றிருக்கிறார்.


ஜெயம் ரவிக்கு இணையாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். காவல்துறை அதிகாரி என்பதால் மிடுக்காகக் காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். இவர்களைத் தவிர யோகிபாபு, அனுபமா, சமுத்திரக்கனி, சச்சு என பலர் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாமல் பிளாஷ்பேக்கின் சில காட்சிகளில் மட்டும் வரும் அனுபமா கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷிடம் எகிறும் இடங்களிலும், சாதிப்பெருமை கொண்ட காவல்துறை உயரதிகாரியாகவும் சமுத்திரக்கனி சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயம் ரவியுடன் வரும் யோகிபாபி சிரிக்க வைக்கத் தவறுவதில்லை.


மனைவி, மகள் சென்டிமென்ட், பழிவாங்குவதல் ஆகியவற்றை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வோருக்கு சைரன் நிச்சயம் பிடிக்கும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.