ஈரத்தீ(கோபிகை) - பாகம் 27

 


கண்களைத் துடைத்தபடி,  ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டினேன். 


"மலரவன் அண்ணா இங்கதானே வீரச்சாவடைந்தார்?" 

சட்டென்று தேவமித்திரன் கேட்டதும் வேகமாக நிமிர்ந்து பார்த்தேன். 


"அதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? " 


"இருக்கு.... இருக்கு.... " என்று விட்டு, 


"நீ என்ன நினைக்கிறாய் சமர்,  நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டோம் என்றா?"


"அவை எல்லாம் மன ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கிற ஞாபகச்சுவடுகள்.... எப்போதுமே மறந்து விட முடியாத உன்னதமான உறவுகள்.... அவர்கள்... உன் அண்ணா... அக்கா... என்னுடைய அக்கா.... இதே போல இன்னும் எத்தனை எத்தனை மாவீரர்கள்... "






"உனக்கு தெரியுமா? மலரவன் அண்ணா போராடப்போனதால தான் அக்காவும் போராடப்போயிற்றா... அக்கா போன பிறகு உன்னுடைய அக்காவும் போயிற்றா... "


"தெரியும்... ஒரு பனிப்படலம் மாதிரி இந்த விசயங்கள் எனக்கு நினைவில இருக்கு... இந்திய இராணுவம் அமைதிப்படை என்று வந்து செய்த அட்டகாசங்கள் கொஞ்சமே.. ...சோதனை போட என்று வீடுகளுக்கு வந்து பொம்பிளைப் பிள்ளையளை மானபங்கம் செய்யிறவங்கள்... 


அக்காவையும்.... அறையில வச்சு இடுப்பில கிள்ளிஆய்க்கினை செய்தவங்கள்... தாங்க ஏலாமல் அக்கா கத்தி கூப்பாடு போட்டதிலை அம்மா கதவை உதைச்சு தள்ளிக்கொண்டு போய்த்தானே அக்காவை இழுத்துக் கொண்டு வந்தவா... 


அண்ணாவையும் அப்பாவையும் றக்கிலை ஏத்தி கோயிலடிக்கு கொண்டு போட்டாங்கள்... வந்த உடனே விசயத்தை அறிஞ்ச அண்ணா அப்பிடியே போராளி அண்ணாக்களோடை போயிற்றான்... 

அதுக்குப்பிறகு , கொஞ்சநாள் கழிச்சு இலக்கியா அக்கா போனவா.... "


"ஓம் சமர்.... அதுக்குப் பிறகு இன்னும் கொஞ்ச நாளிலை தமிழரசிஅக்காவும் போயிற்றா... "


" இனவிடுதலை நோக்கிய இவையளின்ரை தியாகம் எல்லாம் சாதாரணமானது இல்லை தானே... அது ஏன் எங்கட சில மக்களுக்கு புரியுது இல்லை... "


"நீ சொல்லுறது சரிதான் சமர்... முடிஞ்ச வரைக்கும் அவையளின்ரை கனவுகளை நாங்களும் கொண்டு போய் சேர்க்கவேணும்... அந்த இலட்சிய தாகங்கள் அணைஞ்சுபோககூடாது... வடிவங்கள் மாறுபடலாம்... எண்ணமும் சிந்தனையும் மாறாமல் இருந்தே ஆகவேணும்... "


தலையை ஆட்டியபடி பார்த்தேன்,  அகரனும் வண்ணமதியும் நாங்கள் பேசுவதை உற்று கேட்டுக்கொண்டிருந்தனர்.  அந்த பிஞ்சு மனங்களில் எங்களுடைய கதை,  நல்லதொரு விதை போட்டுவிட்டது என்பது புரிந்தது. 


சிறு புன்னகையோடு என்னைப் பார்த்த தேவமித்திரன்,  

"சமர்.. மாவீரர் தினம் வருது...போறாய்தானே,  அக்கா,  அண்ணா எந்த துயிலுமில்லம்? " என்று கேட்டார். 


"கனகபுரம்..... நீங்கள் விளக்கு ஏத்துறதில்லையோ... "


"உனக்கு தெரியுமே... அக்கா காணாமல்போனோர் தானே..."


" ஓமோம் தெரியும்... நீங்கள் ரெண்டாவது தரம் ஆஸ்பத்திரிக்கு வந்து போனபிறகு, தெரிஞ்சமாதிரி காட்டிக்கொள்ளாமல் வர்ணன் அண்ணாட்டை கேட்டனான்... "


 "பிறகென்ன...  சின்ன வயசில் இருந்த அக்கறை உனக்கு கொஞ்சமும் மாறேல்லை... ஆனால் நான் ஒவ்வொரு வருசமும் விளக்கு கொழுத்திறனான்... கூடப்பிறக்காத எத்தனையோ அண்ணா,  அக்காக்களை நினைச்சு கொழுத்துவன்... "


" 95 இல இடம்பெயர்ந்த பிறகு,  நீங்கள் முல்லைத்தீவு போட்டியளோ... நான் அதுக்குப்பிறகு காணேல்லை தானே... "


"ஓம் சமர்... நாங்கள்புதுக்குடியிருப்பபிலை இருந்தனாங்கள்... அங்கதான் சாதாரணதரப் பரீட்சை எழுதினனான்... நல்ல பெறுபேறு தான்... சட்டம் படிக்கவேணும் என்று தான் கலைப்பிரிவை தெரிவு செய்தனான்.. ...ஆனா... உயர்தரப் பரீட்சை முடிச்ச உடனே தேசக்கடமை செய்ய போயிற்றன்.. பிறகு தடுப்பில இருந்து வந்து தான் சட்டத்துறையிலை படிச்சனான்... "


எங்கள் பேச்சு தொடர்ந்துகொண்டிருக்க,  அகரனும் வண்ணமதியும் ஆழ்ந்து உறங்கிவிட்டனர். 

அகரனின் தலையை சரியாக இருக்கையில் சாய்த்து உறங்கவைத்துவிட்டு வண்ணமதியையும் மடி மீது சாய்த்துக்கொண்டே, தேவமித்திரனனிடம் அந்த கேள்வியைக் கேட்டேன். 


 "இவ்வளவு வருச இடைவெளியிலை எங்களைப்பற்றி நினைச்சனீங்களோ...? " தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்தன. 


தீ  தொடரும்... 














கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.