மூத்த பிரஜையிடம் மன்னிப்பு கேட்ட பொலீஸ் அதிகாரிகள்

 


மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட பிரஜை ஒருவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

கொட்வின் பெரேரா என்ற 81 வயதான சிரேஷ்ட பிரஜை ஒருவரிடமே மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.


மேலும், நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரருக்கும் பிரதிவாதிகளான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 3 பொலிஸ் அதிகாரிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கொட்வின் பெரேரா கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​வீதியொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளான ஒரு தொழிலாளி ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனையடுத்து, கொட்வின் பெரேராவை பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய கூண்டில் அடைத்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை இப்படித்தான் நடைமுறைப்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு அதிகாரிகள் எதிர்மறையான பதிலையே அளித்ததாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மனவேதனை அடைந்த கொட்வின் பெரேரா, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மனுதாரர் கொட்வின் பெரேரா பிரதிவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இணங்கியதையடுத்து, அந்த சமரசம் குறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு இன்று அழைக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரர் பெரேரா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேலும், நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோரின் பெயர்களை அழைத்த பின்னர், அவர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.


பொலிஸ் அதிகாரிகள் விஷேட சந்தர்ப்பங்களில் அணியும் 01 ஆம் இலக்க சீருடை அணிந்து உத்தியோகபூர்வ பதக்கங்கள் மற்றும் அணிகலன்களை அணிந்து இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தமை சிறப்பம்சமாகும்.

பிரதிவாதிகளுடன் சமரசம் செய்ய ஒப்புக்கொள்கிறீர்களா என்று மனுதாரரிடம் நீதிமன்றம் கேட்டதுடன் அவர் தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பதிலளித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் உரையாற்றிய நீதிபதி விஜித் கே மலல்கொட, எதிர்காலத்தில் இவ்வாறான தவறான செயல்களைச் செய்யக்கூடாது என பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.

நாட்டின் மூத்த குடிமகன் ஒருவருக்கு சுதந்திரமாக செயல்பட உரிமை உள்ளது என்பது தெரியாதா என்று கேட்ட நீதிபதி, மூத்த குடிமகன் ஒருவரை இப்படியா நடத்துவது என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கை முடித்துக் கொள்ள மனுதாரர் சம்மதித்துள்ளதால், வழக்கை முடித்துக் கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், இல்லாவிட்டால் மனுதாரரின் வயதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற செயல்களை மீண்டும் செய்ய வேண்டாம் என மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்பின், மூன்று பொலிஸ் அதிகாரிகளும் தனித்தனியாக மனுதாரர் பெரேரா முன் சென்று மண்டியிட்டு மன்னிப்பு கேட்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.