யாழில் கறுப்புக் கொடி போராட்டம்!


 இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டமொன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) முன்னெடுக்கவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேள் புனிதப் பிரகாஷ்  தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று(26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக் கொடிகளைத் தாங்கி நமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளோம்.

இந்திய மீனவர்களினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஆனால், இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டுவதை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்து வெளியிடுவது மனவேதனையை தருகிறது.

நாம் எமது கடலில் மீன் பிடிப்பதற்கு இந்திய அரசாங்கத்தை கேட்க வேண்டிய தேவை இல்லை அத்தோடு எமது கடலிலேயே இந்தியா மீனவர்களுக்கு தாரைவாத்துக் கொடுக்கவும் முடியாது.

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் சிலர்,  இலங்கை சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு அழுத்தம் வழங்கி வருகிறது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.  எமது கடல் இறைமை. எமக்கே சொந்தமான கடலை யாருக்கும் தாரை வார்க்க முடியாது.

ஆகவே, இதனை வலியுறுத்தி கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதோடு எமது போராட்டம் இலங்கை கடல் எல்லை வரை தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.