மோடி வழங்கிய தூத்துக்குடி முத்துகள்!!

 


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மைக்ரோ சொப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி அவருக்குத் தூத்துக்குடி முத்துகளைப் பரிசாக அளித்தார்.


இந்தியா வந்துள்ள உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசொப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியைச் சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு அனைவரையும் உள்ளடக்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தச் சந்திப்பின்போது தூத்துக்குடி முத்துகளை மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி வழங்கி உள்ளார். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாடு குதிரை பொம்மைகளையும் பிரதமர் மோடி பில் கேட்ஸுக்கு பரிசாக வழங்கினார்.


இருவருக்கும் இடையே நடந்த இந்தச் சந்திப்பு குறித்த வீடியோவும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சி குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, உலகெங்கும் உள்ள பிரதிநிதிகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சி குறித்து ஆர்வமாக உள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார்.


இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைப் பாராட்டிய பில் கேட்ஸ், இந்தியா தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அதில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குறிப்பாக 2023 ஜி20 உச்சி மாநாடு, காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது ஏ.ஐ தொழில்நுட்பம் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் இந்தி பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் பில் கேட்ஸிடம் பிரதமர் விளக்கினார்.


பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சிகளின் போது இந்தியா பின்தங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இருப்பினும், நான்காவது தொழில்துறை புரட்சி நடக்கும் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்கப் பலன்களைப் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.


ஏ.ஐ குறித்து பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏ.ஐ ஒரு மெஜிக் கருவி. அதனை நம்புவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சோம்பேறித்தனம் காரணமாக அதைப் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை. ஏ.ஐ உடன் போட்டி போட்டுக் கொண்டு இருந்தால் அதுவும் நமது திறமையை அதிகரிக்க உதவும்” என்றும் அவர் தெரிவித்தார்.


அதேபோல பில் கேட்ஸும் கூட ஏ.ஐ மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசினார். பில் கேட்ஸ் கூறுகையில், “ஏ.ஐ இன்னும் ஆரம்ப நாட்களில் இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்யும் திறன் ஏ.ஐக்கு இருக்கிறது. ஆனால், அதேநேரம் எல்லா வேலைகளையும் ஏ.ஐ இனால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏ.ஐ இற்கு அபரிமிதமான ஆற்றல் இருந்தபோதிலும், இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.