ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி-ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ!!

 


எமது மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை. இந்நாட்டில் தற்கொலை தாக்குதல்கள் நடந்து சரியாக 5 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட போதிலும் நாங்கள் இதுவரை உண்மையை அறிய முடியவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அவர் விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,


உயிர்ப்பு ஞாயிறு என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் மறை உண்மையும்,மையமும் ஆகும்.உயிர்த்தெழுந்த இறைவன் தம்முடைய உயிர்த்தெழுதலின் பின் சீடர்களுக்கு தோன்றிய போது அவர்களுக்கு கொடுத்த அதே அன்பையும், மகிழ்ச்சியையும் நமக்கு இன்று தருகிறார்.


இயேசு எப்போதும் எம்மோடும் எம் மத்தியில் இருப்பதையும்,நம்முடைய எல்லாத் தேவைகளிலும் அக்கரை கொள்வதையும் மீள் உறுதிப்படுத்த வருகிறார்.


நமது நாடு சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள வேளையில் இவ் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்.


எமது மக்கள் எதிர் கொள்ளும் பாரிய சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை. அதற்காக பாடு படுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.


எமது நேசத்திற்குறிய தாய் நாடு இதுபோன்ற இக்கட்டான ஒரு நிலையை இதற்கு முன் ஒரு போதும் அனுபவித்தது இல்லை.


இந்த நேரத்தில் எமக்கு தெய்வீக இறை தலையீடு தேவையாக உள்ளது.எனவே நாம் இருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து நம்மை விடுவிக்க இந்த ஈஸ்டர் காலத்தில் உயிர்த்த இயேசுவிடம் உருக்கமாக மன்றாடுவோம்.


இவ் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபடச் சென்றோர் மற்றும் வேறு இடங்களிலும் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலின் ஐந்து ஆண்டுகள் நிறைவை குறிக்கின்றது.


2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இத்தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, குறைந்தது 500 பேர் வரை காயமடைந்தனர்.


இந்த தற்கொலை தாக்குதல்கள் நடந்து சரியாக 5 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க பல்வேறு குழுக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட போதிலும் நாங்கள் இதுவரை உண்மையை அறிய முடியவில்லை.


ஈஸ்டர் அனுபவம் எதிர் காலம் மட்டில் உள்ள நிச்சயமற்ற நிலையில் நம்பிக்கையளிக்கிறது.தாய் நாட்டின் இந்த இருள் சூழ் நேரத்தில் உயிர்த்த இயேசுவின் ஒளியால் நாம் அறிவொளி பெறுவோம்.


இறைவன் நம்மை ஆட்கொள்ள மன்றாடுவோம்.உங்கள் அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் மகிழ்சியையும்,அமைதியையும் ஆசித்து நிற்கிறேன்.என மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர் லெம்பட்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.