சிரியாவில் 42 பேர் உயிரிழப்பு!
சிரியாவின் வட கிழக்கு மாகாணமான அலெப்போ மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் பெரும்பாலானவர்கள் இராணுவ வீரர்கள் என்று செய்தி நிறுவனங்கள் மற்றும் போர் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இதில் லெபனான் போராட்டக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் ஆறு உறுப்பினர்களும் கொல்லப்பட்டிருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அலெப்போவில் பல இடங்களையும் இலக்கு வைத்து நேற்று (29) அதிகாலையில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அலெப்போ சர்வதேச விமானநிலையத்திற்கு அருகிலுள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பாரிய வெடிப்புகள் நிகழ்ந்ததாக போர் கண்காணிப்புக் குழு ஒன்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை