34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு விமர்சனம்!!


  எழுதியவர்  - நா.  யோகேந்திரநாதன் 


படைப்பாளர்கள் சமூக நுண்துணிக்கைகளில் இருந்தே படைப்புகளை உருவாக்குகின்றனர். தாம் வாழ்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இயங்கியலை நாம் வாழாத காலத்தில் பார்ப்பது எழுத்துகளில் வழியேதான். 


இலக்கியங்கள் மனித தொடர்புகளைக் கொண்டு மிளிரும்போது அவை கவர்ச்சியும் சுவையும் சிந்திக்க வைக்கின்ற  தன்மையும் தருபவையாக அமைகின்றன. குடாரப்பு தரையிறக்கமானது உலகம் வியந்து பார்த்த ஒரு போராட்ட களம் என்பது   அனைவரும் அறிந்த ஒன்று தான். 


அந்த பாத்திர படைப்புகளை தன் விரல்களில் நர்த்தனத்தின் மூலம் நம்முன் நடமாட விட்டிருக்கிறார் முது பெரும் படைப்பாளியான எழுத்தாளர் யோகேந்திரநாதன் ஐயா. வீரமும் விவேகமும் சேர்ந்த ஒரு களமுனைக் காவியமாக தன்னை நிலைநிறுத்துகிறது இந்த நாவல்.  


விசித்திரமான மனித உணர்வுகளை நாம் பார்க்கின்ற இக்காலத்தில்,  விடுதலை கோரிய  ஒரு இனத்தின் பிள்ளைகள் வீறுகொண்டெழுந்து அக்கினிக் பிளம்புகளாக சமராடிய வீரத்தின் சாட்சியம் வரிக்கு வரி தன்னை வெளிப்படுத்துகிறது.  


கடலாடிய வீரமும் கானகத்தின் துணிவும் மருத நிலத்தின் தைரியமும்,  தான் வஞ்சிக்கப்பட்ட  வாழ்வியல் கதைக்காக நீதி கேட்டு,  துப்பாக்கி வழியே சம்மன் அனுப்புகிற ஒரு வரலாற்றின் ஆகச்சிறந்த வலிமையான  நாட்களை தன் பேனாமுனையில் அச்சுப்பிசகாமல்  வடித்திருக்கிறார்.


சங்க இலக்கியங்களில் வெளிப்படும், புறநானூற்று வீரத்தின் நிஜங்களை 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நிரூபித்துள்ளது. 


உப்புக்கடலும் கண்டல் காடுகளும் சொல்லுகின்ற வீரக்கதைகள் தமிழினத்தின் வலியின், வலிமையின் அத்தாட்சிப் பத்திரங்களாகும். 


சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட ஒரு  இனம், தன் இருப்பிற்காக வயது கடந்து வாழ்க்கை நிலை கடந்து போராடும் என்பதற்கு  பரியாரியாரும் அவரது மனைவியும் சாட்சியாகின்றனர். 


வாமனன் - அரவந்தி இருவரினதும் வீரமும் காதலும் இணைந்த மனப்போராட்டம் தன்னை வெளிப்படுத்துகிற கள யதார்த்தம்  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் பார்த்துக்கடந்த நிதரர்சனமேயாகும். 


ஆழிக்குமரனின் கடலோடிய அனுபவ அறிவை விபரித்த விதம் வாசகர்களையும் வியக்கவைக்கிறது. 


புனைவுக்கும் புனைவல்லாத இலக்கியங்களுக்குமிடையில் தன்னை ஒரு   தனிப்படைப்பாக நிறுவியிருக்கும் இந்நூல் எமது அடுத்த சந்ததி அறிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான காலத்தடம். 


இளங்கோவும் திரிபுரசுந்தரியும் கபிலனும் அன்பனும் விஷ்வனும் இன்னும் பலரும் களப்பாய்ச்சலை வெற்றி கொள்ள பகத்சிங்கின் நுட்பமான நூதனமான போரியல் உத்தியே காரணமாகிறது.


காதலும் வீரமும் ஒன்றாக கொண்ட பெண்ணாக சரசுவும் அவளுடைய காதலையும் மண் மீதான நேசத்தையும் சம தராசில் சுமக்கிற வீரனாக இளங்கோவையும் மிக. அற்புதமான பாத்திரப்படைப்புகளாக காட்டியிருக்கிறார். எத்தனையோ தீரம் மிக்க களங்களை எம்மவர்கள் கண்டுவிட்டார்களெனினும் அவை எல்லாம் எம்முன் வடிவம் கோர்த்து வார்க்கப்படவில்லை. 


காலங்கடந்த ஒரு வீரக்கதையின் சொற்சித்திரமாக இந்நூல் பேசப்படும் என்பதில் ஐயமேதுமில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.