தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக முற்றவெளியில்!
ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக முற்றவெளியில்!!( நிலாந்தன் எழுதிய மனதை நெருடும் கட்டுரையின் ஒரு பகுதி
விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும் ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?
15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன.
பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன.
ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது.
ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.
குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன.
சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது.
சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது.
அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான்.
கருத்துகள் இல்லை