போராட்டம் எப்போதும் நிகழும்!!


 வெண் குருதியணுக்களில் இருந்தும்

சொற்களைப் படைத்தல் அவசியமாய் இருக்கிறது

எதிர்க்கும் சக்திமிக்க குரல்கள்

என்னிலிருந்து எழவேண்டும்


எனது நெஞ்செலும்புகள் புடைக்கும் போது

அவை உச்சரிக்கும் வார்த்தைகள்

"போராட்டம் எப்போதும் நிகழும் "


சீராக இருப்பதனால் சூரியன் மனம் குழம்பிக் கொள்வதில்லை

வெளிர் மேகங்களுக்கு ஆயிரமாயிரம்

நிறநினைவுகள் பரிசளிக்கிறது


பர்வதங்களைத் துருவி எடுத்த

பனிச்சீவல்களை நாம் தியானித்தால்

அவைகளும் உச்சரிக்கும்

"போராட்டம் எப்போதும் நிகழும்"


சமயவாதிகளின் தராசில் "வெறி"

நடுமுள்ளாக இருக்கையில்

சமத்துவத் தட்டு நடுங்கும்

அநீதிகளை நிறுத்துக் கட்டுவார்கள்


ஆறுகள் தனது பாதையின் ரேகைகளை

நீரின்றி நிர்வாணமாய்

காட்டும் காலத்தைப் படைத்து விட்டார்கள்


பூமியின் உள்ளழகை

இலட்சக்கணக்கான உயிர்களை

மூதாதையர்களின் ஞானத்தை

மந்திர சஞ்சீவி மூலிகைகளின் புலத்தை

மரங்களின் குரல்களை

ஒடுக்கி விட்டார்கள்


ஒடுங்கிய வெளியில்

செயற்கை நிலவினை நிறுவுவது கூட

திட்டமாகலாம்


ஏமாற்றத்தின் எத்தனையாவது அடுக்கும்

மொழிபெயர்க்க முடியாதவை


நாம் நாமாக வாழமுடியாத

இயக்கத் தடை "ஒடுக்குதல்" எனும்

நிறுத்துக் கட்டிய இரு தட்டுகளின் இருந்தும் உருவாகிறது


எவ்விடத்தும் எவ்விடத்தும்

யாத்து அரவணைக்கும்

இயற்கையின் கரங்களை

இரத்தச் சக்கரத்தில் சுழல விடுகிறது காலம்


இனியென்ன

"போராட்டம் எப்போதும் நிகழும்"


தளிரை சருகாகப் பரிணமிக்கும் வரை

பயணத்தை சம்மதிக்காதவர்களிடம்

உரக்கப் பேசி நியாயப்படுத்த

அன்பிற்கு மேல் என்ன இருக்கிறது

மரங்களும் இதைத்தானே பேசின


Composed by - Thenmozhi Das

5.9.2019

2.29 pm

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.