தொல்லியல் - பண்பாட்டுப் படுகொலைகளைக் கண்டித்து யாழ் பல்கலையில் போராட்டம்.!📸🎦
தொல்லியற் போர்வையில் பண்பாட்டு அழிப்பினையும் ஆக்கிரமிப்பினையும் முன்னெடுத்து மேற்கொள்ளப்படும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தினைஉடன்நிறுத்தவும் வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகத்தின் ஆள்புல ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 19.03.2024 (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் கோவிலில் கடந்த 08.03.2024 (வெள்ளிக்கிழமை) சிவராத்திரி தினத்தன்று சிறிலங்கா காவல் துறையினால் வழிபாடாற்றிக் கொண்டிருந்த மக்கள் தொடர் அச்சுறுத்தலுக்கும் வழிபாட்டு உரிமை மறுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததோடு, தொல்பொருட்களை சேதப்படுத்தினர் எனும் பொய்க் குற்றச்சாட்டில் 08 பொதுமக்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர். மேலும் மக்கள் தாகத்திற்கு அருந்துவதற்காக கொண்டு சென்ற குடிநீர்களைக் கூட பறித்து ஊற்றி சிறிலங்கா காவல் துறை காண்டுமிராண்டித்தனமாகச் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சூழலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு புறம் நல்லிணக்கப் பேச்சு மறுபுறம் ஆக்கிரமிப்பு, தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, ஈழம் மற்றுமொரு காசா , தமிழர் தாயகத்தின் ஆள்புல ஒருமைப்பாட்டை உறுதிசெய், வார்த்தைகளில் வேண்டாம் நல்லிணக்கம், மண் துறந்த புத்தனுக்கு மண் மீது ஆசையா, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், சிங்களமயமாக்கம் சிறிலங்காவின் தேசியக் கொள்கையா, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை உடன்நிறுத்து, வெடுக்குநாறி எங்கள் சொத்து, புத்தர் ஆக்கிரமிப்பின் சின்னமா போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டதோடு, பதாதைகள் மாணவர்கள் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Stop_CulturalGenocide | #Stop_StructuralGenocide | #Right_to_Worship | #Ensure_Territoroal_Intergrity | #Stop_Sinhalization | #End_the_Occupation | #Eelam_another_Gaza | #Stop_TamilGenocide
கருத்துகள் இல்லை