வெருகலில் நடைபெற்றது போரா? துரோகம் நிறைந்த படுகொலையா?


கருணா தன்னைக் காத்துக் கொள்ள கிழக்கு மையவாதத்தை முன்வைத்து தொடங்கிய ஆட்டம் , அதற்காக பலிகொடுக்கப்பட்ட கருணா தரப்பு போராளிகள், இதன் மூலம் யாழ் மையவாத சிந்தனை இருப்பதாக்க்கூறி , அதற்கு நிகராக கிழக்கு மையவாதத்தை முன்வைத்து, கிழக்கைச் சேர்ந்த போராளிகளை கருணாவும் - பிள்ளையானும் பலி கொடுத்தனர். 


தற்போது கருணாவும், பிள்ளையானும் புனிதர்கள். இவர்களுக்காக வெருகல் ஆற்றங்கரையில் போரிட்டு இறந்தவர்கள் கிழக்கு பிரிவினைவாத மாவீரர்கள்.  இருந்தும் கருணா சில ஆண்டுகளாக இந்த மாவீரர்களின் நினைவு நாளை கண்டுகொள்ளவில்லை.

 பிள்ளையான் சில பொது அமைப்புகளின் பெயரைக்கூறி தனது அரசியல் ஆதாயத்திற்காக நினைவுகூர்ந்து வருகிறார். 


மகாபாரதப்போரில் மோதிக்கொண்ட பாண்டவர்களும், கெளரவர்களும் கூட சகோதரர்களே!  இருந்தும் குருஷேத்திரத்தில் யுத்தம் என்று நிலை நிறுத்தப்பட்டபின் இருதரப்பினரும் பலங்கொண்டு வீரத்துடன் போரிட்டு மடிந்தனரே தவிர,  துரியோதணோ அல்லது வீஷ்மரோ  தனது படை வீர்ர்களை தனியே போரிட விட்டுவிட்டு ஓடித் தப்பவில்லை. 


ஆனால் இங்கு போருக்குக் காரணமான கருணாவும் ,அவரின் நெருங்கிய சகாவுமாகிய பிள்ளையானும்  வெருகலில் கிழக்குமாகாண போராளிகள் கொல்லப்படும்போது குளிரூட்டப்பட்ட வாகனத்தில் கொழும்புக்குத் தப்பிச் சென்றுகொண்டிருந்தனர்.  ஆக இங்கு யுத்தம் கீழ்நிலைப் போராளிகளுக்கே தவிர  தளபதிகளுக்கல்ல.  


மகாபாரதத்தில் ஓரிடத்தில் அருச்சுனன் கிருஷ்னரிடம், எனக்கெதிராக ஆயுதம் தாங்கி நிற்பது எனது சகோதரர்கள். அவர்களுக்கெதிராக நான் எவ்வாறு போரிடுவேன் என்று கேட்கின்றான். உன் எதிரில் ஆயுதம்தாங்கி நிற்பது உன் உறவுகள்அல்ல. அவர்கள் அனைவரும் இப்போது உனது எதிரிகள்!  அவர்களை வதைப்பதே தர்மம் என அருச்சுணருக்கு எடுத்துரைக்கிறார் கிருஷ்ண பகவான். மகாபாரத யுத்தத்தின் பின்னர், குருஷேத்திரத்தில் நடைபெற்றது சகோதரப்படுகொலை என்று யாரும் கூறவில்லை. அவ்வாறு கூறி கெளரவர்களின் வீரத்தினை அவர்கள் இழிவுபடுத்தவிரும்பவில்லை. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்பதே எமது வழக்கம்.  


இங்கு வெருகல் போரினைத் தவிர்க்க கருணா எதிர்த்தரப்புடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியதாகத் தெரியவில்லை! ஆக இவர்களிடம் எதிர்த்தரப்பை போரில் வென்று கிழக்கை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கவி்ல்லை. 


எல்லாம் கிழக்கு மாகாண மக்களை நம்பவைக்க இவர்களால் போடப்பட்ட நாடகம்.  கிழக்கை மீட்க போரிட்டு மரணமடைந்ததாக காட்ட ஏதுமறியாத சிறார்கள் வெருகல் ஆற்றங்கரையோரமாக திட்டமிட்டு நிறுத்தப்பட்டு எதிரிகளுக்கு  இச்சிறார்களை கருணாவும், பிள்ளையானும் இரையாக்கினர். 


இந்த நாடகம் இன்று வரை ஒவ்வொரு வருடமும்  அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண மக்களின் தலையின் மேல் மிளகாய் அரைக்க இவர்கள் கடந்த 2004 மார்ச் மாதத்திலேயே ஆரம்பித்துவிட்டனர்.  யாழ்ப்பாணி கெட்டவன். எங்களை அடக்கி ஆழ்கிறான் என்று கட்டுக்கதை அவிழ்த்துவிட்டு கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகின்றது. 


இந்த 18 வருடங்களில் ஒரு தடவை கூட அரசு தமிழர்கள் மேல் மேற்கொண்ட கொலைகள் , அடக்குமுறைகள் கருணாவினதும், பிள்ளையானினதும் கண்ணுக்குத் தெரியவில்லை. 


ஆக கிழக்கு  மீட்பவர்களின் தற்போதைய மகா எதிரி யாழ்ப்பாணத்தாரே தவிர,  சிங்கள பேரினவாத அரசல்ல !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.