ஈழத்து தாயின் ஆசை!!

 


இப்போது நான் பதினெட்டாவது வீட்டில் இருக்கிறேன் என்கிறாள்

அந்த முதிய ஈழ தமிழ் பெண்


1990ல் போரில் ஊர் ஆக்கிரமிக்கபட்டபோது

அவள் தன் வீட்டை  இழந்தாள்


இப்போது அவள் பற்கள் விழுந்து விட்டன

அதனால் சொற்கள் கொஞ்சம் பிசுறு கின்றன


முகத்திலும் கைகளிலும்

சுருக்கங்கள்

இந்த முகத்துடன்

அவள் தன் வீட்டை இழந்த நாளில் இருக்க வில்லை 


எல்லா மனிதர்களுக்கும் இறுதி ஆசை உண்டு

தன் உயிர் சொந்த வீட்டில் தான் பிரிய வேண்டுமென


எல்லா பிணங்களுக்கும் ஆசை உண்டு

தான்

தன் ஊர் இடுக்காட்டில்

தன் சொந்த பந்தங்களுக்கு அருகில்

புதைக்க பட வேண்டும் என


இந்த ஆசைகளுக்கு இந்த முதிய தமிழ் பெண்ணும் விதி விலக்கல்ல


நினைத்து பார்க்கிறேன் அவளுடைய அந்த பதினேழு வீடுகள் பற்றி

சில வேளை அவள் விரும்பியோ விரும்பாமலோ

பதினேழு விதமான வாழ்க்கை

வாழ வேண்டியும் இருந்திருக்கும்


எல்லா போர் அகதிகளும் நினைப்பது 

ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று

34ஆண்டுகள்

அவள் தன் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியவில்லை


ஆக்கிரப்பாளர்களே

நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் இருக்கிறீர்களா

ஆம் என்றால் மிக்க சந்தோசம்


நீங்கள் அறிவீர்கள்

மூன்று நாட்கள் இரவில் வீட்டில் வாழும்

சங்கடம்

30ஆண்டுக்கு மேல்

தன் சொந்த முற்றத்துக்கு

திரும்ப முடியாதவரின் வலியை

உணர முடிகிறதா


அவளின் பதினெட்டு வீடுகள்

என்ற வார்த்தை

என்னையும்

மீண்டும் எங்கோ எங்கெங்கோ

காடு மேடு பதுங்கு குழி

வீடற்ற மழை நாள்

உதடு வறண்ட பயணம் 

உறவற்ற பிணம் என அலைக்கிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.